No menu items!

ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்!

ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்!

’எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ,
அதில் எந்த எட்டில் இப்போ இருக்கே நெனைச்சுக்கோ’

மனிதனின் வாழ்க்கைக் கணக்கை புட்டுப் புட்டு வைக்கும் இந்த ‘பாட்ஷா’ பட பாடல் வரிகளில் கெத்தாக மாஸ் காட்டியிருப்பார் ரஜினிகாந்த்.

மனித வாழ்க்கையை இப்படி எட்டு எட்டாகப் பிரிக்கலாம்தான்.

ஆனால் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாக பிரித்தாலே போதுமானது.

’சந்திரமுகி’க்கு முன்

’சந்திரமுகி’க்குப் பின்

அவ்வளவுதான். சாட் ஜிபிடி ஏஐ வெப்சைட்டில் தட்டிவிட்டது போல் பரபரவென வந்து நிற்கிறது ரஜினியின் சினிமா கேரியர் டேட்டா.

‘சந்திரமுகி’க்கு முன், ரஜினி நடித்த படம் வெளியாகிறது என்றால், ரிலீஸாகும் அந்த தேதிதான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தீபாவளி. விநியோகஸ்தர்களுக்குப் பொங்கல். சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டு.
இந்த கொண்டாட்டத்திற்கு ஒரே காரணம்தான்.

தலைவர் படம் வெளியானால், வசூல் நிச்சயம். லாபம் பல லட்சம்.

ஒவ்வொரு திரையரங்கு உரிமையாளர்களும், ரஜினி படம் வெளியாகும் போது தங்களது திரையரங்கில் இருக்கும் கேண்டீன்களில் போண்டா, சமோசா, பாப்கார்ன், வடை வகையறா நொறுக்குத்தீனி இத்தியாதிகளை இரண்டு மடங்காக ஆர்டர் போடுவார்கள். சில சமயங்களில் அதுவும் காலியாகி, போண்டா, வடையின் எண்ணெய் ஒட்டிய நியூஸ்பேப்பர் மட்டும், கடகட சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ஃபேன் காற்றில் படபடவென அடித்துகொண்டிருக்கும்.

அதுவரை டல்லடித்துக் கொண்டிருந்த கேண்டீன் வியாபாரம் அந்தளவிற்கு சூடுப்பிடிக்கும்.

அப்போதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களே கேண்டீனையும் வைத்திருப்பார்கள்.

திரையரங்கு உரிமையாளர்களுக்கு கிடைக்கும் ஷேர், கேண்டீன் வியாபாரம் மூலம் கிடைக்கும் அந்த பெரும் தொகையை வைத்து தங்களது திரையரங்குகளுக்கான பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வது ஒரு சம்பிரதாயமாய் இருந்துவந்தது.

அந்த ஒட்டுமொத்த வருஷத்திலும், ரசிகர்கள் கிழித்து வைத்த இருக்கைகளை சரிசெய்வார்கள். வெத்தலைப் போட்டு, பான் போட்டு துப்பி ரசிகர்கள் உருவாகிய ‘எச்சில் ஆர்ட்’டை அழித்து வெள்ளை அடிப்பார்கள். ரஜினி ஒபனிங் காட்சியைக் கொண்டாட ரசிகர்கள் திரைக்கு அருகே சென்று ஆட்டம்போட்டு நாசம் பண்ணிய திரையை மாற்றுவார்கள். இப்படி திரையரங்குகளுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து சிகிச்சை அளிப்பது போல சிலபல பராமரிப்பு வேலைகள் நடக்கும். சிலர் தங்களது திரையரங்கு ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பார்கள்.

இப்படியாக ரஜினிகாந்த நடித்தப் படங்கள், சந்திரமுகிக்கு முன் சினிமாவிற்கு கைக்கொடுத்தன, திரைப்பட உலகை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்திருந்தவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தன.
இந்த மேஜிக் எல்லாம் நடக்க காரணம் ரஜினிகாந்த்.

கதைக்கேற்ற பட்ஜெட். ஒரு மாஸ் ஹீரோவுக்கான டீசண்ட்டான அதிக சம்பளம். ரசிகர்களை ஈர்க்க அவசியமான நகாசு அம்சங்கள். இப்படிதான் ரஜினியின் படங்கள் முன்பு வெளிவந்தன.

இதனால் அப்படத்தை எடுத்த தயாரிப்பாளர், திரையிடும் எக்ஸிபிட்டர், வியாபாரம் செய்யும் டிஸ்ட்ரிபியூட்டர், என சினிமா சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் லாபம் கிடைத்தது.

இதற்கு மாபெரும் உதாரணம் ‘சந்திரமுகி’

இப்படி சாதாரண தயாரிப்பாளர்களின் டார்லிங் ஆக இருந்த ரஜினி, கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களால் மட்டுமே அணுக முடிகிற ‘சினிமா பாஸ்’ ஆக அவதாரம் எடுக்க அஸ்திவாரம் போட்டது ஷங்கரின் ‘சிவாஜி’ படம்.

ஒரு கமர்ஷியல் கதை, அதற்கு அவசியமான பட்ஜெட் என பயணித்து கொண்டிருந்த ரஜினியின் ஸ்டைலையே ‘சிவாஜி’ மாற்றி விட்டது எனலாம்.

ரஜினி ஃப்ரேமில் ஸ்டைலாக வந்து நின்றால், அவருக்குப் பின்னால் இருப்பது அமெரிக்காவின் ட்வின் டவரா இல்லை அமைந்தகரை கூவம் பாலமா என்பது எந்த ரசிகனுக்கும் முக்கியமில்லை. ரஜினியின் அந்த சிரிப்பும், ஸ்டைலும் போதும்., ரசிகர்கள் வேறெதையும் எதிர்பார்ப்பது இல்லை. ரஜினி பல கோடி செலவில் போட்ட செட்டில்தான் டூயட் ஆடவேண்டுமென யாரும் கேட்கவும் இல்லை.

