No menu items!

மிஸ் ரகசியா: அண்ணாமலை ஆட்டிட்யூட்- கோபத்தில் நிர்மலா சீதாராமன்

மிஸ் ரகசியா: அண்ணாமலை ஆட்டிட்யூட்- கோபத்தில் நிர்மலா சீதாராமன்

“ஏப்ரல் மாசம் இப்பத்தான் தொடங்கியிருக்கு. ஆனா, அதுக்குள்ளயே அனலா கொதிக்குது” என்று வியர்வையைத் துடைத்தபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

பிரிட்ஜில் வைத்திருந்த நீர் மோரை எடுத்துக் கொடுத்தோம். அதைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் ரகசியா.

“கோடை வெயிலைப் பத்தி சொன்னியே… அரசியல் அனல் எப்படி இருக்கு?”

“இப்போதைக்கு பாஜக ஆபீஸ்லதான் அரசியல் அனல் அதிகமா இருக்கு. மூத்த தலைவர்கள் எல்லாரும் அண்ணாமலை மேல கோபமா இருக்காங்க. அவர் பதவி ஏத்ததுக்கு பிறகு நம்மளை கண்டுக்கறதே இல்லை; ஆலோசனையும் கேட்கறதில்லை. செய்தியாளர்களைக்கூட அண்ணா, அக்கான்னு கூப்பிடற அண்ணாமலை, எங்களை மாதிரி சீனியர் தலைவர்களை கண்டுக்கறதே இல்லைன்னு பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்கள் எல்லாம் புலம்பறாங்களாம். இது ஒரு கட்டத்துல கோபமா மாறி, இப்ப அவங்கள்ல யார் கமலாலயத்துக்கு வந்தாலும் அண்ணாமலையைச் சந்திக்கறதே இல்லையாம். மாநில பொறுப்பாளர் கேசவ விநாயகத்தை மட்டும் பார்த்துட்டு திரும்பிடறாங்களாம்.”

“நிர்மலா சீதாராமனும் அண்ணாமலைக்கு எதிரா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“இதுக்கு காரணம் கே.டிராகவன். இவர் நிர்மலா சீதாராமனோட தீவிர ஆதரவாளர். சமீபத்துல ஒருநாள் பயணமா சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கற கே.டி. ராகவனை சந்திச்சு இருக்கார். அப்ப தன்னோட உடல்நிலை இந்த அளவு பாதிக்கப்பட்டதுக்கு அண்ணாமலைதான் காரணம்னு நிர்மலா சீதாரமன் கிட்ட அவர் புகார் சொல்லி இருக்காரு. இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கலந்துகிட்ட நிகழ்ச்சியில வானதி சீனிவாசன் கலந்துகிட்டு இருக்கார். அவரும் அண்ணாமலை பத்தி புகார் சொல்ல, இப்ப அண்ணாமலை மேல நிர்மலா சீதாராமன் கோபமா இருக்காராம்.”

“அதிமுகவோட கூட்டணி வேணாம்கிறதுல அண்ணாமலை இன்னும் உறுதியாத்தான் இருக்காரா?”

“ஆமாம். அதிமுக தலைமையில் கூட்டணிங்கிறதை அண்ணாமலை இன்னும் விரும்பலை. இதுபத்தி தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட பேசும்போது, “அதிமுக கூட்டணியை டெல்லி தலைமை இன்னும் உறுதி செய்யலை. டெல்லியில நடந்த கூட்டத்துல நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பத்தி அமித்ஷா ஏதும் சொல்லலை. இப்போதைக்கு கூட்டணியில் இருக்கிறோம்னுதான் சொல்லி இருக்கார். அவர் இந்தியில சொன்னதை ஊடகங்கள் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கு’ன்னு சொல்லி இருக்கார். தேர்தல் சமயத்தில் தான் சொன்னபடி அதிமுகவை பாஜக கழட்டிவிடும்னு அவர் உறுதியா நம்பறார். ஆனா, மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக கூட்டணி தொடருங்கிறதுல உறுதியா இருக்கார். இப்படி ரெண்டு பேரும் வேற வேற கருத்துகளை சொல்றதால கட்சிக்காரங்க குழம்பிப் போய் இருக்காங்க.”

“கூட்டணி விவகாரத்துல எடப்பாடியோட ரியாக்‌ஷன் என்ன?”

