அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதியளித்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்? இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் ஜென்ராம் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார். அவரது இந்த அரசியல் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
அதிமுக கட்சியை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்; நிறுவனராக இருந்தார். அவருக்கு பிறகு அந்த பணியை ஜெயலலிதா முன்னெடுத்துக்கொண்டு சென்றார். இப்போது இவர்கள் இரண்டு பேருமே இல்லை. எனவே, யாராவது ஒருவர் அந்த இடத்தை நிரப்பிதான் ஆகவேண்டும். அந்தவகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, ஆட்சியையும் தக்கவைத்து, கட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த வகையில், எடப்பாடி பழனிசாமியை இந்த பதவிக்கு தகுதியான ஒரு நபராகத்தான் நான் பார்க்கிறேன்.
இது அதிமுகவில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது தமிழ்நாட்டு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பாஜக அல்லாத ஒரு எதிர்கட்சி கூட்டணியை அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமி நிறுவ முயற்சி செய்தால் ஒரு மரியாதைக்குரிய எதிர்கட்சி தலைவராக அவரால் நீடிக்க முடியும். மேலும், தமிழ்நாட்டின் அரசியலையும் 80 சதவிகிதம் வாக்கு வங்கியையும் திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுக்குள்ளும் தொடர்ந்து இருக்குமாறு அவர் உறுதி செய்தால், அது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது.
இந்த இரண்டு கழகங்களும் இல்லாத தமிழகம் என்று அரசியல் செய்ய வருபவர்கள், திராவிடர் கழகம் மற்றும் இந்த இரண்டு கட்சிகளின் சமூகநீதி பார்வையையும் மக்கள் நலத் திட்டங்களையும் கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளாத வேறு விதமான அரசியல் திட்டங்களை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். விரும்பத்தகாத அல்லது வேறு காரணிகளால் நடக்கக்கூடிய ஒவ்வொரு தற்கொலைக்கும் மோதல்களுக்கும் மதச் சாயம் பூசுவதும் அதைவைத்து அரசியல் செய்வதும் பிறழ் நிலைக்கு தமிழ்நாடு அரசியலை கொண்டு சென்றுவிடும். எனவே, அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது. தமிழ்நாட்டின் அரசியல் களம், ஆயிரம் குறைகளுடன் இருந்தாலும் திமுக, அதிமுகவுடன் மட்டும்தான் இருக்க வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்று தெரிகிறது. அவர் பாஜக பி டீமாக செயல்படமாட்டார் என்கிற அனுமானத்தின் அடிப்படையில்தான் இதையெல்லாம் சொல்கிறேன். இந்த அனுமானம் தவறாக போனால் நான் இப்போது சொல்லும் எல்லாமே தவறாக போவதற்கான வாய்ப்பும் அதற்குள் உள்ளது.
பாஜகவிடமிருந்து அதிமுக தள்ளிச் செல்வதாக இப்போது ஒரு கருத்து இருக்கிறது. இன்னொரு பக்கம் நீங்கள் விரும்புவதுபோல், திமுக – அதிமுக என்று தமிழ்நாடு அரசியல் இருப்பதைத்தான் இந்த இரண்டு பெரிய கட்சிகளின் முன்னணி தலைவர்களும் விரும்புகிறார்கள், அதை வெளிப்படையாக சொல்லவும் செய்கிறார்கள். ஆனால், இப்படி நீடிக்க பாஜக அனுமதிக்குமா?
பாஜகவினர் இரண்டுவிதமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அமைச்சர் எல். முருகன், அதிமுகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; கூட்டணி தொடரும் என்கிறார். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனித்து போட்டியிடவே கட்சியில் எல்லோரும் விரும்புகிறார்கள்; களத்தில் இறங்கி பார்க்கவேண்டும். யாருக்காவது சாமரம் வீசிக்கொண்டே இருக்க முடியாது என்கிறார். இந்த இரண்டுமே பாஜக மேலிடத்தின் சொல்படிதான் நடக்கிறது. இறுதியில் அவர்களுக்கு அனுகூலமான ஒரு ஒப்பந்தத்தை எடப்பாடி பழனிசாமியுடன் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிற நிலை வரும்வரை இது தொடரும்.
ஓ.பன்னீர்செல்வம் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும்? சசிகலாவுடன் அவர் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?
வாய்ப்புள்ளது. வரலாற்று விநோதங்கள் எல்லாம் இப்படித்தானே நடக்கிறது. சசிகலா, டிடிவி தினகரன் தலைமையை எதிர்த்து வெளியே போய் தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்தான். இப்போது இவர்கள் எல்லோருமே சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவருக்கு எதிராக ஒன்று சேரும் சூழல்.
இதில் திமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என கணிக்கிறீர்கள். சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க வேண்டியதுள்ளது?
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அளித்த மனு மீது லோக்சபா சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை. ராகுல் காந்தி விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் முடிவெடுத்தவர்கள் இந்த விவகாரத்தில் மெளனமாக இருக்கிறார்கள். லோக்சபா சபாநாயகர் முடிவெடுக்கவில்லை என்பது தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு முடிவெடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒருவேளை, தமிழ்நாடு அரசியல் களம் திமுக – பாஜக என்று மாறுவது திமுகவுக்கு வெற்றிபெற வசதியாக இருக்கும் என்றுகூட அவர்கள் நினைக்கலாம். ஆனால், அது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்பது என் கணிப்பு.