பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக கிரிக்கெட்டும் சூதாட்டப் புகார்களும் மாறி வருகின்றன. கடந்த 2000-ம் ஆண்டுவரை ஜெண்டில்மேன்களின் ஆட்டமாக கிரிக்கெட் இருந்தது. எந்தவித தவறுக்கும் இடம்கொடுக்காத ஆட்டமாக கிரிக்கெட் கருதப்பட்டது. ஆனால் 2000-ம் ஆண்டுக்கு பிறகு அந்த மாயை உடைந்தது.
2000-ம் ஆண்டில் கிரிக்கெட்டை மையப்படுத்தி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. சூதாட்ட புரோக்கர்களுக்கு உதவியதாக தென் ஆப்பிரிக்க அணியின் அப்போதைய கேப்டன் ஹன்சி குரோனி, இந்தியாவின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ், இந்திய வீரர்கள் அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சூதாட்டப் பிரச்சினை கடந்த 2013-ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட்டை பாதித்தது. அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்ட புரோக்கர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி ஸ்ரீஷாந்த் உள்ளிட்ட பல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சில காலம் ஐபிஎல் கிரிக்கெட் மவுசை இழந்திருந்தது.
சூதாட்டப் புகார்கள் மற்றும் கொரோனாவுக்கு பிறகு இப்போதுதான் ஐபிஎல் கிரிக்கெட் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஆனால் இந்த சூழலில் மீண்டும் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியுள்ளன. மும்பை வாங்கடே மைதானத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் இது தொடர்பாக விசாரனைகளும் கைதுகளும் நடிபெற்று வருகின்றன.
இந்த சூழலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடிவருபவருமான முகமது சிராஜை சூதாட்ட புரோக்கர் ஒருவர் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்பு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின்போது அந்த புரோக்கர் முகமது சிராஜை தொடர்பு கொண்ட தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
வாட்ஸ் அப் மூலம் முகமது சிராஜுக்கு மெசேஜ் அனுப்பியிருந்த அந்த புரோக்கர், ”கிரிக்கெட் சூதாட்டத்தில் நான் பெருமளவு பணத்தை இழந்துவிட்டேன். இதனால் ஏற்பட்ட நஷட்டத்தில் இருந்து மீள நீங்கள் எனக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுள்ளார்.
உடனே சுதாரித்துக்கொண்ட முகமது சிராஜ், உடனடியாக பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு இதுபற்றி தெரிவித்துள்ளார். அவர்களும் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
போலீஸாருடன் இணைந்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையில், சிராஜுக்கு மெசேஜ் அனுப்பிய சூதாட்ட புரோக்கர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். அவர் தனி மனிதர் என்றும் சூதாட்ட கும்பல் எதனுடனும் அவருக்கு தொடர்பு இல்லை என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், “முகமது சிராஜிடம் உதவி கேட்ட சூதாட்ட புரோக்கர் மீது இதற்கு முன்னர் சூதாட்டம் தொடர்பான எந்த புகாரும் பதியப்படவில்லை. அவருக்கு வேறு எந்த சூதாட்ட குழுக்களுடனும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை. இருப்பினும் அவரது தொலைபேசியை கைப்பற்றி, அவரது முந்தைய தொடர்புகளைப் பற்றி சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் விசாரித்து வருகிறோம்” என்றனர்.