சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அதன்படி, இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ஆம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று விளக்கம் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “சென்னையில் தனியார் மாநகரப் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல். 1,000 தனியார் பேருந்துகளை இயக்க அதிமுக ஆட்சியில் உலக வங்கி பரிந்துரைத்தது. தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்யவே டெண்டர். தனியாரிடம் பேருந்து வாங்கி அரசுத் தடத்தில் இயக்கவே திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது, எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம். எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதிமுக வலிமையுடனும் சிறப்புடனும் மக்களை நேசிக்கின்ற இயக்கமாக இருக்கும். பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும். அதிமுக தனது கொள்கையில் தெளிவாக உள்ளது. சிறுபான்மையினரை காக்கின்ற இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது” என்றார்.
உத்தரகாசியில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சமயலறையில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்து சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5 புள்ளிகளாக பதிவாகியது. உத்தகாசி மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்துக்குப்பின் தொடர்ந்து இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது.
அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பில் காயம்
அமிதாப் பச்சன் நடிக்கும் ‘புராஜெக்ட் கே’ என பெயரிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். இதில் சண்டைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பின்போது அமிதாப் பச்சனின் வலதுபக்க இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பை ரத்து செய்யப்பட்டு, அமிதாப்பச்சன் ஐதராபாதில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றபின் டாக்டர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுக்க அவர் சொந்த ஊர் திரும்பினார். இப்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த விவரங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அமிதாப்பச்சன், “மூச்சு விடும்போதும் நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது. ரசிகர்கள் யாரும் பார்க்க வரவேண்டாம்” என்று கேட்டு கொண்டுள்ளார்.
நாகாலாந்தில் அனைத்து கட்சிகளும் என்டிபிபி – பாஜக கூட்டணிக்கு ஆதரவு
நாகாலாந்து மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் இதில் என்டிபிபி- 25, பாஜக-12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. என்சிபி-7, என்பிபி-5, எல்ஜேபி (ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்), ஆர்பிஐ (அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஜேடி(ஐ) ஒரு இடத்திலும், சுயேட்சைகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வெற்றி பெற்ற பிற கட்சிகள் தங்களின் நிபந்தனையற்ற ஆதரவினை அளிக்க முன்வந்துள்ளன. தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளும், என்டிபிபி – பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், நாகாலாந்தில் மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி ஆட்சி அமைய உள்ளது. கடந்த 2015 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஆட்சி அமைத்த பிறகு எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவானது. ஆனால், இம்முறை ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவாகி உள்ளது.