இந்தியாவின் இன்றைய முதலமைச்சர்கள் குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்குறது ADR என்றழைக்கப்படும் Association for Democratic Reforms (ADR) அமைப்பு. இந்த அமைப்பு இந்திய ஜனநாயக சீரமைப்பு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் புள்ளிவிவரங்களை வெளியிடும். தேர்தல் செலவு, வேட்பாளர்களின் முழு விவரம், கட்சிகளுக்கு கிடைக்கும் பணம் என இந்த அமைப்பு பல விஷயங்களை தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடுகிறது. தங்களை ஆளும் கட்சிகளும் தலைவர்களும் எப்படியிருக்கிறார்கள் என்ற உண்மை நிலவரத்தைப் புரிந்துக் கொள்ள உதவும் இந்த ஆய்வுகள்.
இப்போது இந்திய முதலமைச்சர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது ஏடிஆர். அதில் சில ஆச்சர்ய தகவல்களும் அதிர்ச்சி செய்திகளும் இருக்கின்றன.
நாட்டில் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள்.
இவர்களில் மிக அதிகமாக சொத்துகளை வைத்திருப்பவர் ஜகன்மோகன் ரெட்டி. அவரது மொத்த சொத்து மதிப்பு 510 கோடி ரூபாய். அவருக்கு அடுத்து அருணாச்சலபிரதேசம் முதல்வர் பேமா காண்டு இருக்கிறார். இவருக்கு 163 கோடி ரூபாய் அளவில் சொத்துகள் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வருகிறார். சொத்து மதிப்பு 63 கோடி ரூபாய்.
குறைந்த சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவரது சொத்து மதிப்பு 15 லட்சம்தான். அடுத்த இடத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், இவரது சொத்து மதிப்பு 1.18 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால். இவரது சொத்து மதிப்பும் 1.27 கோடி ரூபாய்.
சொத்து மதிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 14வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 8.8 கோடி ரூபாய் என்கிறது ஏடிஆர் அமைப்பு.
கல்வித் தகுதி குறித்தும் ஏடிஆர் நிறுவனம் ஆய்வு செய்திருக்கிறது. இப்போதிருக்கும் முதல்வர்களில் 11 பேர் அதாவது 37 சதவீதத்தினர் பட்டதாரிகள். ஒரே ஒருவர் பத்தாவது படித்திருக்கிறார். 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் 10 சதவீதத்தினர். 9 முதல்வர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஒரே ஒரு முதல்வர் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்.
30 முதல்வர்களில் ஒரே ஒரு முதல்வர் 40 வயதுக்குள் இருக்கிறார். அருணாசல பிரதேச முதல்வர் பேமா காண்டுவுக்கு 39 வயதாகிறது. 71 வயதிலிருந்து 80 வயதுக்குள் நான்கு முதல்வர்கள் இருக்கிறார்கள். முதல்வர்களில் வயது முதிர்ந்தவர் பினராயி விஜயன். 77 வயதாகிறது.
இப்போது பதவியிலிருக்கும் 30 முதல்வர்களில் 13 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் போன்ற கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
முதல்வர்களில் அதிக குற்றச்சாட்டுக்களில் சிக்கியிருப்பவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இவர் மீது 64 கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் 37 குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை.
இவருக்கு அடுத்து தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இவர் மீது 47 கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுக்களில் 10 குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை.
அதிக கிரிமினல் குற்றச்சாட்டுக்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி. மொத்தம் 38 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது இருக்கின்றன. இவற்றில் 35 குற்றச்சாட்டுக்கள் கடுமையான ரகத்தை சார்ந்தவை.