No menu items!

ஐபிஎல் டைரி: அர்ஜுன் டெண்டுல்கரின் என்ட்ரி

ஐபிஎல் டைரி: அர்ஜுன் டெண்டுல்கரின் என்ட்ரி

அரசியலிலும், சினிமாவிலும் வாரிசுகளுக்கு கிடைக்கும் வரவேற்பு விளையாட்டுத் துறையில் கிடைப்பதில்லை. கவாஸ்கரின் மகன் ரோஹன் கவாஸ்கர், ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருத் ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னி என்று இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

மேலே சொன்ன வாரிசுகளைப் போலவே தன் கிரிக்கெட் எண்ட்ரிக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தார் சச்சினின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர். 2021-ம் ஆண்டில் நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்கியபோதே பல சர்ச்சைகள் எழுந்தன. திறமைமிக்க பல வீரர்கள் இருக்கும்போது, சச்சினை திருப்திப்படுத்துவதற்காக மும்பை இந்தியன்ஸ் அவரை கணக்குக்கு வாங்கிப் போட்டதாக சொல்லப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் அவருக்கு மும்பை அணி வாய்ப்பு வழங்காததால் அது உண்மையோ என்ற எண்ணமும் எழுந்தது.

இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் முதல் முறையாக அவருக்கு வாய்ப்பு கொடுத்தது மும்பை இந்தியன்ஸ். வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன், இப்போட்டியில் 2 ஓவர்களை வீசி 17 ரன்களை கொடுத்தார்.

விக்கெட் எதையும் எடுக்காவிட்டாலும் இப்போட்டியில் ஆடியதன் மூலம் ஐபிஎல்லில் ஒரே அணிக்காக ஆடிய முதல் அப்பாவும் மகனும் என்ற சாதனையை செய்துள்ளார்கள் சச்சினும் அர்ஜுனும். எப்படியோ சச்சினின் சாதனைகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஒன்று கூடியிருக்கிறது.

ஏழை வீரர்களுக்கு உதவும் ரிங்கு சிங்!

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களுக்குத்தான் மற்றவர்களின் வலி புரியும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ரிங்கு சிங். சிறு வயதில் ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் துப்புரவு வேலையைப் பார்த்துக்கொண்டே கிரிக்கெட் கற்றவர் ரிங்கு சிங். இப்போது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கொல்கத்தா அணியின் சமீபத்திய வெற்றிகளில் பெரும் பங்கு வகித்த ரிங்குவுக்கு மற்ற வீரர்களைப் போல் கோடிக்கணக்கில் வருமானம் இல்லை. 80 லட்ச ரூபாய்க்குதான் அவர் ஏலம் போனார்.

ஆனால் இந்த பணத்தையும் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கஷ்டப்படும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உதவி வருகிறார் ரிங்கு சிங். வறுமையான சூழலில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி பெறுவதற்கான ஹாஸ்டல் ஒன்றை உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகாரில் அவர் கட்டி வருகிறார். இதுவரை தான் சம்பாத்தித்த பணத்தில் பாதிக்கும் மேல் இந்த விடுதியைக் கட்ட ரிங்கு சிங் செலவு செய்திருப்பதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் மசூடஸ் சஃபர் அமினி கூறுகிறார். இந்த ஹாஸ்டலைக் கட்டுவதற்கான முழு பொறுப்பையும் அவரிடம்தான் ரிங்கு சிங் ஒப்படைத்துள்ளார். அடுத்த மாதம் இந்த ஹாஸ்டலின் திறப்புவிழா நடக்க இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரடர்ஸ் அணி வீரர்கள் செல்லமாக ரிங்கு சிங்கை ‘லார்ட்’ என்று அழைக்கிறார்கள். தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் கார்கள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை வாங்கும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ரிங்கு சிங் நிஜமாகவே ’லார்ட்’தான்.

கோலியின் கோபம்

டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சவுரவ் கங்குலிக்கு கை கொடுக்காமல் கோலி அவரை புறக்கணித்தது மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. தனது கேப்டன் பதவியைப் பறித்ததில் கங்குலிக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக கோலி நம்புவதால் இந்த புறக்கணிப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது. என்ன இருந்தாலும் பிசிசிஐயின் முன்னாள் தலைவரான கங்குலியை கோலி புறக்கணித்தது சரியல்ல என்று கங்குலி ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள்.

கைகுலுக்கல் விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள் கங்குலியின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்வதில் இருந்து வெளியேறி இருக்கிறார் கோலி. ஆனால் அவர் அப்படி செய்தாலும் கங்குலி இன்னும் கோலியை இன்ஸ்டா பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...