ஆனால், இன்று ரஜினியை நம்பாமல் பிரம்மாண்டத்தை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் வருத்தம் என்னவென்றால் ரஜினியும் கூட தன்னை நம்பாமல் நூறு பட்ஜெட்டையும், மொத்த லாபத்தையும் தங்களது அக்கெளண்ட்டில் ஏற்றிக்கொள்ளும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் மட்டுமே நம்ப ஆரம்பித்திருக்கிறார்.

அப்படியே கண்களை கீழே இறக்கி இந்த பட்டியலைப் பார்த்தால் புரியும்

2005 – சந்திரமுகி [CHANDRMUKHI] – சிவாஜி ஃப்லிம்ஸ் [SIVAJI FILMS]
2007- சிவாஜி [SIVAJI] – ஏவிஎம் [AVM]
2008 – குசேலன் [KUSELAN] – புஷ்பா கந்தசாமி [PUSHPA KANDASAMY]
20210 – எந்திரன் [ENTHIRAN] – சன் பிக்சர்ஸ் [SUN PICTURES]
2014- கோச்சைடையான் [KOCHAIDAIYAN] – ஈராஸ் [EROS]
2014 – லிங்கா [LINGAA] – ஈராஸ் [EROS]
2016 – கபாலி [KABALI] – தாணு வி க்ரியேஷன்சன்ஸ் [THANIU, V CREATIONS]
2018 – காலா [KAALA] – தனுஷ் வுண்டர்பார் ஃப்லிம்ஸ் [DHANUSH, WUNDERBAR FILMS]
2018 – 2.0 – லைகா [LYCA]
2019 – பேட்ட [PETTA] – சன் பிக்சர்ஸ் [SUN PICTURES]
2020 – தர்பார் [DURBAR] – லைகா [LYCA]
2021 – அண்ணாத்த [ANNATHE] – SUN PICUTRES
2023 – ஜெயிலர் [JAILER] – சன் பிக்சர்ஸ் [SUN PICTURES]
2023 – தலைவர் 170 [THALAIVAR 170] – லைகா [LYCA]

’சிவாஜி’ பட த்திற்கு பிறகு தனியொரு தயாரிப்பாளராக தயாரித்தப் படங்களில் புஷ்பா கந்தசாமி, தாணு மட்டுமே அடக்கம். இந்தப்பட்டியலில் தனுஷ் அவரது மருமகனாக இருந்த போது எடுத்துது. இதரப் படங்களைத் தயாரித்தது ஈராஸ் இண்டர்நேஷனல், லைகா, சன் பிக்சர்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள்.

இந்த மாதிரியாக எடுக்கப்படும் படங்களில் ரஜினியின் சம்பளம் மட்டும் மொத்த பட்ஜெட்டில் 60% வரை போய்விடுகிறது.

இப்படி பிரம்மாண்டமான பட்ஜெட்டில், எடுக்கப்படும் படங்கள் லாபத்தை கொடுக்கின்றன என்பது ஒருவகையில் நியாயம்தான். ஆனாலும். அந்த லாபத்தை கொடுக்க 1,000, 2,000, 2,500 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்களை வாங்க ரசிகர்கள் எந்தளவிற்கு பொருளாதாரரீதியாக கஷ்டப்படவேண்டியிருக்கிறது என்பது வெளியே பேசப்படாத விஷயம்.

தங்களது தலைவரை பார்க்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் டிக்கெட் வாங்கும் ரசிகர்களிடம், மல்ட்டிஃப்ளெக்ஸ் உரிமையாளர்களும், கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களும் கருணைக்காட்டுவதில்லை. வியாபாரம் மட்டுமே பிரதானமான அம்சமாகி இருக்கிறது.

இந்நிலையில் ரஜினியிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்.

நீங்கள் பழைய அதே ரஜினியாக வாருங்கள்.

நீங்கள் இருந்தால், பட்ஜெட் பெரிது இல்லை. பிரம்மாண்டம் தேவை இல்லை.

ரஜினிக்கு ஏற்ற கதை. கதைகேற்ற ரஜினி. இது போதும்.

கார்ப்பரேட்களுக்கு மட்டும் கமிட்டாகும் நீங்கள் முன்பு போல் சாதாரணமான தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். அழிந்து வரும் விநியோகஸ்தர்கள், கரண்ட் பில் கட்டுவதற்கே வசூல் இல்லாமல் தவிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சமூகத்திற்கு ஆதரவு கொடுங்கள். சினிமாவில் மோனோபொலியாக கார்பொரேட்கள் தலையெடுக்க நீங்களும் ஏதாவது ஒருவகையில் காரணமாகிவிடாதீர்கள்.

இதையெல்லாம் மற்ற நடிகர்களிடமும் சொல்லலாமே. அது என்ன ரஜினி மட்டும். ரஜினியை வேண்டுமென்றே குறிவைக்கிறார்கள் என்ற பேச்சு எழலாம்.

ஆனால் ரஜினியைப் போல் ’தலைவர்’ என்று கொண்டாடப்படுவர்கள் இன்று வேறு யாருமில்லை.

தலைவன் எவ்வழியோ ரசிகன் அவ்வழி. ரஜினியின் ரசிகர்களாக இருக்கும் கமர்ஷியல் ஹீரோக்களும் மாற அவசியமான மாற்றம் தலைவரிடமிருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பதே சினிமாவை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...