முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் டோனால்ட் ட்ரம்ப் கைது. இன்று உலகம் முழுவதும் இதுதான் தலைப்புச் செய்தி.
34 குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. வழக்கை விசாரித்த ஏப்ரல் 4ஆம் தேதி நியூயார்க் சுப்ரீம் கோர்ட்டில் (உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்பட்டாலும் இந்த நீதிமன்றத்துக்கு மேலும் நீதிமன்றங்கள் நியூயார்க் மாகாணத்தில் இருக்கின்றன) விசாரணை நடந்தது.
நீதிமன்ற விசாரணைக்காக தனது சொந்த 757 விமானத்தில் ஃப்ளோரிடாவிலிருந்து நியூயார்க் வந்தார். இரவு தனது ட்ரம்ப் டவரில் தங்கினார். நியூயார்க்கில் மிக உயரமான கட்டிடங்களில் ட்ரம்ப் டவரும் ஒன்று. 664 அடி உயரம். 58 மாடிகள். இதில் மூன்று மாடிகளில் ட்ரம்ப் குடும்பத்தினர் தங்குவார்கள். அதில் இரவு தங்கிய ட்ரம்ப், காலையில் நியூயார்க் நீதிமன்றத்துக்கு கிளம்பினார்.
நீதிமன்றத்துக்குள் வந்த ட்ரம்பின் முகத்தில் உற்சாகம் இல்லை. யாருடனும் பேசவில்லை. ட்ரம்ப்பின் மீது சுமத்தப்பட்டிருந்த 34 குற்றச்சாட்டுக்களை நீதிபதி ஜூவன் மெர்ச்சான் வாசிக்க, ட்ரம்ப் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுத்தார். ’நான் குற்றம் செய்யவில்லை ‘ என்று கூறினார்.
ட்ரம்ப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்பதுதான் பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் கைது நடவடிக்கை இருந்தாலும் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார். விசாரணை அழைப்பின் போது வர வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் வேறு சில கட்டுப்பாடுகளையும் ட்ரம்புக்கு நீதிபதி விதித்தார்.
சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை வைக்கக் கூடாது. ஆதரவாளர்கள் மூலம் வன்முறையை ஏற்படுத்தக் கூடாது. அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என்று நீதிபதி சொல்லச் சொல்ல ட்ரம்ப் கேட்டுக் கொண்டார். எல்லாவற்றுக்கும் சரி என்று பதிலளித்தார்.
இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ட்ரம்ப் அதை மதிக்கவில்லை.
நீதிமன்றத்துக்குள் வரும்போதே, என்னைக் கைது செய்யப் போகிறார்கள். இது போன்று ஒரு சம்பவம் அமெரிக்க வரலாற்றில் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை என்று தனது சொந்த சமூக ஊடகமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) பதிவிட்டிருந்தார்.
விசாரணை முடிந்தது மீண்டும் ஃப்ளோரிடா சென்ற ட்ரம்ப், நீதிபதியைக் குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டார் ட்ரம்ப். இந்த நீதிபதி என்னை வெறுப்பவர். நீதிபதியின் மகள் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு பணியாற்றுபவர் என்று நீதிபதி மீது குற்றஞ்சாட்டினார்.
மீண்டும் வழக்கு விசாரணை டிசம்பரில் நடக்கும் என்று கூறப்படுகிறது. 2024ல் இந்த வழக்கு முழுமையடையும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க சட்டங்களின்படி வன்முறை இல்லாத குற்றங்களில் ஈடுபவர்களுக்கு உடனடி சிறை தண்டனையோ சிறையில் அடைக்கப்படுவதோ இல்லை. ட்ரம்பின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மோசடி, ஏமாற்றுதல் போன்றவை. அதனால் அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதே நீதிமன்றத்துக்கு வந்த ட்ரம்ப்புக்கு கை விலங்கு போடப்படவில்லை. பொதுவான நடைமுறையான குற்றவாளிகளை புகைப்படம் எடுக்கும் நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. வழக்கு விசாரணையின் முடிவில் அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும் சேர்த்து ட்ரம்ப்புக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க சட்டத் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
சரி, எந்த குற்றங்களுக்காக ட்ரம்ப் சிக்கியிருக்கிறார்?
செக்ஸ், பெண்கள் போன்ற சர்ச்சைகளில் ட்ரம்ப் சிக்குவது புதிதல்ல. இந்த முறையும் ஒரு ஆபாசப் பட நடிகையின் மூலம்தான் சிக்கியிருக்கிறார். இந்த சிக்கல் அவரை கைது செய்யும் அளவுக்கு சென்றிருக்கிறது.
என்ன நடந்தது?
ஸ்டார்மி டேனியல்ஸ் (Stormy Daniels இது ஆபாசப் படத்துக்காக – உண்மைப் பெயர் Stephanie Clifford) அமெரிக்காவின் புகழ்ப் பெற்ற ஆபாசப் பட நடிகை. பல நீலப் படங்களில் நடித்தவர். ஆண்களின் கனவுப் பெண். ட்ரம்ப்புக்கும் கனவுப் பெண்.
