பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதேபோல் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை காலையில் கூடியது. அப்போது அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவையை அமைதியாக நடத்துவதற்கு ஒத்துழைக்கும்படி அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். எனினும் அமளி நீடித்தது. இதனையடுத்து மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.
தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத் துறைக்கு தெரிவிக்கவில்லை: சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ள பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த தீர்மானத்திற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோவில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம். இந்த கோவிலில் கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதலமைச்சர் என்னை கண்டித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.
ட்ரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: ரூ. 1 கோடி வழங்க நடிகை ஸ்டார்மிக்கு உத்தரவு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்பு குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது என தனக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, கடந்த 2018-ம் ஆண்டு ட்ரம்ப் மீது ஸ்டார்மி அவதூறு வழக்கு தொடுத்தார். இதை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ரூ.2.4 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்டார்மிக்கு மேலும் ரூ.2 கோடி அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 9-வது சர்க்யூட் கோர்ட் அப்பீல்ஸில் ஸ்டார்மி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் விசாரித்த நீதிமன்றம், ஸ்டார்மி மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மேல்முறையீட்டு செலவாக ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது.
நடிகை ஸ்டார்மியுடன் தொடர்புடைய மற்றொரு வழக்கில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதே நாளில் இந்தத் தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் முதல் முறையாக பெண் ஓதுவார் நியமனம்
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தினமும் அதிகாலை 6 மணி, காலை 11.30 மணி, மாலை 6.30 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய 4 நேரங்களில் அலங்கார தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இந்த தீபாரதனையின்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடல்களை பாடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின்போது 10 நாட்களும் இரவு 8.30 மணிக்கு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும்போது 3-வது சுற்றின் இறுதியில் அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் ஓதுவார்கள் தேவாரம் பாடல்களை பாடியபடி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணிய ஓதுவார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்தது. அதற்குப் பதிலாக வெளியில் இருந்து வரும் பக்தர்களே அபிராமி அந்தாதி மற்றும் தேவாரப் பாடல்களை பாடி வந்தனர். எனவே, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவு திருமலை சிவா உய்ய கொண்டான் கோவிலில் கடந்த 10 ஆண்டுளாக ஓதுவராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.