No menu items!

K.B.யின் சுஜாதா – வலிகளுடன் ஒரு வாழ்க்கை!

K.B.யின் சுஜாதா – வலிகளுடன் ஒரு வாழ்க்கை!

தமிழ்த் திரையுலகில் பானுமதி. சாவித்திரி, பத்மினி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக பேசப்பட்டவர் நவரச நாயகி சுஜாதா.

தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி பேசும் சுஜாதா, “13 வயதுவரை நான் வளர்ந்தது இலங்கையில்தான். அதனால் சிங்களப் பெண்களின் நடை, உடை பாவனை என்னை ஆட்கொண்டது. என் தாய்மொழி மலையாளம். ஆனால் மலையாளம் எழுதத் தெரியாது. வீட்டில்.உறவினர்கள் நண்பர்களிடம் மட்டும் மலையாளத்தில் பேசுவேன் பொது இடங்களில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசுவேன். என் அப்பா இ.எஸ்.மேனன் கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

இலங்கையில் தமிழ்ப் படங்கள் குறைவாக வரும். அதனால் ஆங்கிலம், இந்தி மற்றும் சிங்கள மொழிப் படங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். நான் பார்த்தமுதல் தமிழ் படம் எம் ஜி ஆரின்’ தாய்க்கு பின் தாரம்’. 1967-ம் ஆண்டு என் தந்தை ஓய்வு பெற்ற பிறகு எங்கள் குடும்பம் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்தது” என்கிறார்.

எர்ணாகுளத்தில் சுஜாதா தையல் கற்று வந்தார். தொடர்ந்து படிக்கலாம் என்று சுஜாதா நினைத்தபோது, மகளை நடிகையாக்க அவரது அம்மா விரும்பினார். ஆனால் சுஜாதாவின் அப்பாவுக்கு அதில் விருப்பமில்லை.
மலையாளத் திரையுலகில் வில்லனாக நடித்துவந்த ஜோஸ் பிரகாஷ் உதவியுடன் 1971-ல் சுஜாதா சினிமாவில் நுழைந்தார். அவர் நடித்த முதல் படம் ‘தபஸ்வினி’. அடுத்து ‘புனர்ஜென்மம்’, ‘சுழி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அங்கு பல படங்களில் நடித்தாலும் 2-வது நாயகியாகத்தான் வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றில் சில கவர்ச்சி கதாபாத்திரங்கள். இந்த சூழலில் தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தார். அவரது எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. கே. பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதுபற்றி கூறும் சுஜாதா, “அருள் பிலிம்ஸ் ஆபீசுக்கு வரச் சொல்லி சுப்பையா டெலிபோனில் தகவல் சொன்னார்.என் அண்ணனும் நானும் சென்றோம். முதல் முதலாக டைரக்டர் கே. பாலச்சந்தரையும் தயாரிப்பாளர் ராம. அரங்கண்ணலையும் சந்தித்தோம்.

பாலச்சந்தர் என்னிடம் ‘தமிழ் தெரியுமா?’ என்று கேட்டார். நான் ‘தமிழ் பேசத் தெரியும், எழுதத் தெரியாது’ என்றேன். அப்போது டைரக்டர் ஒரு வசனத்தை தந்து பேசச் சொன்னார். நான் கொஞ்சம் தடுமாறி பேசி முடித்தேன்.

அதைக் கேட்ட அவர், ‘இது போதாது. இன்னும் இம்ப்ரூவ்மெண்ட் பண்ணிக் கொண்டால்தான் டயலாகை தடுமாறாமல் பேச முடியும்’ என்றார். பிறகு புறப்படும் போது, ‘சுஜாதா உனக்கு சான்ஸ் இருக்கு, தினமும் தமிழ் பத்திரிகைகளை சத்தம் போட்டு படி, தப்பில்லாமல் படி. தினத்தந்தி. தினமணி. எதைப் படித்தாலும் உரக்க சத்தமாக படித்து பழகு. தமிழ் உச்சரிப்பு நன்றாக வந்தாகணும் முடியுமா…?’ என்றார்.

நானும் முயற்சி செய்வதாக சொல்லிவிட்டு வந்தேன்.

அதன்பின் கே.பி.சார் சொன்னபடி நிறைய தமிழ் பத்திரிகைகளை வாங்கி வந்து படித்தேன். காலையிலும் இரவிலும் தமிழ் படங்கள் பார்த்தேன். எனக்கே கொஞ்சம் நாட்களில் நம்பிக்கையும் உறுதியும் வந்து விட்டது. படப்பிடிப்பு தொடங்கிய நாளில் பாலச்சந்தரிடம் என் பயிற்சியைப் பற்றி சொல்லி, தமிழில் பேசிக் காண்பித்தே. அவர், ‘ஓகே… உன் திறமையை படத்தில் டயலாக்கில் வெளிப்படுத்து. ஆல் தி பெஸ்ட் ‘என்று உற்சாகப்படுத்தினார்.

