“ஆளுநர் ரவி மேல முதல்வர் ரொம்பவே கோபமா இருக்காராம்” என்றபடி ஆபீசுக்குள் என்ட்ரி ஆனாள் ரகசியா.
“ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் விவகாரத்துலயா?”
“அந்த விவகாரம்தான் பல நாளா புகைஞ்சுட்டு இருக்கே. இது வேற விஷயம். தலைமை செயலாளர் இறையன்பு இன்னும் சில நாட்கள்ல ஓய்வுபெறப் போறார். அவரை அவ்வளவு சீக்கிரம் விடறதுக்கு முதல்வருக்கு மனசு இல்லை. அதனால தலைமை தகவல் ஆணையர் பதவியில அவரை நியமிக்க முடிவெடுத்திருக்கார் முதல்வர். இந்த பதவிக்கு அவரை பரிந்துரை செய்யற ஃபைலையும் ராஜ் பவனுக்கு அனுப்பி இருக்கார். ஆனால் ஆளுநர் ஒப்புதல் கொடுக்கறதா இல்லை. ‘இறையன்புவை நீங்க தேர்ந்தெடுக்க காரணம் என்ன? அந்த பதவிக்கான தகுதி அவருக்கு இருக்கா? இந்த பதவிக்கு வேற யாராவது விண்ணப்பம் செஞ்சிருக்காங்களா? அந்த விண்ணப்பங்களை எதுக்காக நிராகரிச்சீங்க’ன்னு ஏகப்பட்ட கேள்விகளை ஆளுநர் மாளிகை தமிழக அரசுகிட்ட கேட்டிருக்கு. இதைக் கேள்விப்பட்ட இறையன்பு, எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் ரிட்டயர்ட் ஆகி வீட்டுக்கு போறேன்னு சொல்லியிருக்கார். ஆனா முதல்வர் விடல. நீங்கதான் இந்த பதவிக்கு வரணும். அதைப்பத்தி நான் பார்த்துக்கறேன்னு சொல்லி ஆளுநரோட அடுத்த கட்ட மோதலுக்கு தயாராகிட்டு இருக்கார்.”
“ஆளுநர் ரவி அமித் ஷாவை சந்திச்சிருக்காரே? இது விஷயமாதானா?”
“அது மட்டும் இல்லை. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற அதிகாரம் இருக்குன்னு மத்திய அமைச்சர் ஒருத்தர் சொன்னதை ஆளுநர் ஆட்சேபிச்சிருக்கார். அதுக்கு அமித் ஷா, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள்ல இருக்கற ஆளுநர்கள் அங்க இருக்கிற அரசுகளுக்கு எதிரா இருக்காங்கனு உச்ச நீதிமன்றம் நினைக்க ஆரம்பிச்சிருக்கு. அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கன்னு கவர்னர் ரவிக்கிட்ட சொல்லி இருக்காரு.”
“அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொன்னாங்களே…எதுவும் நடக்கலையே?”
“கவர்னரோட இருக்கிற மோதல் முடிவுக்கு வந்த பிறகுதான் அமைச்சரவையில மாற்றம் செய்யணும்னு அவர் நினைக்கிறார். அதுக்கப்புறம்தான் அமைச்சரவை மாற்றமாம்”
“அப்போ இப்போதைக்கு அமைச்சரவை மாற்றம் இல்லைனு சொல்ற”
”அப்படி இல்லை. அவருக்கு சில அமைச்சர்களோட நடவடிக்கைகள் பிடிக்கல். குறிப்பா ஆவடி நாசர். அவர் வச்சிருக்கிற பால்வளத் துறைல ஏகப்பட்ட குளறுபடிகள்னு முதல்வர் காதுக்கு நியூஸ் போயிருக்கு. அதனால் ஆவடி நாசரோட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இன்னொரு எம்எல்ஏவுக்கு அந்த பதவியைக் கொடுப்பாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு.”
“ஆவடி நாசரை மாத்துவாங்கனு சொல்ற. பாஜகவுல அண்ணாமலையை மாத்துவாங்கனு சொல்றாங்க. ஆனா இப்ப சில மாநிலத் தலைவர்களை மாத்தியிருக்காங்க ஆனா அண்ணாமலையை மாத்தலையே.”
“பொதுவா பாஜகவில் மாநிலத் தலைவரோட பதவிக் காலம் 3 வருஷம் அதனால திடீர்னு மாத்தமாட்டாங்க. அதுமட்டுமில்லாம, இப்போதைக்கு அவரை மாத்த வேண்டாம்னு கட்சித் தலைமை நினைக்குது”
“அண்ணாமலையை மாத்தக் கூடாதுனு கட்சித் தலைமை நினைக்குதுனு சொல்ற..ஆனா டெல்லிக்கு கூப்பிட்டு டோஸ் விட்டார்கள்னு நியூஸ் வந்தததே?”