“பிரதமர் சென்னைக்கு வரும்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பத்தி அவர்கிட்ட பேசிக்கலாம்ங்கிற மூட்ல எடப்பாடி இருக்காரு. அப்படி சந்திக்கும்போது அண்ணாமலை மேல புகார் பட்டியலை வாசிக்கவும் அவர் தயாரா இருக்காரு.”

“நாடாளுமன்றத்தோட சேர்த்து சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்னு எடப்பாடி சொல்லி இருக்காரே?”

“ஒரே தேசம் ஒரே தேர்தல் திட்டத்தின்படி ரெண்டு தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கும்னு எடப்பாடி உறுதியா நம்பறார். ஆனால், இப்போதைக்கு அந்த திட்டத்தை பாஜக தள்ளி வச்சிருக்கு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிச்சா அதைப்பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சிருக்காங்க. இந்த விஷயம் எடப்பாடிக்கு தெரிய வாய்ப்பில்லைங்கிறதால அவர் இப்படி சொல்றார்னு பாஜக பிரமுகர்கள் சொல்றாங்க.”

“மேயர்களைப் பத்தி திமுகவுல முணுமுணுப்புகள் இருக்காமே?”

“விஷயம் உங்க வரைக்கும் வந்துடுச்சா… மதுரை, நெல்லை, கோவை உட்பட 6 மாநகராட்சி மேயர்களோட செயல்பாடு திருப்திகரமா இல்லைன்னு அவங்களோட எதிர்கோஷ்டியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் புகார் சொல்லி இருக்காங்க. அவர் அதைப்பத்தி முதல்வர்கிட்ட சொல்லி இருக்கார். இந்த சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு இதைப்பத்தி முடிவெடுக்கலாம்னு முதல்வர் சொல்லி இருக்காராம். ஒரு சில மேயர்களை மாத்த முதல்வர் முடிவு செஞ்ச்சிருக்கறதா சொல்றாங்க.”

“சமூக நீதிக்கான தேசிய மாநாட்டை டெல்லியில திமுக நடத்தி இருக்கே?”

“தேசிய அரசியலில் ஸ்டாலினுடைய செல்வாக்கை அதிகரிக்கறதுக்கான ஒரு வாய்ப்பா திமுக இதை பயன்படுத்தி இருக்கு. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருந்து எலிமினேட் ஆனதை தொடர்ந்து ஸ்டாலினுக்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கறதா திமுக நினைக்குது. திமுக தலைவர்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தாங்கள் எடுக்கும் எல்லா முடிவையும் ஏத்துக்கும்னு நம்புது. அதேநேரம் காங்கிரஸ் வேண்டாம்னு சொல்ற ஆம் ஆத்மி, சமஜ்வாடி கட்சி, திருணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஸ்டாலினை ஆதரிக்கும்னு திமுக தலைவர்கள் நினைக்கறாங்க. அதனால தேசிய அரசியல்ல ஸ்டாலினை முன்னிறுத்த இந்த மாநாட்டை நடத்தி இருக்காங்க.”

“காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கே.எஸ். அழகிரி கூட்டி இருந்தாரே?”

“அவர் கூட்டின அந்த கூட்டத்துக்கு 15 பேர்தான் வந்திருக்காங்க. அது அவரை ரொம்ப அப்செட் ஆக்கிடுச்சு. இந்த கூட்டத்துல பேசின அழகிரி, ‘நாடாளுமன்ற தேர்தல்ல நமக்கு கொடுக்கற சீட்டோட எண்ணிக்கையை திமுக ரொம்பவே குறைக்கப் போகுது. அப்படி நடக்காம தடுக்கணும்னா ராகுல் காந்திக்கு ஆதரவான போராட்டத்துல பெரிய அளவுல கூட்டம் சேர்க்கணும்’னு சொல்லி இருக்காரு” என்றவாறு புறப்பட்டாள்.

“எல்லாரைப் பத்தியும் சொல்லிட்டு ஓபிஎஸ்ஸைப் பத்தி சொல்லாம போறியே… நீயும் அவரை கைவிட்டுட்டியா?”

“நான் ஒண்ணும் அவரை கைவிடலை. ஆனா, வைத்தியலிங்கம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தன்னை கைவிட்டிடுவாங்களோங்கிற பயத்துல ஓபிஎஸ் இருக்கிறார்” என்றவாறு கிளம்பினாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...