பெரிய பேனரில் பெரிய இயக்குனரின் அறிமுகத்தில் ஒரு புதுமுகம் நடிக்கும் போது ஏற்படுகின்ற சிக்கல்கள் செண்டிமெண்ட்கள் நிறைய இருக்கும். புதுமுகமான சுஜாதாவுக்கும் ஒரு சிக்கல் வந்தது.

அவர் முன்பு மலையாளத்தில் நடித்த ஏ படம் ‘புனர் ஜன்மம் ‘ சென்னையில் திரையிடப்பட்டது. இதுதான் சிக்கலுக்கு புள்ளி வைத்தது.

இந்த விஷயம் டைரக்டர் காதுக்கு போனது. அந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி சுஜாதாவை படத்தில் இருந்து தூக்கிவிட சிலர் முயற்சித்தார்கள். நல்லவேளை சுஜாதா தப்பினார்.

அவள் ஒரு தொடர்கதை ரிலீஸ் ஆகும் வரை மலையாளத்தில் குறிப்பாக ஏ படங்களில் நடிக்கக் கூடாது. கவர்ச்சியாக எந்த பத்திரிகைக்கும் போஸ் கொடுக்க கூடாது’ என்று சுஜாதாவை அடைத்து கண்டித்து சொல்லி அனுப்பினார். டைரக்டர். கே. பாலசந்தர்.

” நான் அந்த மாதிரி படங்களின் நடிக்க மாட்டேன். அப்படி கிளாமராக நடிக்க சொல்லி பல படங்கள் வந்தன. நான் மறுத்துவிட்டேன்.” என்றார் சுஜாதா.

அந்தப் படம் தயாரிப்பாளருக்கு நல்ல வெற்றியை தந்து. படத்தை பார்த்த நடிகர் ஜெமினி கணேசன், ‘ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்கே’ என்று பாராட்டினார். அவரது பாராட்டுதான் எனக்கு பிள்ளையார் சுழி. அவரைத் தொடர்ந்து நடிகை ஷீலா. ஜெயபாரதி. நடிகர்கள் உமர். வின்சென்ட் மலையாள டைரக்டர் நாராயணன் ஆகியோர் டெலிபோனில் என்னை அழைத்து பாராட்டினர்” என்கிறார்.

நடிகர் சிவக்குமாருடன் சுஜாதா நிறைய படங்களில் நடித்துள்ளார். இதுப்ற்றி கூறும் சிவக்குமார், “தமிழ்த் திரைக்கு அறிமுகமாகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் மெச்சூரிட்டி இருந்தது. அதனால் குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், என குணச்சித்திர வேடங்களை அதிகமாக ஏற்று நடித்தார். நானும் அவரும் பல படங்களில் நடுத்தர வர்க்கத்து தம்பதியராக நடித்திருக்கிறோம்.

தொழிலில் அலட்சியம் என்பது சுஜாதாவின் அகராதியில் இல்லாத வார்த்தை. உணர்ச்சிகரமான காட்சிகளில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர். ‘ டப்பிங் பேசும்போது திரையில் வரும் தன் உருவத்தை பார்த்து உருகி. கண்ணீர் விட்டுக்கொண்டே குரல் கொடுக்கும் அளவுக்கு ரொம்ப ‘ எமோஷனல்’ ரகம்

திரைப்பட நடிகைகள் பலருக்கு குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமைந்ததில்லை. சுஜாதாவுக்கும் அப்படித்தான். சுஜாதாவுக்கு பெரும் புகழைத் தேடித் தந்த படம் ‘அன்னக்கிளி’. அதன் வெள்ளி விழா தமிழகம் எங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டபோது அதில் அற்புதமாக நடித்ததற்காக சந்தோஷப்பட வேண்டிய முதல் நபர் சுஜாதா தான் ஆனால் எந்த ஊர் விழாவிலும் நிறைந்த மனதோடு அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒரு பிரச்சினை இருக்கும். அவருக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடு என்று அந்த நாளில் நான் ஆண்டவனை வேண்டியது உண்டு.

அவர், காதலித்தவரையே கரம் பிடித்து- அன்பு குழந்தைகள் பெற்று நல்ல குடும்ப தலைவியானார். திருமணத்திற்குப் பின்னும் வற்றாத நடிப்புத் திறனால் தனக்கென்று ஒரு இடத்தை நிலை நிறுத்திய சாமர்த்திய சாலி சுஜாதா. இவ்வளவு சீக்கிரம் மறைய வேண்டியவர் இல்லை” என்கிறார் நடிகர் சிவக்குமார்.

சுஜாதா திரையில் மட்டும் வலிகளை சுமந்த நாயகியாக வலம் வரவில்லை நிஜத்திலும் அவர் வாழ்க்கையில் வலிகள் அதிகம்.

ஆனால் அவை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மென் சிரிப்புடனே தன் வாழ்க்கையை கடந்து சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...