தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அழுத்தமாக சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலை சொன்ன கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
”எண்ண ஓட்டங்கள் சில என் மனதில் இருக்கு. ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் கூட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு க்ளீன் பாலிடிக்ஸ்க்கான நேரம் வந்துவிட்டது என்னுடைய ஆணித்தரமான நம்பிக்கை.
க்ளீன் பாலிடிக்ஸ்கான அச்சாரம் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது. பணம் கொடுத்து தேர்தலைச் சந்தித்துவிட்டு நாங்கள் உன்னதமான அரசியலை செய்கிறோம் என்று சொன்னால் மக்கள் எள்ளி நகைப்பார்கள்.
அரசியல் மாற்றம்னு சொல்லும்போது அரசியல் யுக்திகள் க்ளீனா இருக்கணும்னு விருப்பப்படுறேன். அதனால சில கருத்துக்களை கட்சி தலைவர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.உறுதியாகவும் இருக்கிறேன்.
அரசியல் தளத்தில் மிகப் பெரிய மாற்றத்துக்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். நேர்மையான அரசியலுக்கு காத்திருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்காத ஒரு அரசியலுக்கு காத்திருக்கிறார்கள். இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.
நான் அரசியல்ல இதுக்கு மேல இருக்க வேண்டுமென்றால், அரசியல்வாதியாக இருக்க வேண்டுமென்றால் இந்தப் பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க ஆரம்பித்துவிட்டேன். என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அப்படி மாற்றிதான் அரசியல்ல இருக்கணும்னா அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தேவையில்லை என்கிற முடிவுக்கு நான் வந்துட்டேன். மக்கள்கிட்ட போய் சிறுக சிறுக ஒரு ஒரு ஓட்டா சேர்ந்தாலும் கூட சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல அது பெரிய வெள்ளமாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அரசியல் என்பது நேர்மையாக, நாணயமாக – பணமில்லாத ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லாட்டி தமிழகத்துல மாற்றம் என்பது ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நடக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
நான் என்னை தனிமனிதனாக வைத்து சொல்றேன். அரசியல் மாற வேண்டும், நேர்மையான அரசியல் இங்கு வர வேண்டும். அதற்கு 2024 தேர்தல் அச்சாரமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.”
இவையெல்லாம் நேற்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது.
இதில் சில விஷயங்களைத் திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறார். க்ளீன் பாலிடிக்ஸ், ஓட்டுக்குப் பணம், தனி மனிதனா பேசுறேன், நேர்மையான அரசியலுக்கு மக்கள் தயாரா இருக்காங்க, தனிப்பட்ட கருத்து…இப்ப இல்லைனா எப்பவும் இல்லை – இவையெல்லாம்தான் அவருடைய பேட்டியின் முக்கிய அம்சங்கள்.
இந்தக் கருத்துக்களையெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு நாம் கேட்டிருக்கிறோம். அதை பேசியவர் தமிழ்நாட்டின் மிக முக்கியமானவர். மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.
”அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சு… ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சு.
ஒரு அரசியல் மாற்றம் ரொம்பக் கட்டாயம். மாற்ற வேண்டும். அனைத்தையும் மாற்ற வேண்டும். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை.
சிஸ்டமை மாற்றணும். உண்மையான, நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஜாதி, மத சார்பற்ற, ஒரு ஆன்மீக அரசியலை கொண்டு வரணும். அதுதான் என்னுடைய நோக்கம்”
இரண்டு மூன்று வருடங்கள் பின்னால் போனால் இந்தக் கருத்துக்களை யார் சொன்னது என்பது நினைவுக்கு வரும்.
இப்படி பேசியது அரசியலுக்கு வருவதாய் சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அரசியல் மோசமாக இருக்கிறது, மாத்தணும், இப்ப மாத்தலைனா எப்பவும் மாத்த முடியாது, சிஸ்டம் சரியில்லை…இவையெல்லாம் அன்று ரஜினி பேசிய வசனங்கள். நேற்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.
அண்ணாமலை பாஜகவினால் உருவாக்கப்பட்ட ஒருவர். ரஜினியும் பாஜகவினால் உருவாக்கப்பட்டவர் என்ற கருத்தும் பலருக்கு உண்டு. அண்ணாமலையின் அரசியல் வருகையும் ரஜினியின் அன்றைய அரசியல் அறிவிப்புக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. சிறந்த திரைப்படத்தின் தேர்ந்த திரைக்கதை போல் அவை இருக்கும்.
