“கெஜ்ரிவாலை சிபிஐ விசாரணைக்கு அழைக்கும் செய்தி வந்தவுடன், வடிவேலு பாணியில் ‘ஆம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க’ என்றுதான் பொதுஜனங்களின் ரியாக்ஷன்” என்றார் நண்பர் – டெல்லி பத்திரிகையாளர்தான்.
“ரோட்டில் நடந்தால் சிபிஐ அல்லது வருமானவரி அதிகாரி மீதுதான் மோதிக்கொள்ள வேண்டி வரும் போலிருக்கிறது. அவர்கள் நடமாட்டம் அவ்வளவு அதிகமாகிவிட்டது!”
“அந்த விசாரணைகள் மீது நம்பிக்கை போய்விட்டதா மக்களுக்கு?” – நம் கேள்வி!
“அது வேறு விஷயம்! இருக்கிற சைபர் எல்லாம் போட்டு, என்ன தொகை அது என்றே புரியாதவாறு ‘2ஜி’ விசாரணை! பிறகு என்னவாயிற்று! திஹார் ஜெயிலில் அ. ராசாவையும், கனிமொழியையும் பூட்டி வைத்தார்களே! சேகர் ரெட்டியின் மீது விசாரணை, சோதனை. சிபிஐ நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பு. தலைமை செயலர் ராம் மனோகரன் ராவ் வீட்டில் ரெய்டு, கோட்டைக்கு சென்று அவர் ஆபீஸ் அறை சோதனை….. என்னவாயிற்று.”
“அதனால்…?!”
“புரியவில்லை! மக்களுக்கு வரவர இந்த ஊழல் – விசாரணை செய்திகள் அதிர்ச்சி கொடுப்பதற்கு பதிலாக – ‘சரிதான்’ எனகிற கண்டுகொள்ளாத மனநிலை வந்துவிட்டது. அதனல்தான் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகள் எடுபடுவதில்லை.”
நண்பர் பேசினார். திடுக்கிடும்படியாக ஒன்று கூறினார். “சிபிஐ சோதனை, ஐடி ரெய்டு – இவை எல்லாவற்றுக்கும் ஓர் ஆண்டு ‘ஹாலிடே’ விட்டு விடலாம்” அதாவது சற்று நிறுத்தி வைப்பு. அதற்குள் ஒரு நீதிபதிகள் கமிட்டி அமைத்து முதலில் குற்றச்சாட்டுகளை அதனிடம் அனுப்பி – அவர்கள் பார்த்து – ஓகே சொன்னவற்றை மட்டுமே மேல்நடவடிக்கைக்கு போகவேண்டும். அதாவது – சிபிஐ, வருமானவரி சோதனைகள் அரசின் நேரடி பிடியிலிருந்து விடுபடவேண்டும். நீதித்துறை போல் இல்லாவிட்டாலும் தேர்தல் கமிஷன் போல சுயேச்சையாக செயல்பட்டால்தான் மக்கள் முழுமையாக நம்பும் நிலை ஏற்படும்”
பொருளாதார பத்திரிகையாளரான அந்த நண்பர் சொன்னார். இது நடக்கிற காரியமாக தோன்றவில்லை.
வேடிக்கை என்னவென்றால் தமிழ்நாட்டில் முதல் சொத்து குவிப்பு குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா?
பெருந்தலைவர் காமராசர் மீது! சொன்னவர் நாஞ்சில் மனோகரன்! ஐதராபாத் வங்கியில் காமராசர் ஒரு கோடி ரூபாய் சேர்த்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
“நான் அவர் பெயரில் ஒரு கோடிக்கு செக் தருகிறேன் போய் வாங்கிக் கொள்ளட்டும்” என்றார் காமராசர். அதன் பிறகு நாஞ்சிலார் ஏன் வாய் திறக்கிறார்?
முன்பெல்லாம் கருப்புப்பண சோதனைகள் அவ்வளவாக நடக்காது. நடந்தாலும் வெளியே கூறமாட்டார்கள். காரணம் ‘அவர்கள் பெரிய மனிதர்கள். வைத்திருப்பதும் கள்ள நோட்டல்ல. மறைக்க நினைக்கும் தவறான எண்ணம்தான் காரணம். அது ஒரு பொருளாதாரத்தை பாதிக்கும் குற்றம் என்று அவர்கள் உணரவில்லை’ என்று விளக்கம் கூறப்பட்டது உண்டு.
“கருப்புப் பணத்தை தானாக வலிய வந்து அரசிடம் ஒப்படைத்துவிடலாம் என்று கூறி அதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிடிகே நிதியமைச்சராக இருந்தபோது. எஸ்.எஸ்.வாசன் அப்படி வலிய ஒப்படைத்திருக்கிறார். சில சமூக மரியாதைக்குரியவர்களிடம் ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் அப்போது கணக்கில் வராத பணம் சேர்ந்திருக்கிறது” என்றார் நண்பர்.
இம்மாதிரி தொழிலதிபர்களை கடந்து அரசியல்வாதிகள், கார்ப்ரேட் சாமியார்கள் என்று எல்லோரிடமும் பணம் புகுந்து விளையாடியதை அடுத்து அவர்கள் அதை பல்வேறு விதங்களில் பதுக்கியும் பினாமிகள் பெருகவும் இப்படி சூழ்நிலைகள் மாறியதை அடுத்து சிபிஐ, வருமான வரி கெடுபிடிகள் அதிகமாகிவிட்டது.
தமிழக நிலைமையை பார்க்கலாம். 1970 சமயத்தில் சட்டசபைக்கு மனைவி சுப்புலட்சுமி அவர்களை ஸ்கூட்டரில் இறக்கி சென்றார் கணவர் ஜெகதீசன் அவர்கள். எளிமை! மவுண்ட்ரோடு ராஜாஜி ஹாலில் உள்ள ஹாஸ்டலிலிருந்து எம்எல்ஏக்கள் பஸ்களில் பயணித்து சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார்கள்.
இப்போது!
ஒருமுறை சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு முன் கலைஞர் கவுன்சிலர்கள் கூட்டத்தை கூட்டினார்.
ஹாலில் நுழைந்தவுடன் கலைஞர் அதிர்ச்சியுடன் “வாசலில் நின்ற பிரம்மாண்ட கார்களை பார்த்து “தொழில்முனைவோர் கூட்டத்தில் பேசப்போகிறேன் என்று நினைத்துவிட்டேன். கவுன்சிலர்கள் மக்களை சந்திக்க சைக்கிளில் போகவேண்டும்” என்றார்.
நண்பர் சொல்வதில் நியாயம் பளிச்சிட்டது. பழிவாங்குதல் என்ற கண்ணோட்டம் இல்லை, அப்பழுக்கற்ற முறை பின்பற்றப்படுகிறது என்று இந்த சோதனைகளை பற்றி மக்கள் மனதில் உறுதியான கருத்து ஏற்படவேண்டும்.