திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இங்கே.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
மு.க. ஸ்டாலின் தேசிய அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். சிலர் அவரை பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜகவினர் விமர்சனம் வைக்கிறார்களே? தேசிய அரசியலே தெரியாதவர் தேசிய அரசியலுக்கு வர முடியுமா என்று முதல்வர் ஸ்டாலினைக் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறாரே?
திராவிட முன்னேற்ற கழகம் இதுவரை தேசிய அரசியலில் பங்கெடுக்கவில்லை என்றால் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், திமுக தேசிய அரசியலில் பங்கெடுத்து, திமுகவினர் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். இந்த கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்து ஐம்பதாண்டு காலம் அரசியலை ஊன்றி கவனித்தவர், மு.க. ஸ்டாலின். திமுக எப்போதெல்லாம் மத்திய அரசில் பங்கெடுத்துள்ளதோ அப்போதெல்லாம் திமுகவின் ஆளுமைமிக்க இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார். மாநில அமைச்சராக இருந்தார். பின்னர் அந்த கட்சியின் தலைவராக இருக்கிறவர்; இப்போது முதலமைச்சராகவும் இருக்கிறவர். இவ்வளவு பின்புலம் இருக்கிறவருக்கு தேசிய அரசியல் தெரியாது என்று சொல்வது அறிவின்மை, முட்டாள்தனம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமா? அதற்கு திமுக என்ன திட்டம் வைத்திருக்கிறது?
பிரதமர் மோடி தெரிந்தோ தெரியாமலோ வெகுளித்தனமாக இதற்கான பதிலை நாடாளுமன்றத்திலேயே உளறிவிட்டார். நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து எங்களை எதிர்ப்பதற்கு காரணம் ED என்று சொல்லிவிட்டார். ED-ஐ நான்தான் போடுகிறேன் என்பதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். அமலாக்கத்துறை சோதனை, வருமானவரி சோதனை, சிபிஐ – இந்த மூன்றுக்காகவும் இன்று எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆனால், திமுகவோ எங்கள் தலைவரோ ஆ. ராசாவோ ஒரு காலமும் இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். இந்த எதிர்ப்புணர்ச்சி இங்கே இருக்கிற காரணத்தாலேதான், இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கிற எதிர்கட்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதிமிக்க தலைவராக இன்று ஸ்டாலின் இருக்கிறார்.
நீங்களும் இந்த சோதனைகளை எல்லாம் சந்தித்தவர். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த மிகப் பெரிய சவால் 2ஜி வழக்கு. 2ஜி வழக்கு சமயத்தில் கிட்டத்தட்ட இந்தியாவே உங்களை எதிர்த்தது. அந்தக் காலகட்டத்தில் உங்கள் மன உறுதிக்கு காரணமாக இருந்தது எது?
முழு முட்டாள்தனம், போலித்தனம். 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி எங்கே போனது? 15 வருடங்களுக்கு முன்பே எந்தெந்த நிறுவனங்களில் சொத்துகளில் எல்லாம் சோதனை செய்து இவற்றுக்கும் 2ஜிக்கும் ஆ. ராசாவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றார்களோ, அந்த இடங்களில் எல்லாம் இப்போது மீண்டும் சோதனை செய்கிறார்கள். எதிர்கட்சிகளை முடக்குவதற்காகவே இதை செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் இதற்கு பதில் சொல்வார்கள். அதற்கு தலைமை தாங்குகிற பொறுப்பை மு.க. ஸ்டாலின் ஏற்பார்.