No menu items!

திமுக கூட்டணியில் போட்டியிடும் கமல்! – மிஸ் ரகசியா

திமுக கூட்டணியில் போட்டியிடும் கமல்! – மிஸ் ரகசியா

“ நீ வாழ்த்து சொல்லிட்டியா? எல்லோரும் சொல்லிக்கிட்டு இருக்காங்களே” என்று அலுவலகத்துக்குள் நுழைந்த ரகசியாவிடம் கேட்டோம்.

“நம்ம வாழ்த்துலாம் மனசுக்குள்ளேயே இருக்கு. இந்த முறை சிஎம்க்கு வாழ்த்து சொல்ல பெரிய போட்டியே நடக்குது. 70-வது பிறந்த நாள்ங்கிறதுனால திமுகவும் முதல்வரோட பிறந்த நாளை சிறப்பா கொண்டாடணும்னு இருக்காங்க” என்று செய்திகளுக்குள் சென்றாள் ரகசியா.

”பிறந்த நாளுக்கு முந்தின நாளே கமல், ரஜினிலாம் வாழ்த்து சொல்லியிருக்காங்களே?”

“முதல்வர் ஸ்டாலின் பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வச்ச கமல்ஹாசன் முதல்ல வாழ்த்து சொல்ல மறந்துட்டார் அப்புறம் பக்கத்திலிருக்கிறவர் நினைவுப்படுத்தினதும்தான் சொன்னார். அவர் வாழ்த்து சொன்னதை விட அவர் மறந்ததுக்கு சொன்ன காரணம்தான் ஹைலைட். பின்னாடி போனதால முன்னாடி சொல்ல வேண்டியது மறந்துடுச்சுனு பஞ்சதந்திரம் டயாலாக் போல் முன்னாடி பின்னாடினு பேசி குஷிப்படுத்துனாரு”

“திமுக கூட இருக்கிறதுல கமலும் குஷியா இருக்கார் போல?”

“ஆமாம். அவருக்கு உதயநிதியை மிகவும் பிடிச்சுப் போயிருக்கு. முக்கியமா சினிமா பிசினஸில் உதயநிதி நிறுவனம் காட்டும் நேர்மை அவரைக் கவர்ந்திருக்கு. அவருக்கு இரண்டு வாய்ப்புகளை திமுக கொடுத்திருக்காம். ஒண்ணு நாடாளுமன்றத் தேர்தல்ல திமுக கூட்டணில ஒரு இடம். எஸ் ஆர் எம் பச்சமுத்து கூட்டணில இல்லாததனால அந்த இடம் கமலுக்குப் போகலாம். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிட விரும்பலனா 2026 சட்டப்பேரவைத் தேர்தல்ல போட்டியிட வாய்ப்பு. நாடாளுமன்றத் தேர்தல்னா கோவை அல்லது தென் சென்னை. சட்டப் பேரவைத் தேர்தல்னா வேளச்சேரினு சொல்றாங்க. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில இந்த தடவை நிர்மலா சீதாராமன் அல்லது தமிழிசை சௌந்தரராஜனை பாரதிய ஜனதா நிறுத்தும்னு முதல்வர் கணக்கு போடறார். அப்படி அவங்க நின்னா, எதிர்த்து கமல்ஹாசனை களத்துல இறக்கலாம்”

“2026 சட்டப் பேரவைத் தேர்தல்வரை கமல் பாசம் நீடிக்குமா?”

“சரியான கேள்வி. நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிடறதுக்கான வாய்ப்புகள்தான் அதிகமா இருக்கு. தேசிய அரசியல்லயே இருந்துரலாம்னு கமல் யோசிக்கிறார்னு மய்யத்து ஆட்கள் சொல்றாங்க”

“திடீர்னு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கவர்னரை சந்திச்சிருக்கிறாரே என்ன காரணம்? பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்ன்ற நெடுமாறன் அறிக்கையின் பின்னணில இதைப் பார்க்கணுமா?”