சின்னதாய் ஒரு ஃப்ளாஷ் பேக் பார்ப்போம்.
கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை திடீரென்று வேலையை ராஜினாமா செய்கிறார். விவசாயம்தான் என் உயிர் என்கிறார். ஆடு, மாடு கோழி வளர்க்கிறார். விவசாயத்தை வளர்ப்போம்..காப்போம் என்று ஆடுகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டு பேட்டியளிக்கிறார். அவரைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வளர்கின்றன. ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்துக்கு திரும்பிய நேர்மையாளர் என்ற பிம்பம் அவர் மீது கட்டமைக்கப்படுகிறது.
இதே காலக் கட்டத்தில் நடந்த வேறு சில நிகழ்வுகளையும் நாம் பார்க்க வேண்டும். 2016ல் ஜெயலலிதா மறைகிறார். 2017 இறுதி நாளில் கட்சித் துவங்குவதாக ரஜினி அறிவிக்கிறார். 2018ல் கருணாநிதி மறைகிறார். 2019 மே மாதம் அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்கிறார். 2020 பிப்ரவரியில் நாட்டை மாற்ற வேண்டும், விவசாயத்தைக் காக்க வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார். இந்தப் பின்னணியில் 2020 மார்ச் மாதம் நான் முதல்வர் இல்லை, படித்த நல்ல இளைஞர்தான் முதல்வர் என்று ரஜினி அறிவிக்கிறார்.
’நான் முதல்வர் அல்ல, படித்த நல்ல இளைஞர்தான் முதல்வர்’ என்ற ரஜினியின் வார்த்தைகளை அடிகோடிட்டு பார்க்க வேண்டும். அந்த வார்த்தைகளில் உள்ள பிம்பம் அண்ணாமலை என்ற பிம்பத்துடன் ஒத்துப்போகும்.
ஆனால் ரஜினி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தது திரைக்கதையின் ஆண்டி க்ளைமேக்ஸ். ரஜினியின் அரசியல் இல்லை அறிவிப்புக்குப் பிறகு 2020 ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைகிறார் அண்ணாமலை.
இவையெல்லாம் தனித் தனியே நடந்த நிகழ்வுகள் என்றாலும் அந்த நிகழ்வுகளின் சூழலை ஆராய்ந்து பார்த்தால் அதில் ஒரு தொடர்பைக் கண்டுக் கொள்ள முடியும். நல்ல திரைக்கதை இருப்பதை பார்க்க முடியும்.
இப்போது அண்ணாமாலையின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, ரஜினிக்கு எழுதப்பட்ட திரைக்கதை அண்ணாமலை மூலம் மீண்டும் உயிர்பெறுகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
சமீபத்தில் நடந்த தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுக கூட்டணி வேண்டாம், தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது.
பாஜகவுக்குள்ளேயே இது விமர்சனங்களை எழுப்பியது. ‘இது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து’ என்றார் தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
’அதிமுகவுடன் பாஜக மோதுவது தேவையில்லாதது’ என்று கூறினார் கட்சியின் முன்னணி தலைவர் வானதி சீனிவாசன்.
இந்த விமர்சனங்களுக்கு நடுவேதான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அந்த சந்திப்பில்தான் சிஸ்டமை மாற்ற வேண்டும் க்ளீன் அரசியல் வேண்டும் வசனங்கள் வெளிவந்தன.
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டு அரசியலில் பாஜக முட்டி மோதிப் பார்க்கிறது. ஆனால் அதன் வாக்கு சதவீதம் பெரிய அளவில் முன்னேறவில்லை. மக்கள் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கூட்டணிகளுடன் தான் வெற்றி பெற வேண்டியிருக்கிறது. கூட்டணிகளும் பாஜகவுடன் இணக்கமாக இல்லை. குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
பாஜக தனித்துப் போட்டியிட்டால் பல தொகுதிகளில் டெபாசிட் வாங்குவதே சிரமம் என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக பெரிதும் நம்பியிருந்த ரஜினியும் கை கொடுக்கவில்லை.
