பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 8-ம் தேதி சென்னை வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் அவர், பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன முனையத்தைப் பார்வையிடுகிறார். அதன் பின்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு சென்னை-கோவை இடையே ஓட உள்ள அதிவேக ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் சேவையை அவர் தொடங்கிவைக்கிறார். அதையடுத்து அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறுகிற நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து கார் மூலம் புறப்பட்டு பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அவர் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்கிறார்.
குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி
சென்னையில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பாலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்திற்கு தீர்த்தவரி பூஜை செய்வதற்காக சுமார் 20 பேர் பல்லாக்கை தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது பல்லாக்கை நிறுத்தி குளத்தில் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் திடீரென 5 பேர் நீரில் மூழ்கினர். இதைத் தொடர்ந்து, வேளச்சேரி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் குளத்தில் இறங்கித் தேடியதில் 5 பேரில் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடல்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரும் அர்ச்சகர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இனி எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி
இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்ட அதிமுக சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தோம். தற்போது ஏகமனதாக என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த 2 ஆண்டுகளில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. எப்போது இந்த ஆட்சி அகலும் என்று மக்களின் குரல் தமிழகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அ.தி.மு.க. இனி எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும். திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். அவர் செய்யும் ஒரே வேலை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வழக்குப்போடுவது, மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை” என்றார்.
தங்கம் விலை ரூ.720 உயர்வு
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளியின் விலை ரூ.2.90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.