தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத் துறையை ஒழிப்பதுதான் என் முதல் பணியாக இருக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருந்தார். இதற்கு எதிர் தரப்பினர் பதில் என்ன? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
கிறிஸ்தவர்கள் சர்ச் அவர்களிடமே இருக்கிறது, இஸ்லாமியர்கள் மசூதிகள் அவர்களிடமே இருக்கிறது; இந்துக்கள் கோயில்களை மட்டும் அரசு எடுத்துக்கொள்வது சரியா என்பது பாஜகவினர் கேள்வி. இதற்கு உங்கள் பதில் என்ன?
அவர்களது இந்த தகவலே பொய்யானது. இஸ்லாமிய மசூதிகள் அரசு கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்து கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்வதுபோல், இஸ்லாமிய மசூதிகளை வக்பு வாரியம் நிர்வாகம் செய்கிறது. இந்த வக்பு வாரியம் இந்தியா முழுவதும் இருக்கிறது. இதை உருவாக்கியதே ஒன்றிய அரசுதான். இந்து கோயில்களில் கொலை, கொள்ளை, ஊழல்கள் நடந்து அது புகாரானதுபோல், மசூதிகளிலும் இவையெல்லாம் நடந்து புகாரானது. இதனால் அரசு அதன் நிர்வாகங்களில் தலையிட்டது.
ஆனால், கிறிஸ்தவர்களின் சர்ச்சுகள் மட்டும் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அவற்றை உருவாக்கிய டிரஸ்ட்களால்தான் நிர்வகிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் இந்து கோயில்களிலும் இஸ்லாமிய மசூதிகளிலும் இருந்து புகார்கள் குவிந்தது போல் இதுவரை சர்ச்சுகளில் இருந்து வரவில்லை. சர்ச்சுகளில் பிரச்சினை இருப்பதாக மக்கள் புகார் செய்தால் அரசு அதிலும் தலையிடத்தான் செய்யும், அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இதேபோல் பாஜகவினரின் இன்னொரு குற்றச்சாட்டு திராவிடர் கழகம் உட்பட கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய கடவுள்களை, அவர்களது நம்பிக்கைகளை விமர்சிப்பதில்லை; இந்து கடவுள்களை, நம்பிக்கைகளை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்பது. நீங்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?
சட்டம் எங்களை இந்துக்கள் என்றுதானே சொல்கிறது. எங்களுக்கு எந்த மதமும் வேண்டாம் என்கிறோம். ஆனால், சட்டம் அதை அங்கீகரிக்க மறுக்கிறதே. அவர்களது பலத்தை பயன்படுத்தி, மதமே வேண்டாம் என்பவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துவிடச் சொல்லுங்கள். நாங்கள் போய்விடுகிறோம்.
இப்போது பிறப்பால் நாங்கள் இந்துகள்தான் என்னும் நிலையில் நாங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பிரச்சினை இருப்பதை பற்றி பேசாமல் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும். இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. ஒரு காலத்தில் கோயில் இருக்கிற தெருவில்கூட யாரையும் விடமாட்டோம் என்று தடுத்து வைத்திருந்தார்கள். அது மட்டுமா, பார்ப்பனர் அல்லாதவர்களை படிக்கவே அனுமதிக்காமல் இருந்தார்களே. சாஸ்திரத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் இது இருந்துகொண்டே இருக்கிறது. இப்படி இருப்பதை பார்க்கும் ஒரு மனிதனால் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும். நாங்கள் கேள்வி கேட்டதால்தானே இப்ப இருக்கிற கொஞ்ச உரிமைகளாவது கிடைத்தது.
‘கோயில்களை மீட்போம்; அரசாங்கமே வெளியேறு’ என்று சொல்றவா எல்லாம், ஏன் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள். தீண்டாமை இருக்கும்வரை நாங்கள் பேசிக்கொண்டேதான் இருப்போம். தீண்டாமை இனியும் இருக்க வேண்டும்; அதன் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறவாகளுக்குதான் நாங்கள் பேசுவதை கேட்க கஷ்டமாக இருக்கும்.