No menu items!

அதிகரிக்கும் கொரோனா: அலட்சியம் வேண்டாம்

அதிகரிக்கும் கொரோனா: அலட்சியம் வேண்டாம்

காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோசம் என திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா அறிகுறிகளுடன் யாராவது ஒருவராவது தென்படுகிறார்கள். ஆம், நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் முதலில் 2019ஆம் ஆண்டு தொடங்கியது. குடும்பத்தினரை இழந்தது, தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை இழந்தது என பல்வேறு துயர்களுக்கு மக்கள் ஆளாகினர். 2021க்குப் பின்னர் கொரோனா தாக்கம் சற்று குறைந்தது. 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பினாலும் தாக்கத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. அதேநேரம் கொரோனாவும் இன்னும் முழுமையாக அகலவில்லை. வெவ்வேறு வகையான திரிபுகளில் மறுஉருவம் பெற்று மீண்டும் மீண்டும் பரவிக்கொண்டேதான் இருக்கிறது.

இதோ, இப்போது அடுத்த திரிபு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்று (6-4-2023) காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல் இருந்து 23,091 ஆக அதிகரித்துள்ளது.

சாதாரண மக்கள் மட்டுமல்ல உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தராஜே இருவரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களில் தங்களை  சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய வைரசான எக்ஸ்.பி.பி.1.16 (XBB வகை) திரிபுதான் தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம். குறிப்பாக கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திரிபு கோரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 10 பேர்களுக்கு BA.2 வகை தொற்றும், 2 பேர்களுக்கு BA.5 வகை கொரோனா தொற்றும், ஒருவருக்கு B.1.1 வகை கரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மட்டுமல்ல கொரோனா மரணங்களும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அதில் இருவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்று முன் தினம் காலை உயிரிழந்தார்.  அதேதினம், திருப்பூர் வெள்ளக்கோவிலை சேர்ந்த 82 வயதான சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மனைவி பழனாத்தாளுக்கும் (வயது 78) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திரையரங்கு – கூட்ட அரங்குகள் உள்ளிட்ட மக்கள் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது, தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்வது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியிருக்கின்றன.

தமிழகத்தில் 1-4-23 முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுவையில் பொது இடங்களிலும் முக கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் திரும்பும் பயணிகளுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். எனவே, கொரோனா மீண்டும் அதிகரிக்கும் நிலையில் மீண்டும் லாக்டவுன் வருமா என்ற அச்சமும் மக்களிடம் தென்படுகிறது.

அதற்கான அறிகுறிபோல், வழக்கறிஞர்கள் மீண்டும் வீட்டில் இருந்தபடி பணியாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். புதுவையில் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கொரோனா பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே, மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று கூறியுள்ளார். அதேநேரம், “மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆம், அலட்சியம் வேண்டாம்; அது ஆபத்தாக முடியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...