“ஆமா அந்த செய்தி உண்மைதான்னு பாஜக ஆபிஸ்ல சொல்றாங்க. அண்ணாமலை முன்ன மாதிரி ஃப்ரீயா முடிவுகள் எடுக்க முடியாதாம். அடுத்த மாசம் அண்ணாமலை தொடங்கறதா இருந்த நடைப் பயணத்தைக்கூட தள்ளிவைக்க சொல்லிட்டாங்களாம். அமித் ஷாவை சந்திச்சப்ப தமிழக அரசியல் பத்தி அண்ணாமலை சொல்ல வர, ‘நீங்க முதல்ல கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் வேலையைப் பாருங்க. மத்ததையெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்’னு சொல்லி இருக்கார் அமித் ஷா.”
“அண்ணாமலை மேல தமிழக பாஜக பொறுப்பாளர் கேசவ விநாயகமும் கோபமா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”
“அண்ணாமலை தன்னை கலந்து ஆலோசிக்காமலேயே முடிவுகளை எடுக்கறாங்கிற கோபம் கேசவ விநாயகத்துக்கு. அதனால தனக்கு ஆதரவா இருக்கற ஆர்எஸ்எஸ் தலைவர்கள்கிட்ட ‘தமிழக பொறுப்பாளரான என்னை சந்திக்கறதை அண்ணாமலை தவிர்க்கிறார். நிர்வாகிகளுடன் அவர் தொடர்பிலயே இல்லை. அவங்களா அண்ணாமலையை செல்போன்ல தொடர்புகொண்டு பேசினாலும் சரியா பதில் சொல்றதில்லை. எல்லா முடிவுகளையும் தன்னிச்சையா எடுக்கறார்’னு புகார் சொல்லியிருக்கார். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்த விஷயத்தை டெல்லி தலைமைகிட்ட எடுத்துட்டு போயிருக்காங்க. பதிலுக்கு அண்ணாமலையும் கேசவ விநாயகத்தை பதவியில இருந்து மாத்த முயற்சி பண்ணிட்டு இருக்கார். ‘ தமிழக பொறுப்பாளரா கேசவ விநாயகத்தை நியமிச்சு 6 வருஷம் ஆச்சு. அதனால அவரை அந்த பதவியில் இருந்து மாத்தணும்’னு டெல்லி தலைமைக்கு அண்ணாமலை கோரிக்கை வச்சிருக்கார். அதுக்கு டெல்லி தலைமை, ‘கேசவ விநாயகத்தை மாத்தற அதிகாரம் எங்ககிட்ட இல்லை. அதை ஆர்எஸ்எஸ்தான் முடிவு செய்யும்னு சொல்லி இருக்காங்க.”
“வழக்கமா மத்திய அமைச்சர்கள் கலந்துக்கற விழாவுல பாஜக மாநில தலைவர்ங்கிற முறையில அண்ணாமலை கலந்துக்குவாரே. இந்த முறை சென்னையில நடந்த பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா அமைக்கும் திட்ட தொடக்க விழாவுக்கு பியூஸ் கோயல் வந்தப்ப அண்ணாமலை கலந்துக்கலையே?”
“அந்த விழா நடந்த அன்னைக்கு அண்ணாமலை சென்னையிலதான் இருந்தார். ஆனா அவர் அதிமுகவுக்கு ஆதரவா செயல்படறதாலையும், எடப்பாடிக்கு ஆதரவான தலைவர்ங்கிறதாலயும் அண்ணாமலை அதுல கலந்துக்கலைன்னு சொல்றாங்க.”
“உண்மையான அதிமுக யாருங்கிற மோதல் சட்டசபையில எதிரொலிச்சிருக்கே?
“இந்த பிரச்சினைக்காக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செஞ்சிருக்காங்க. அப்ப கே பி முனுசாமி, ‘பேரவைத் தலைவரே அவரை முன்னாள் முதல்வர்ங்கிற முறையில் பேச அழைச்சதா சொல்லி இருக்காரு. அப்படி இருக்கும்போது அவரை நாம பேச விடாம இருக்கறது சரியில்லை. எப்படியும் அவர் திமுக அரசுக்கு ஆதரவாத்தான் பேசப் போறாரு. அப்படி பேசினா நமக்கு நல்லதுதானே?’ன்னு எடப்பாடிகிட்ட சொல்லி இருக்கார் எடப்பாடியும் அதுக்கு தலையாட்டினாராம்”
“பொதுவாய் தலையாட்டி பொம்மை ஓபிஎஸ்தானே. இப்ப எடப்பாடியும் தலையாட்டுறாரா?”
“இதுக்கு என்கிட்ட பதில் இல்லை’ என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.