“ஆமாம். பழ.நெடுமாறனைதான் கவர்னர் சந்திக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால் நெடுமாறன் மறுத்திருக்கிறார். ஏற்கனவே நான் பாஜகவுடன் நெருக்கம் என்ற பேச்சு இருக்கிறது. கவர்னரை சந்தித்தால் அந்தப் பேச்சு அதிகமாகிவிடும் என்று நாசூக்காய் சொல்லியிருக்கிறார். அவருக்கு பதில்தான் கே.எஸ்.ஆர் போயிருக்கிறார். அவரும் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்தானே. அவர் சொன்ன பல கதைகளை கவர்னர் கேட்டுக்கிட்டாராம். முக்கியமா அரசியல் ரீதியாக ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் செய்யத் தவறியதை பாஜக செய்தால் தமிழர்களிடம் செல்வாக்கு உயரும்னு தெரிவிச்சிருக்கார். சில புத்தகங்களையும் கவர்னருக்கு கொடுத்திருக்கார்.”

”பார்க்கிறவர்களிடம் புத்தகம் வாங்கிக் கொள்கிறாரே கவர்னர், படிக்க நேரமிருக்குமா?”

“நிச்சயம் இருக்கும். வேறு என்ன வேலை? இன்னொரு தகவல் ஓபிஎஸ் அணியிலிருந்து ஒரு முக்கிய தலைவர் விலகப் போகிறார் தெரியுமா?”

“அங்க இருக்கிறதே நாலஞ்சு பேர்தானே? அதுல யாரு?”

”வைத்தியலிங்கம். அவருக்கு இப்போ டிமாண்ட் ஜாஸ்தியாகியிருக்கு. திமுக, பாஜக, எடப்பாடி அணி என எல்லா பக்கத்திலருந்தும் அவருக்கு அழைப்பு வந்திருக்கு”

“திமுக கூட கூப்பிடுதா?”

“ஆமா. இப்ப திமுகவின் முக்கிய தலைகள் எல்லாம் அதிமுக முன்னாள்கள்தானே. வைத்தியலிங்கத்திடம் செந்தில் பாலாஜி பேசியிருக்கிறார். அன்பில் மகேசும் பேசினதா ஒரு தகவல் இருக்கிறது”

“வைத்தியலிங்கம் என்ன செய்யப் போகிறார்?”

“பாஜக வேண்டாம் என்று மட்டும் முடிவு செய்திருக்கிறார். எடப்பாடி அணியா திமுகவா என்பது இனி தெரியும்?”

‘அவரை தக்க வைக்க ஓபிஎஸ் எந்த முயற்சியும் பண்ணலையா?”

“ஓபிஎஸ் இந்த மாதிரி முயற்சிலாம் எடுத்திருந்தா அவர் கூட இன்னைக்கு எவ்வளவு பேர் இருப்பாங்க! ஆனா ஓபிஎஸ் அப்படிலாம் எதுவும் செய்யல. சீக்கிரம் சின்னம்மாவுடன் சேர்ந்துரலாம்னு சொல்லியிருக்கிறார். ஆனா சசிகலா தரப்புலருந்து எந்த சிக்னலும் கிடைக்கல. அதனால ஒபிஎஸ் கூட இருக்கிறவங்க வெறுப்புல இருக்காங்க. அது மட்டுமில்லாம கோர்ட்டுக்குப் போய் ஜெயிச்சிரலாம்னும் ஓபிஎஸ் சொல்லியிருக்கிறாரு. ஆனா அதை நம்ப கூட இருக்கிறவங்க தயாரா இல்லை. கோர்ட் கேஸ்னு போன முடிய பல வருஷம் ஆகும்னு சொல்லியிருக்காங்க”

”பாவம் ஓபிஎஸ்”

“அதுக்கு ஓபிஎஸ்ஸேதான் காரணம்னு அவரோட ஆதரவாளர்கள் புலம்பறாங்க. கட்சிக்கு இரட்டை இலை சின்னமே கிடைக்காத நிலையிலகூட எடப்பாடி தைரியமா வேட்பாளரை அறிவிச்சார். தேர்தல் வேலை பார்க்கத் தொடங்கினார். ஆனா பாரதிய ஜனதா வேட்பாளரை நிறுத்தினா ஆதரிப்பேன்னு ஓபிஎஸ் சொன்னார். விழுந்து விழுந்து நாம பாரதிய ஜனதாவை ஆதரிச்சாலும் அவங்க நமக்கு எதுவுமே செய்யலை. எடப்பாடி கிட்டதான் கட்சியும் தொண்டர்களும் இருக்காங்கன்னு ஓபிஎஸ்ஸோட ஆதரவாளர்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஓபிஎஸ் கூட இருக்கிறது பாதுகாப்பு இல்லைனு நினைக்கிறாங்க”

“ஆதரவாளர்களை இழக்கறதுல வைகோ ரூட்ல ஓபிஎஸ் போறாருக்கு சொல்லு.”

“கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா வைகோவுக்கு வேறு பல திறமைகள் இருக்கு. நல்ல பேச்சாளர். நல்லா எழுதுவார். இன்னைக்கு அவரைப் பற்றி பேசுபவர்கள் அதிகம். ஆனால் ஒபிஎஸ் அப்படியில்லல”

“ தேர்தல் வாக்குப் பதிவுலாம் முடிஞ்சிடுச்சு. ஈரோடு கிழக்கு இப்போ எப்படி இருக்கு?”

“மழை பெய்து விட்டா மாதிரி இருக்கு”

“உண்மைதானே அங்க பண மழை பெய்ததுதானே?”

சிரித்தாள் ரகசியா.

”பொதுவா இடைத்தேர்தல்கள்ல மக்கள் அவ்வளா ஆர்வம் காட்ட மாட்டாங்க. ஆனா இந்த முறை பண மழை காரணமா மக்கள் ஆர்வமா ஓட்டுப் போட்டாங்க.”

”கடைசி நாள்ல முதல்வர் பிரச்சாரம் கூட நடந்துச்சே”

“பிரச்சாரத்துக்காக முந்தின நாள் நைட்டே வந்த முதல்வர் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள்கிட்ட பேசி இருக்காரு. அப்ப செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள்கிட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிக்கணும்னு உறுதியா சொல்லி இருக்காரு. 20 ஆயிரம் இல்ல, 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிப்போம்னு அவங்க பதில் சொல்லி இருக்காங்க. ஆனா முதல்வர் நம்பலை ‘இப்படித்தான் ஆர்கே நகர் இடைத் தேர்தல்ல சொன்னீங்க. ஆனா முடிவு என்னாச்சு? இந்த தேர்தல் நமக்கு முக்கியமானது. அதனால உண்மை நிலவரத்தைச் சொல்லுங்க’ன்னு சொல்லி இருக்காரு..”

“பொறுப்பாளர்கள் சொன்னாங்களா?”

“மாவட்ட அமைச்சர் முத்துசாமி, சில பகுதிகள்ல இருக்கற பிரச்சினைகளை வெளிப்படையா பேசி இருக்காரு. கூடவே பெண்களோட வாக்கை கவர இன்னும் கூடுதல் கவனம் செலுத்தணும்னு சொல்லி இருக்காரு. இதைக் கேட்ட முதல்வர், பெண்கள் வாக்கை கவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட, பெண் வாக்காளர்களுக்கு பட்டுப் புடவை, அரிசின்னு நேரடியா பட்டுவாடா செய்யப்பட்டிருக்கு.”

“அப்ப வெற்றி உறுதினு சொல்ற”

“ஆமாம். எத்தனை வாக்கு வித்தியாசத்துலங்கறதுதான் மேட்டர்”

“ டெல்லில ஆம் ஆத்மி அமைச்சரையே கைது பண்ணியிருக்காங்களே. என்ன ஆச்சு?”

“டெல்லி அமைச்சர் மணிஷ் சிசோடியா கைது பற்றி டெல்லி சோர்ஸ்ல விசாரிச்சேன். ராய்ப்பூர்ல காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஊடகம் முக்கியத்துவம் தரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு தான் அதே நாளில் டெல்லி துணை முதல்வரை சிபிஐ கைது செய்ய பாரதிய ஜனதா ஏற்பாடு செய்ததனு சொல்றாங்க. அவங்க திட்டமிட்டபடி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு டெல்லி துணை முதல்வர் கைது முக்கிய செய்தியா மாறிடுச்சு.”

“அப்ப சிசோடியா கைதுக்கு காங்கிரஸ்தான் காரணம்னு சொல்லு.”

”அதுவும் ஒரு காரணம். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட கட்சி. ஊழல் வழக்குகள்ல மாட்டிக்கிட்டு இருப்பதுதான் காமெடி”

“காமெடி மட்டுமல்ல டிராஜடியும் கூட” என்று சொல்ல சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...