No menu items!

சுந்தர சோழனுக்கு பிறகு ஆதித்த கரிகாலன் ஆட்சி செய்தார் – முனைவர் சுபாஷினி சொல்லும் புதுத் தகவல்

சுந்தர சோழனுக்கு பிறகு ஆதித்த கரிகாலன் ஆட்சி செய்தார் – முனைவர் சுபாஷினி சொல்லும் புதுத் தகவல்

ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு சர்ச்சை ‘பொன்னியின் செல்வன் – 2’ படத்திலும் தொடர்கிறது. இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு முனைவர் சுபாஷினி அளித்த நேர்காணல் இங்கே.

ஆனைமங்கலம் செப்பேடுகளை ஆய்வு செய்து ‘ராஜராஜனின் கொடை’ என்ற நூலை நீங்கள் எழுதியுள்ளீர்கள். ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மற்றும் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனடிப்படையில் கேட்கிறோம்… நாவலும் சரி, திரைப்படமும் சரி எந்தளவு வரலாற்று உண்மைகளுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று கருதுகிறீர்கள்?

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இரண்டு முறை படித்துள்ளேன். பல முறை ஆடியோவாக கேட்டுள்ளேன். சுவாரஸ்யமான நாவல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், வரலாறு என்று பார்த்தால் 20 சதவிகிதம்கூட அதில் உண்மை இருக்காது. நந்தினி என்றொருவர் உண்மையில் இருந்ததில்லை. கல்கி அவரை கற்பனையாக உருவாக்கி, ஆதித்த கரிகாலனுடனும் பழுவேட்டரையருடனும் தொடர்புபடுத்தியுள்ளார். இப்படி நிறைய சொல்ல முடியும்.

மணிரத்னம் இயக்கத்தில் படமாக வெளிவந்துள்ள நிலையில், இப்போது அதிகம் பேசப்படும் விஷயமாக இருப்பது, ஆதித்த கரிகாலன் கொலைதான். ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதாக கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இந்தப் படத்தில் அவர் காதலுக்காக தற்கொலை செய்துகொண்டார் என காட்டுவது சர்ச்சையாகியுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆதித்த கரிகாலன் காதலுக்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகளை நான் ஆய்வு செய்துள்ளேன். இந்த செப்பேடுகள் ராஜராஜன் மகன் ராஜேந்திரன் காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு வரி, ‘சுந்தர சோழனுக்கு பிறகு சுரியனைப் போன்ற முகம் கொண்ட (ஆதித்த கரிகாலன்) ஆட்சி செய்தான். அவனுக்கு பிறகு உத்தம சோழன் ஆட்சி செய்தான்’ என்றே வருகிறது. ஒருவேளை அவர் ஒரு பகுதிக்கு சிற்றரசராக கூட இருந்திருக்கலாம். முனைவர் பத்மாவதி போன்ற வரலாற்று ஆசிரியர்களிடம் இதைக் குறிப்பிட்டு, சோழர்கள் கல்வெட்டுகளை எல்லாம் மீள் வாசிப்பு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

subashini thf
முனைவர் க. சுபாஷினி

ஆதித்த கரிகாலன் கொலையை மூன்று பிராமணர்கள்தான் செய்தார்கள் என்பதற்கு காட்டுமன்னார் கோயில் கல்வெட்டு ஆதாரமாக உள்ளது. ஆதித்த கரிகாலன் ஆட்சியில் அவர்களுக்கு ஏதோ பாதிப்பு என்பதால் அந்த கொலையை அவர்கள் செய்திருக்க வேண்டும். ஆதித்த கரிகாலன் தம்பி ராஜராஜன் ஆட்சிக்கு வந்தபின்னர், அந்த கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளான்.

உண்மை இப்படியிருக்க இவர்கள் அவன் தற்கொலை செய்துகொண்டான் என படம் எடுத்துள்ளார்கள். ஆதித்த கரிகாலன் மாபெரும் வீரன். எத்தனையோ வெற்றிகளை கொண்டு வந்தவன். அப்படிப்பட்டவனை உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவனாக, காதலுக்காக தற்கொலை செய்துகொண்டவனாக காட்டுவது, வரலாற்றில் அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

ஆனால், நாவலும் திரைப்படமும் வரலாறு என்று எங்கும் சொல்லப்படவில்லை; கற்பனைக் கதைதான். அதில் ஏன் உண்மையை தேடுகிறீர்கள் என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?

