எதிர்பார்த்த முடிவு என்றாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெற்ற லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் டெல்லி வரை திடுக்கிட வைத்திருக்கிறது. ‘பணநாயகத்தின் வெற்றி’ என்று அதிமுக தரப்பில் சொன்னதை அந்த கட்சியின் தொண்டர்களே ரசிக்கவில்லை. திமுகவின் கடும் உழைப்பே இந்த பெரும் வெற்றிக்கு காரணம் என்பது அவர்களது கருத்து. அடையாளம் காட்டப்பட்ட பகுதிகளில் அதிமுகவும் வாரி வழங்கவே செய்தது.
தொகுதியில் வேட்பாளர்களைவிட பெரும் வரவேற்பை பெற்றது பணம்தான். பல பகுதிகளில் கட்சிகளின் கார் பவனி வந்தபோது “காசு, பணம், துட்டு” என்ற திரைப்படப் பாடல் ஓலித்தது. விஷமக்கார இளைஞர்கள் கைவரிசை. ‘இது தேர்தல் கீதம் சார்’ என்று சிரித்தார்கள். ஓட்டு கேட்டு வருபவர்களை டீஸ் செய்யும் மனநிலையைப் பார்க்க முடிந்தது.
பணம் தேர்தலில் எப்படி புகுந்தது? நதிமூலம், ரிஷிமூலம் போலத்தான் இதுவும். கண்டறிய முடியாது. ஓரு சில பணம் படைத்த வேட்பாளர்கள் ஆரம்பித்து – சிறியதாக தொடங்கி – இப்போது நீக்கமற பரவிவிட்டது.
“தேர்தலில் வெற்றி பெற எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவு கட்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. வசதி படைத்த, லட்சியம் ஏதுமற்றவர்கள் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டதால் இந்த விபரீதம்” என்றார் 90 வயது நிரம்பிய அரசியல்வாதி. இதை ஆரம்பித்து வைத்தது காங்கிரஸ்தான் என்பது அவர் கருத்து.
1962-ல் காஞ்சிபுரத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் இதற்கு ஓர் உதாரணம். அறிஞர் அண்ணா போட்டியிடுகிறார். காங்கிரஸ் அவரை எதிர்த்து நிறுத்தியது பஸ் அதிபர் நடேச முதலியாரை. பணக்காரர்! தொகுதியில் அதிக வாக்குகள் உள்ள சமூகத்தைக் கொண்டவர் என்பது காரணம்.
அறிஞர் அண்ணாவை தோற்கடித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தது தமிழக காங்கிரஸ் அமைச்சரவை. காரணம் இருந்தது.
சட்டமன்றத்தில் தேசிய ஓருமைப்பாடு தீர்மானத்தின் மீது விவாதம். பிரிவினை தடைச் சட்டம் வருவதற்கு முன்னோடியாக ஓவ்வொரு மாநிலத்திலும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தபோது, அதை நிராகரித்து திராவிட நாடு பற்றி பேசினார் அறிஞர் அண்ணா. கப்சிப் என்று அவை கேட்டது. அவை முன்னவர் சி.எஸ். தனது பதிலுரையில் “திராவிட நாடு கோரிக்கை வைத்து தேர்தலில் நிற்பீர்களா” என சவால் விட்டார். அதனால்தான் அறிஞர் அண்ணாவை தோற்கடிக்க சபதம் பூண்டு களத்தில் இறங்கியிருந்தது காங்கிரஸ்.
நடேச முதலியார் வாக்காளர்களுக்கு பணம் தருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. எவ்வளவு? 5 ரூபாய், வெற்றிலைப் பாக்கு, பழங்கள், பூ அதோடு ஏழுமலையான் படம். வீடுகளில் ‘இந்த காம்போ’ தரப்பட்டதுடன் ஏழுமலையான் படத்தின் மீது சத்தியம் செய்யச் சொன்னார்கள் என்பது குற்றச்சாட்டு.
அதோடு, பலவிதமான முயற்சிகள்.
அப்போதெல்லாம் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. ஓரே வாக்குச்சீட்டு. வலதுபுறம் நாடாளுமன்றத்திற்கு இடதுபுறம் சட்டமன்றத்துக்கு.
நாடாளுமன்ற பிரிவில் அண்ணாதுரை என்று இரண்டு பெயர்கள். சட்டமன்ற பிரிவில் இருக்கும் சி.என். அண்ணாதுரை பெயரோடு குழப்பம் ஏற்படுத்த இரு சுயேட்சைகள் எம்.பி. தொகுதிக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு? இந்த பெயர் குழப்பம் குறித்து பிரச்சார மேடையில் ராஜாஜி எச்சரித்தார்.
அநியாயமாக 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அண்ணா தோற்றார். “இப்படி தேர்தலில் துவக்கி வைத்த சாதி, பணம் என்ற சிறு பொறி காலப்போக்கில் எல்லா கட்சிகளையும் பற்றியது ” என்று கடந்தகால நிகழ்வுகளை வர்ணித்தார் 90 வயது முதிய அரசியல்வாதி.
அடுத்து வந்த தேர்தல்களில் பிளாஸ்டிக் குடங்கள் பரிசுப் பொருட்களாக தரப்பட்டன. அப்போது தண்ணீர் கஷ்டம் இருந்தது. அது எவர்சில்வர் குடங்களாக, பின்னர் எவர் சில்வர் டிபன் பாக்ஸ்களாக மாறின. டிபன் பாக்ஸ்களில் 100 ரூபாய் வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி தேர்தல்களில் இதன் சோதனை ஓட்டம் நடந்தது.
இது தேர்தலில் பணம் பாய்ந்த வரலாறு. இப்போது காட்டாறாக மாறிவிட்டதே!
“ஆனால் பணத்துக்காக ஓட்டு போடும் எண்ணம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. “இருக்கிறது கொடுக்கட்டும்” என்கிறார்கள். ஆனால் மக்கள் தங்கள் விருப்பப்படிதான் ஓட்டு போடுகிறார்கள். அது ஓரு வகையில் நல்லது என்று முடித்தார் முதியவர். தேர்தலில் இந்த நல்ல மாறுதல் நடப்பதை பார்க்க உயிரோடு இருக்க விரும்புகிறார்.