அப்படியென்றால் மாற்று?
அண்ணாமலைதான் என்று எண்ண வேண்டியிருக்கிறது. அண்ணாமலை தனித்து வந்தால் வாக்குகள் கொட்டுமா என்ற கேள்வி எழலாம். கொட்டாது. ஆனால் கொட்ட வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நேர்மையான அதிரடித் தலைவராக அண்ணாமலை பிம்பம் கட்டமைக்கப்படும். வியூகங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் மாற்று சக்தியாக அண்ணாமலை உருவாக்கப்படுவார், பாஜக என்ற வெளிப்புற அடையாளம் இல்லாமல்.
2002ல் குஜராத்தில் உருவாக்கப்பட்ட நரேந்திர மோடி 2014ல் பிரதமரானார். அதற்கான சூழலும் ஊழல் எதிர்ப்பு என்ற தளமும் அரவிந்த் கெஜ்ரிவால், அனா ஹசாரே போன்றவர்களால் அமைத்து தரப்பட்டது. ஊழலுக்கு எதிராக போராடிய அந்த தாத்தா இன்று என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் உருவாக்கப்பட்டார். மோடி வளர்ச்சியின் நாயகன் என்றால் யோகி ஆதித்யநாத் இந்துக்களின் நாயகன் என்று கட்டமைக்கப்பட்டார்.
பாஜகவின் திட்டங்கள், வியூகங்கள் எவையும் குறைந்தக் கால திட்டங்கள் அல்ல. நீண்டகால விஸ்தாரமான திட்டங்கள். அதனால்தான் அந்தக் கட்சி பலத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கிறது.
பாஜகவினால் சொந்த செல்வாக்கில் உள்ளே நுழைய இயலாத மாநிலங்களில் அந்த மாநிலத்தில் உள்ள பலம் வாய்ந்த பிறக் கட்சிகளை உடைத்தும் பிளந்தும், அந்தத் தலைவர்களை உள்ளுக்குள் இழுத்தும், வெளியில் இருந்து ஆதரித்தும்தான் பாஜகவை வளர்த்திருக்கிறார்கள். பீகார், மகாராஷ்டிரா, கோவா, வட கிழக்கு மாநிலங்கள் என பல உதாரணங்கள் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் அப்படியொரு திரைக்கதையின் கதாபாத்திரமாக ரஜினி இருந்திருக்கலாம். ஆனால் திரையில் ஜொலித்த அந்த கதாபாத்திரம் அரசியலில் அடியெடுத்து வைக்க முடியவில்லை.
இப்போது ரஜினி பேசிய அதே வசனங்களை – தூய்மையான நேர்மையான அரசியல் – என அண்ணாமலை பேசத் துவங்கியிருக்கிறார்.
விரைவில் பாஜகவிலிருந்து அண்ணாமலை வெளியில் வரலாம். நேர்மை என்ற அரசியலை துவங்கலாம், மாற்று அரசியல் என்று முன்னெடுக்கலாம், அதற்கு ரஜினி வாய்ஸ் கொடுக்கலாம். திராவிடக் கட்சிகளுக்கு எதிரான புதிய திரைக்கதை எழுதப்படலாம்.
அப்படியென்றால் தமிழ்நாட்டு பாஜக என்னவாகும்?
அப்படியே பயணிக்கும். பிற்காலத்தில் அண்ணாமலை அரசியலுடன் கூட்டணி வைக்கும்.
இப்படியெல்லாம் நடக்குமா?
மேலிட ஆதரவு இல்லாமல் நிர்வாகிகள் குழுவில் கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசியிருக்க முடியாது. மேலிடத்துக்கு தெரியாமல் செய்தியாளர்களிடன் தன் தனிப்பட்ட கருத்து என்று மாற்று அரசியல் குறித்து பேசியிருக்க முடியாது. மேலிடம் சொல்லாமல் என் வழி இது என்று முடிவு செய்துவிட்டேன் என்று அண்ணாமலையால் கூற முடியாது.
ஏன் முடியாது என்பதற்கு எளிமையான ஒரே காரணம்தான். மேலிடம்தான் அண்ணாமலையை உருவாக்கியது. அண்ணாமலையின் பாதையை அவர்கள்தாம் தீர்மானிப்பார்கள்.