வரலாறு இல்லை, கற்பனைக் கதைதான் என்றால் ஏன் ‘பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைக்கிறார்கள். சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என வரலாற்றில் உள்ள உண்மையான பெயர்களை பாத்திரங்களுக்கு ஏன் சூட்டுகிறார்கள்? மாதவன், கேசவன் என ஏதோவொரு பெயர் வைத்திருக்க வேண்டியதுதானே. இதுபோல் எங்கள் குடும்பத்தின் கதையை எடுத்துக்கொண்டு அதற்குள் வேறு ஒரு கதையை திணித்தால், எங்கள் தாத்தா ஒரு பெண் மீதான காதலால் தற்கொலை செய்துகொண்டார் என சேர்த்தால், ஏற்றுக்கொள்ள முடியுமா?

இரண்டு தினங்களுக்கு முன்னால் மதுரையில் ஒரு போஸ்டர் பார்த்தேன். ‘நந்தினி நீங்கள் பாண்டியர்களுக்காக ஆதித்த கரிகால சோழனை வீழ்த்துவிட்டு வந்தவர்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள். நந்தினி என்பவர் உண்மையில் வாழ்ந்ததாக நம்பும் மூடர்களாக இங்கு மக்களை திரைபடம் மாற்றுகிறது. மேலும், இரண்டு பகுதிகளுக்கு இடையே இல்லாத பகையை உருவாக்குகிறது. எனவேதான், வரலாற்றை சிதைக்கக்கூடாது; இல்லாத விஷயங்களை கற்பனையாக அதில் சேர்க்கக்கூடாது என்று சொல்கிறோம்.

ராஜராஜன் மனைவி, அதாவது ராஜேந்திர சோழன் தாயார் வரலாற்றில் எப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை வகித்தவர்? ஆனால், இந்தப் படத்தில் அவரை கூத்தாடுபவராக காட்டுகிறார்கள். அதுபோல் வந்தியதேவனை காட்டிய விதமும் மிகவும் வருத்தம் தந்தது. அரசியல் தந்திரமும் வீரமும் கொண்ட அவரை விளையாட்டு பிள்ளையாக இந்தப் படத்தில் காட்டுகிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் இது எல்லாமே கண்டிக்கதக்க ஒன்று.

சேர, சோழ, பாண்டியர்கள் பரம்பரை நாங்கள்தான் என்று பல்வேறு சாதியினர் உரிமை கொண்டாடி வருகிறார்கள். இந்த பிரச்சினையே தீராத நிலையில் மணிரத்னம் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் இருவருக்கும் பூணூல் அணிவித்துள்ளார். இது சரிதானா?

நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோல் முதல் பாகத்தில் சேந்தன் அமுதனுக்கு பூணூல் போட்டு அவரை ஒரு பக்தி பழமாக, கோயில் குருக்கள் போல் காட்டுவார்கள். ஆனால், கல்கி அவரை சைவ சமயத்தை சேர்ந்தவராகத்தான் காட்டியிருப்பார். இதுபோல் பல தவறுகள் கொண்ட படம் இது. வரலாற்று சம்பவங்களை திரைப்படமாக எடுப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

சோழர்கள் பரம்பரை நாங்கள்தான் என்று யாரும் உரிமைகோர முடியாது. ஏனெனில், அன்றைய காலத்தில் அரசர்களுக்கு அரண்மனையிலேயே 3-4 மனைவிகள் இருப்பார்கள் என்றால், போகும் ஊர்களில் எல்லாம் சேர்த்து 60 – 70 மனைவிகள் இருப்பார்கள். அன்று அது சாதாரணமாக இருந்தது. எனவே, நாங்கள் மட்டும்தான் அரசரின் ஜீன் என்று ஒரு சாரார் மட்டும் உரிமைகோருவது சரியாக இருக்காது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...