சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
இதனால், 7ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். காற்றின் வேகம் சற்றே உயர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 8ம் தேதி இரவிலிருந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். காற்றின் வேகம் மேலும் உயர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 10ம் தேதி முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் 7ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் திராவிட மாடல்: முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கக் கூறி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் அரசியல் கட்சியினர், சமூக வலைதளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் அவதூறுகளை முறியடிக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி வரும் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் ஆயிரத்து 222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. மே 7ஆம் தேதி சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், நான் உரையாற்ற உள்ளேன்.
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியுள்ளது. இருளை விரட்டிய இரண்டாண்டு கால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை – பாட்னா ஐகோர்ட் உத்தரவு
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, ‘சமத்துவத்துக்கான இளைஞர்கள்’ என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோத்தகி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.
நடிகர் மனோபாலா உடல் தகனம்
பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா (வயது 69) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. மனோபாலாவின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் மனோபாலாவின் உடல் இன்று வளசரவாக்கம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவருடைய மகன் தங்களது குடும்ப வழக்கப்படி அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். இதையடுத்து தற்போது நடிகர் மனோபாலாவின் உடல் அங்குள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மனோபாலா சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள மரும்பூர். மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.