No menu items!

ஆகம விதி – மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? – ‘தோழர்’ ஸ்ரீவித்யா – 5

ஆகம விதி – மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? – ‘தோழர்’ ஸ்ரீவித்யா – 5

திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“மெசபடோமியா போன்ற மிகப் பழமையான நாகரிகங்கள் இன்று இல்லை; அழிந்துவிட்டன. உலகளவில் இன்று இருப்பதில் மிகப் பழமையான நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்தான். அதை காப்பாற்றுகிற கடமை அரசுக்கு உள்ளது. அந்த கடமையில் இருந்து அரசு தவறும்போது அரசியலுக்குள் ஆன்மிகம் வரத்தான் செய்யும்” என்கிறார், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இந்திய நாடு என்பது மொழி அடிப்படையிலான மாநிலங்களைக் கொண்டது. எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான, அதாவது இந்தியாவுக்கு என்று ஒரு கலாச்சாரம் கிடையாது. என்ன பொதுவான பண்பாடு இங்கே இருந்தது என்று வரலாற்றில் பார்த்தால் ஒன்றும் இல்லை.

சரி, இவர்கள் வலியுறுத்தும் ‘பெருமைக்குரிய’ கலாச்சாரம் என்பது என்ன?  தீண்டாமைதான். சக மனிதனை சூத்திரன் என்று சொல்லி கோயில் இருக்கும் தெருவுக்குள்கூட வரக்கூடாது, படிக்கக்கூடாது என்று சொன்னதுதான் உங்கள் கலாச்சாரம். பெண்களை அரை நிர்வாணமாக அலையவிட்டதுதான் உங்கள் பண்பாடு. ஒரு பெண் குழந்தைக்கு எட்டு வயதிலேயே திருமணம் செய்துவைத்து, அக்குழந்தையை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியதுதான் உங்கள் பண்பாடு. பெண்களை தெய்வமாக போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் அடிமையாக வைத்திருந்ததுதான் உங்கள் பண்பாடு.

இதைத்தான் துஷ்யந்த் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இந்த பண்பாடுதான் உங்கள் பண்பாடு என்றால் இந்த பண்பாடு நாசமாக போகட்டும். இதையெல்லாம் காப்பாற்ற முடியவே முடியாது. இன்னும் அழியாம அங்கே இங்கே ஒட்டிக்கொண்டு இருப்பதை அழிச்சிதான் ஆகணும்.

பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னபோது, “கூடாது கூடாது; பெண்களுக்கு சொத்து கொடுத்தா அவா வாழ்க்கையை அவாளே முடிவு செய்வா; படிக்க போவா, வாழ்க்கை துணையை அவாளே தேர்வு செய்வா. சுதந்திரமா இருப்பா. எனவே, கொடுக்கக்கூடாது” என்று அதை தடுத்தது இந்த கலாச்சார பாதுகாவலர்கள்தான்.  

பொதுவாக ஆன்மிக அரசியல் தொடர்பான எல்லா விவாதங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒன்று மனுஸ்மிருமி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனுஸ்மிருதி நூலை ஒரு லட்சம் பிரதிகள் அச்சடித்து மக்களிடம் கொடுப்போம் என்று சொன்னபோது அவர்கள் எதிர்த்தார்கள். ஏன் எதிர்க்கிறார்கள்? அப்படி என்னதான் அந்த மனுஸ்மிருதியில் உள்ளது?

மனுஸ்மிருதியை அவர்கள் ஆதரிக்கிறார்கள், நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், எதிர்க்கும் நாங்கள்தான் புத்தகம் போட்டு மக்களிடம் அதைக் கொண்டு சேர்க்கிறோம் என்கிறோம். அது ஏன் அவர்களை கோபப்படுத்துகிறது. அப்படியானால், மக்களுக்கு எதிரான ஒன்று அதில் இருக்கிறது; அது மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என பதறுகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

சரி, மனுஸ்மிருதியில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். வேதம் என்பது ஸ்ருதி. வேத தர்மம்தான் ஸ்மிருதி. அதாவது தர்மங்களை எடுத்து சொல்வது. அந்தவகையில் மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி என்று எல்லாம் உள்ளன. ஒரு மனிதன் இவர்கள் பிரித்துள்ள வர்ணங்களில் எந்த வர்ணத்தில் இருக்க வேண்டும்? அவன் எப்படி இருக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எப்படி ஆடை அணிய வேண்டும்? எந்த தெருவில் நடக்கலாம், எந்த தெருவில் நடக்கக்கூடாது? பிராமணர்கள் நிற்கும் இடத்தில் இருந்து எத்தனை அடி தள்ளி நிற்க வேண்டும்? என்பதெல்லாம் அதில் சொல்லப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பிராமணர்களுக்கு ஆதரவாக, அவர்களே எழுதிக்கொண்ட சட்டம். பிராமணர்களை இந்த உலகில் மிக உயர்ந்தவர்களாக, மனித உருவில் இருக்கும் கடவுளாக காட்டக்கூடிய ஒரு புத்தகம். மக்களை உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று பிரிக்கிற ஒரு புத்தகம்.

ஆணுக்காக, ஆணின் தேவையை நிறைவு செய்வதற்காகவே படைக்கப்பட்டவள் பெண் என்று சொல்லும் புத்தகம் மனுஸ்மிருதி. அதில் ஒரு அத்தியாயத்தில் ‘பெண்களை நன்றாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லப்படுகிறது. இன்னொரு அத்தியாயத்தில், ‘பெண்கள் பிறப்பால் விபச்சார குணமுடையவர்கள். அவர்களை எந்தவகையிலும் திருப்திபடுத்தவே முடியாது’ என்றும் சொல்கிறது.


மூளை இருப்பவன், அறிவு இருப்பவன் இதை கேட்பானா? சக மனிதனை கடவுளாக ஏற்றுக்கொள்வானா? நீ ஏன் என்னை இவ்வளவு தூரம் தள்ளி நிற்கச் சொல்கிறே என்று கேட்பானா மாட்டானா? அதைத்தான் தோழர் திருமாவளவன் கேட்கிறார்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...