2006ஆம் வருடம் ஒரு கோல்ஃப் போட்டியின் போது ஸ்டார்மியை சந்தித்தார் ட்ரம்ப். அப்போது அவர் அமெரிக்க குடியரசுத் தலைவர் அல்ல. பெரும் பணக்காரர் அவ்வளவே. பணக்கார ப்ளே பாய் ட்ரம்புக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கும் உடனே காதல் பற்றிக் கொண்டது.
அந்த சமயத்தில் ட்ரம்பின் மனைவி மெலனியாவுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. மனைவி வீட்டிலிருக்க ட்ரம்ப் தனது வேலைகளை வெளியில் காட்டிக் கொண்டிருந்த நேரம். அப்போது ட்ரம்புக்கு வயது 60. ஸ்டார்மிக்கு 27 வயது.
இருவரும் ஒரு இரவு ஒட்டலில் தங்கி இரவை படுக்கையில் கொண்டாடியிருக்கிறார்கள்.
அவர் ஓட்டலுக்கு டின்னர் சாப்பிடலாம் என்று அழைத்தார். சென்றேன். அவர் அறையில் பைஜாமாவுடன் நின்றிருந்தார். உணவுக்குப் பின் படுக்கைக்கு அழைத்தார். அவருடனான செக்ஸ் அத்தனை இன்பமானதாக இல்லை. என் வாழ்க்கையின் மோசமான செக்ஸ் அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ட்ரார்மி.
இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் ட்ரம்ப் சொல்லியிருக்கிறார். ஆனால் ட்ரம்புடன் நடந்த உறவை ஸ்டார்மி வெளியில் சொல்லத் தொடங்கினார். அவரது வாயை மூட தனது வக்கீல்கள் மூலம் ட்ரம் முயற்சித்திருக்கிறார்.
இந்த சூழலில் 2016 ஆம் வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டார். திருமணத்துக்கு மீறிய இந்த உறவை வெளியில் சொல்லக் கூடாது என்று 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் ஸ்டார்மிக்கு கொடுத்திருக்கிறார். அவரும் வாங்கிக் கொண்டார். பணத்தை வாங்காவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று அஞ்சியதாக தெரிவிக்கிறார்.
தனக்கு பல விதங்களில் மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
2011ஆம் வருடம் ஸ்டார்மி தனது கைக்குழந்தையுடன் லாஸ் வேகாஸ் கார் பார்க்கில் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு பெண் அவரிடம் வந்து பேசினாராம். இவ்வளவு அழகான குழந்தையின் தாய்க்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று கூறி சென்றாராம். அந்த சமயத்தில் ஒரு பத்திரிகைக்கு ட்ரம்ப் குறித்து பேசுவதாக ஸ்டார்மி கூறியிருந்திருக்கிறார். இந்த மென் மிரட்டலுக்குப் பிறகு அவர் வாய் திறக்கவில்லை.
இப்படி வாய் மூட வைக்கும் பிரச்சினைகள் ஓடிக் கொண்டிருந்தது. 2018ல் நடந்தவற்றை வெளியில் சொன்னார் ஸ்டார்மி. அவர் வெளியில் சொன்னது வழக்காக மாறியது.
வழக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் விசாரணையில் இருந்தது. அப்போது ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தார். மேலும் நடிகைக்கு பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கைப்பற்றியது. இதனால் ட்ரம்புக்கு நெருக்கடி வலுத்தது.
தேர்தல் நேரத்தில் இப்படி பணம் கொடுத்தது அமெரிக்க தேர்தல் செலவு விதிகள்படி குற்றம். அந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இவை மட்டுமில்லாமல் வேறு குற்றச்சாட்டுக்களும் அவர் மீது இருக்கிறது.
கேரன் மெக்டோகல் (Karen McDougal) என்ற மாடல் அழகியுடனான அந்தரங்க தொடர்புகளை மறைக்க 2016 அதிபர் தேர்தலுக்கு முன் பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ட்ரம்ப் அலுவலகப் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பில் குழந்தை பிறந்திருக்கிறது. அதை மறைக்கவும் ட்ரம்ப் பணம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டும் இருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ட்ரம்ப் மறுக்கிறார்.அதிராமல் நிற்கிறார்.
“அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன் என்பதற்காக மட்டுமே என் மீது போலியான ஊழல் மற்றும் தரக்குறைவான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. நியூயார்க்கில் நேர்மையான விசாரணை என்னால் நடத்த முடியாது என அவர்களுக்கு தெரியும்” என்று தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அடுத்த வருடம் – 2024ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. அதில் தான் போட்டியிடப் போவதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். குற்ற வழக்குகள் இருந்தாலும் தேர்தல்களில் போட்டியிடலாம் என்பது அமெரிக்க நிலை. அதனால் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.