No menu items!

திமுகவின் சட்ட நடவடிக்கைக்கு தயார்: அண்ணாமலை பதில்

திமுகவின் சட்ட நடவடிக்கைக்கு தயார்: அண்ணாமலை பதில்

திமுகவை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் சொத்துபட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதலளிக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ”குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை 15 நாட்களுக்குள் அவர் எங்களிடம் வழங்கவில்லை என்றால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்தநிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஜிஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை, திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக 100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கையைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை என் மீது திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள், 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியுள்ளார். கோடிகளில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் திமுகவினர் இருக்கும்போது, என்னிடம் மேலும் 500 கோடி ரூபாய் கேட்கிறார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அவற்றை சிபிஐயிடம் அளிக்கவுள்ளோம். உங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, திமுக அமைப்புச் செயலாளர் திரு ஆர்.எஸ். பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

பல் பிடுங்கிய விவகாரம்: அமுதா ..எஸ். முன்னிலையில் 4 பேர் விசாரணைக்கு ஆஜர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணைக்கு ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 10-ந்தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை தொடங்கியது. அப்போது பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி ஆஜாராகி விளக்கமளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து 16 மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் மற்றும் 21 வயது வாலிபர் ஒருவர் ஆகிய 3 பேர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகினர்.

தங்கள் தலையை தாங்களே துண்டித்து நரபலி கொடுத்த தம்பதி

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஹேமுபாய் மக்வானா (38) – ஹன்சாபென் (35). ஹேமுபாய் மற்றும் ஹன்சாபென் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்த நிலையில், இவரும் கடந்த ஓராண்டு காலமாக தங்கள் குடிசையில் நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோமகுண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த இந்த தம்பதி, மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை ஆய்வு செய்த போது தான் பகீர் உண்மைகள் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் விதமாக எந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்துள்ளனர். சம்பவ நாள் அன்று ஹோமம் வளர்த்து அந்த எந்திரத்தில் தலையை கொடுத்து தாங்களே அதை இயக்கி தலை துண்டாக்கிக் கொண்டு நரபலியாகியுள்ளனர். தலை உருண்டு சென்று குண்டத்தில் விழும் விதமாக இவர்கள் அதை அமைத்துள்ளனர். மேலும் இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

துருக்கியில் மீண்டும் நில நடுக்கம்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்த நில நடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. நில நடுக்கத்தில் துருக்கி-சிரியாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பெறும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கி, அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் துருக்கியில் இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை அந்நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கே இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாக வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...