தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமரிடம் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முன்னாதாக இன்று மதியம் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்
உலகின் நம்பர்1 பணக்காரர் என்ற இடத்தை எலான் மஸ்க் மீண்டும் பிடித்துள்ளார்.
டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க், sஇல வாரங்களுக்கு முன் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அதே டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்டுள்ள எழுச்சி காரணமாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில், 187 பில்லியன் டாலருடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரும் எல்விஎம்ஹெச் நிறுவத்தின் தலைவருமான பெர்னார்ட் அர்னால்ட் 185 பில்லியன் டாலருடன் 2வது இடத்திலும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது – அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 இன்று நிறைவடைகிறது. இன்று மாலைக்குள் மின் – ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் – ஜோகோவிச் சாதனை
சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 378 வாரங்கள் முதலிடம் வகித்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்துள்ளார்.
22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள 35 வயதான ஜோகோவிச், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 378 வாரங்களாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளார். இந்த வகையில் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் அதிகபட்சமாக ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்துள்ளார் ஜோகோவிச்.
ஆடவர் பிரிவில் அதிக வாரங்கள் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை (310 வாரங்கள்) கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முறியடித்திருந்தார் ஜோகோவிச். தற்போது ஆடவர், மகளிர் என இருபாலருக்கான தரவரிசை பட்டியலை கணக்கிடும் போது ஜோகோவிச் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளார்.