மூன்றாவது நாளாக ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு அரசியலை சூடாக்கியிருக்கிறது.
ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடத்தப்படும் வருமானவரி சோதனை எதற்காக தமிழ்நாட்டு அரசியலை சூடாக்க வேண்டும்?
காரணம் இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கும் திமுகவின் முக்கிய தலைவர்களுக்கும் – குறிப்பாக முதல்வர் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்பு DMK Files என்று வீடியோ வெளியிட்ட தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்களை ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அவ்வப்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் அரசியல் பிரமுகர்களையும் தொடர்புப்படுத்திப் பேசப்படுவது உண்டு. இந்தப் பேச்சுக்கள் சில நேரங்களில் உண்மையாகவும் இருந்திருக்கின்றன.
அது போன்ற ஒரு குற்றச்சாட்டில் ஜி ஸ்கொயர் நிறுவனம் இப்போது சிக்கியிருக்கிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ரிஷிமூலத்தை அறிய வேண்டுமென்றால் திருப்பூர் செல்ல வேண்டும். அங்கு 1990களில் பேபி எலக்ட்ரானிக்ஸ் என்ற புகழ்பெற்ற கடை இருந்தது. டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களை விற்கும் கடை. அந்தக் கடையின் உரிமையாளர் ராமஜெயம் என்கிற பாலா. சின்னக் கடையாக ஆரம்பிக்கப்பட்டது மெல்ல விரிவாக்கப்பட்டு கிளைகளுடன் செயல்படத் துவங்கியது. பொருட்களை மொத்தமாக வாங்குவது. மொத்தமாக வாங்கும்போது விலை குறைவாகப் பொருட்கள் கிடைக்கும். அந்தப் பொருட்களைக் குறைந்த விலையில் குறைந்த லாபத்தில் விற்பது. குறைந்த லாபத்தில் அதிகப் பொருட்களை விற்கும்போது அதற்கான லாபம் அதிகமாக இருக்கும். ரொக்கமாக மட்டுமில்லாமல் கடன் வசதிகளுடனும் பொருட்கள் விற்கப்படும். வீட்டுக்கே டெலிவரி என்ற வசதியையும் திருப்பூர் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். வசந்த் அண்ட் கோ, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளின் அடிப்படைதான். அதைத்தான் ராமஜெயமும் செயல்படுத்தினார். மிகப் பெரிய விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஈர்ப்பது அவருடைய ஸ்டைல்.
இப்படி திருப்பூரில் தொடங்கிய பேபி எலக்ரானிக்ஸ் கோவைக்கும் வந்தது. இடையே சில தொழில் நஷ்டங்கள். எல்லாவற்றையும் சமாளித்து பேபி எலக்ட்ரானிக்ஸை நடத்தி வந்தார் ராமஜெயம்.
2012ல் ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்குள் வருகிறார். மொத்தமாக நிலங்களை வாங்கி தனித் தனி பிளாட்டுகளாக விற்பது. அதில் லாபம் பார்க்கிறார். அதிலும் சிக்கல்கள், புகார்கள். தொழில் அத்தனை லாபகரமாக இருக்கவில்லை.
தமிழ்நாட்டில் பல தொழிலதிபர்கள் இது போன்றுதான் வளர்ந்திருப்பார்கள். சிக்கல்களில் சிக்கியிருப்பார்கள். மீண்டிருப்பார்கள்.
அவர்களுக்கும் பாலா எனப்படும் ராமஜெயத்துக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இவருக்கு அரசியல் தொடர்புகள் கிடைக்கின்றன. அதன்பின் அவர் வாழ்க்கை வளமாகிறது.
அவருடைய முக்கிய அரசியல் தொடர்பு அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ, மோகனும் அவரது மகன் கார்த்திக்கும் என்று கூறப்படுகிறது. அந்த தொடர்புகளால்தான் ஜி ஸ்கொயரில் வருமானவரித் துறை சோதனை நடைபெறும்போது எம்.எல்.ஏ. மோகன் தொடர்பான இடங்களிலும் நடைபெறுகிறது. அண்ணாநகர் கார்த்திக் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று அறியப்படுவதால் திமுகவுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பிரமாண்ட வளர்ச்சி தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதை ஜி ஸ்கொயர் மறுத்துள்ளது. தங்களுக்கும் திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறது.
கடந்த 15 நாட்களாக திமுக அரசுக்குத் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 14ல் அண்ணாமலை, திமுக மீது சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் புகார்களை பவர் பாயிண்டில் விவரித்தார். அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக ஆடியோக்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் 12 மணி நேர வேலை, திருமணக் கூடங்களில் மது என்ற சர்ச்சைகள். இந்த தொடர் தாக்குதல்களைத் திமுக எதிர்பார்த்திருக்காது.
ஏப்ரல் 14 அண்ணாமலையின் DMK Files வீடியோவுக்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மறுப்பு கொடுத்தார். திமுகவினர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து நடந்த எந்த சர்ச்சைக்கும் திமுகவிடமிருந்து அதிகாரப்பூர்வமான மறுப்புகள் வரவில்லை.
தான் பேசியதாக வெளிவந்த ஆடியோக்களுக்கு முதலில் ட்விட்டரில் மறுப்பு அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் இன்று டிவிட்டரில் வீடியோ வெளியிட்டு தன்னுடைய மீண்டும் மறுப்பைத் தெரிவித்திருக்கிறார். இந்த முறை வீடியோவில் முதல்வர், உதயநிதி, சபரீசனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
ஆனாலும் இந்த சர்ச்சை முற்றுப் பெறாது.
பிடிஆர் பேசியதாக வெளிவந்துள்ள ஆடியோவைவிட திமுகவுக்குத் தலைவலியாக மாறப் போவது ஜிஸ்கொயர் சிக்கல்கள்தான்.
வருமானவரித் துறை சோதனையில் திமுகவின் முக்கிய எம்.எல்.ஏ. மோகன் மற்றும் அவர் மகன் கார்த்திக் தொடர்புடைய இடங்கள் சோதனையிடப்படுகிறது.
இவர்கள் இடங்களில் நடத்தப்படும் சோதனைகள் வருங்காலத்தில் திமுகவின் அரசியலுக்கு நெருக்கடிகளும் அழுத்தங்களும் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
இன்னும் சில தினங்களில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இரண்டு வருடங்கள் முடியப் போகிறது. முதல் வருடம் அதிகம் அடிபடாமல் ஆபத்துகளில் சிக்காமல் கடந்துவிட்டது. இரண்டாவது வருடம் சவால்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது.
சவால்களுடன் சண்டையிட்டு வென்று அடுத்து வரும் வருடங்களை எளிதாக கடக்குமா என்பது இப்போது திமுக இப்போது எடுக்கப் போகும் முடிவுகளில்தான் இருக்கிறது.