ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டுமல்ல, வடகிழக்கில் மிக முக்கியமான இரண்டு மாநிலங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.
நாகாலாந்து, மேகாலாயா.
தென் முனையில் இருக்கும் நமக்கு இந்த இரண்டு மாநிலங்களும் அதிகம் அறியப்படாதவை. அறியப்பட வேண்டியவை.
சிறு மாநிலங்கள்தாம். மேகாலாயாவின் மொத்த மக்கள் தொகை 30 லட்சம். 60 தொகுதிகள் இருக்கின்றன. நாகாலாந்து மாநிலத்தின் மக்கள் தொகை 19 லட்சம். அதிலும் 60 தொகுதிகள் இருக்கின்றன.
இந்த இரண்டு மாநிலங்களின் மக்கள் தொகையைக் கூட்டினால் கூட தமிழ்நாட்டு பெருநகரங்களின் மக்கள் தொகையை நெருங்க இயலாது. ஆனாலும் இன்றைய அரசியல் சூழலில் வட கிழக்கு மாநிலங்களின் அரசியல் முக்கியமானதாக பார்க்க வேண்டியிருக்கிறது.
மேகாலாயாவில் பல ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிதான். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் இருக்கும் பல கூட்டணி ஆட்சிகளுக்கு முன்னோடியாக மேகாலாயாவில் கூட்டணி ஆட்சிகள் நடந்தன. 1972ஆம் ஆண்டு மேகாலாயா மாநிலம் உருவாக்கப்பட்டது. 1972ல் அங்கு முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் 32 இடங்களைக் கைப்பற்றியது All Party Hill Leaders Conference. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ், 9 இடங்களைக் கைப்பற்றியது. மற்ற 19 இடங்களை வென்றவர்கள் சுயேச்சைகள்.
வடகிழக்கு மாநிலங்களில் எப்போதுமே கட்சிகளின் செல்வாக்கை விட தனி நபர் மற்றும் சுயேச்சைகளின் செல்வாக்கு அதிகம். மேகாலாயாவில் அன்று தொடங்கிய சுயேச்சைகளின் செல்வாக்கு இன்று வரை அப்படிதான் இருக்கிறது.
1978 தேர்தலில் அங்கு காங்கிரசின் கை ஓங்கியது. ஆனால் தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு அல்ல, கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் அளவு. அதன் பிறகு மேகாலாயாவில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.
ஆனால் இந்த அரசியல் நிலையில் 2018க்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டது. 2018 தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் வென்றது. ஆனால் 2021ல் இந்த எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசுக்கு மாறிவிட காங்கிரஸ் செல்வாக்கு வீழ்ந்தது. மீதமிருந்தவர்களும் கட்சி மாற இப்போது காங்கிரசுக்கு அந்த மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது. இந்தப் பின்னணியில் காங்கிரஸ் 2023 பொதுத் தேர்தலை சந்திக்கிறது.
மேகலாயாவில் பாஜகவுக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை மெஜாரிட்டி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.
இங்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, என்பிபி ஆகிய கட்சிகளுக்கிடையே போட்டி.
வடகிழக்கை வென்றெடுப்போம் என்று பாஜக களமிறங்கியிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
நாலாந்திலும் கிட்டத்தட்ட இதே சூழல்தான்.
நாகாலாந்து மாநிலம் 1963ல் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் எப்போதும் உள்ளூர் கட்சிகளுக்குதான் மதிப்பு அதிகம். தேசியக் கட்சிகளுக்கு அதிக வாய்ப்பில்லை. ஆனாலும் மூன்று முறை காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைத்திருக்கிறது.
Nationalist Democratic Progressive Party, Naga People’s Front ஆகிய மாநிலக் கட்சிகள் இங்கு முக்கியமானவை. இவை ஆட்சிகளையும் பிடித்திருக்கின்றன.
நாகாலாந்தில் 60 தொகுதிகளில் நடக்க வேண்டிய தேர்தல் 59 தொகுதிகளில்தாம் நடக்கிறது. காரணம், ஒரு தொகுதியில் போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
நேஷனல் டெமாக்ரடிக் ப்ராக்ரசிவ் கட்சியும் (Nationalist Democratic Progressive Party) பாஜக கூட்டணி அமைத்து இப்போது ஆட்சியில் இருக்கிறது. இந்தக் கூட்டணிதான் வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொரு முக்கிய மாநிலக் கட்சியான நாகா பீப்பிள்ஸ் ஃப்ரண்ட் 22 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. அதனால் அதற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. 22 இடங்களில் மட்டும் போட்டியிடுவதற்கு காரணம் இருக்கிறது. 2018 சட்டப் பேரவைத் தேர்தலில் நாகா பீப்பிள்ஸ் கட்சி 26 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் எதிர்க் கட்சியான நேஷனல் டெமாக்ரடிக் ப்ராக்ரசிவ் கட்சிக்கு மாறியதால் ஆட்சியை இழந்தது. செல்வாக்குள்ள கட்சிக்காரர்களை இழந்ததால் பலமிழந்து நிற்கிறது இந்தக் கட்சி. இந்தக் கட்சித் தாவல்களுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் பேச்சுக்கள் உண்டு.
ஒரு காலத்தில் முக்கிய கட்சியாக இருந்த காங்கிரஸ் 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.
எனவே நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பாஜக இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மணிப்பூர், அருணாசலபிரதேசம், நாகாலாந்து, மேகாலாயா என வடகிழக்கு மாநிலங்களில் தனது அரசியல் தந்திரங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.