மக்கள் கொண்டாடும் நட்சத்திரங்கள் இறந்தால், அவர்களைப்பற்றிய நமக்கெல்லாம் தெரியாத நல்ல விஷயங்கள்தான் இதுவரை வெளிவந்து கொண்டிருந்தன.
ஆனால் இப்போது…
உலகையே பொறாமைப்பட வைக்கும், நட்சத்திரங்கள் இவ்வுலகைவிட்டு மறைந்தால், மனதைக் கனக்கச்செய்யும் அவர்களது வாழ்க்கையின் மறுபக்கம்தான் தெரிய வருகின்றன.
‘’வசீகரமான முகம், அசாத்தியமான திறமை, அழகான இரண்டு குழந்தைகள், மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என ஸ்ரீதேவியின் வாழ்க்கை பலருக்கு மிகவும் அருமையான வாழ்க்கையாகதான் தெரியும். வெளியில் இருந்து பார்க்கும்போது, எல்லாருமே விரும்பும் வாழ்க்கைபோலதான் இருந்தது.ஆனால்…ஸ்ரீதேவி மிகவும் மகிழ்ச்சிகரமான பெண்ணாக இருந்தாரா? அவர் சந்தோஷமான வாழ்க்கையைதான் வாழ்ந்தாரா?’’ என அதிரடியாக ஒரு பதிவை முன்வைத்திருக்கிறார் அதிரிபுதிரி இயக்குநர் ராம் கோபால்வர்மா.
‘’அவருடைய அப்பாவின் மரணம் வரையில், வானில் சிறகடித்துப் பறக்கும் ஒரு பறவையைப் போலதான் இருந்தார். அதற்குபிறகு, அதிக அக்கறை காட்டும் அம்மாவினால் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவையைப் போலதான் அவரது வாழ்க்கை மாறியது. அந்நாட்களில், நட்சத்திரங்களுக்கு சம்பளம் கருப்புப்பணமாக வழங்கப்பட்டது. வருமானவரி நடவடிக்கைகளுக்கு பயந்து, அவரது அப்பா நண்பர்களையும் உறவினர்களை மட்டுமே நம்பி ஸ்ரீதேவின் வருமானத்தைக் கொடுத்து வைத்தார். ஆனால் அவரது மறைவுக்குப்பிறகு அவர்கள் அனைவருமே ஸ்ரீதேவியை ஏமாற்றிவிட்டனர்.
அதோடு, அவரது அம்மாவின் தவறான முதலீடுகளாலும், பிரச்னைகளுக்குரிய இடங்களில் முதலீட்டை மேற்கொண்டதாலும், கையில் ஒரு பைசா கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஸ்ரீதேவி. அப்போதுதான் அவரது வாழ்க்கையில் நுழைந்தார் போனிகபூர். அப்போது அவரும் பெரும் கடன்சுமையில் இருந்தார்.
ஸ்ரீதேவி, தனது வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். காரணம் சின்ன வயதிலேயே சினிமாவில் எண்ட்ரீ ஆனதுதான். அது அவருக்கு ஒரு நார்மலான சூழ்நிலையில் அவர் அவராகவே வளர்வதற்கான சூழலைக் கொடுக்கவில்லை.
இது அவருடைய தவறு அல்ல. ஆனால் சின்ன வயதிலேயே கிடைத்த புகழ் உண்டாக்கிய இறுக்கம் அவரை சுதந்திரமாக இருக்கவே விடவில்லை. அவர் எப்படி இருந்திருப்பாரோ அப்படி இருக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. எப்படி இருக்கவேண்டுமென நினைத்தாரோ அதையும் செய்யவிடவில்லை. இதனால் கேமராவுக்கு முன்னால் மேக்கப்பை போட்டுகொண்டு அவர் அவராக இல்லாமல் வேறு யாரோ மாதிரி இருந்தாரோ, அப்படியேதான் கேமராவுக்கு பின்னாடியும் இருந்தார்.
அவர் கண்களில் இருந்த வலியை என்னால் பார்க்க முடிந்தது. அவர் தனக்குள்ளே இருந்த அந்த ஆழமான வலியை அனுபவித்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. அதனால், அவர் ஒரு பெண்ணின் உடலில் சிக்கித்தவிக்கும் ஒரு குழந்தையாகதான் என் கண்களுக்குத் தெரிந்தார்’’ என தொடர்கிறது ராம்கோபால் வர்மாவின் பதிவு.
உண்மையில் ஸ்ரீதேவி யார்? அவரது வாழ்க்கை ‘வர்ச்சுவல் ரியாலிட்டி’யினால் ஆன பிம்பங்கள்தானா?
இந்திய சினிமாவில் ஸ்ரீதேவியின் வருகையும், வளர்ச்சியும் ஒரு புதிய அத்தியாயம். 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், 13 வயதில் ’மூன்று முடிச்சு’ படத்தில், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மிகவும் சிக்கலான கதாபாத்திரம் மூலம் கதாநாயகியானார். இங்கேயிருந்து டேக் ஆஃப் ஆனது ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை. தமிழில் அருமையான கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு, 1978-ல் பாலிவுட் உற்சாகமான வரவேற்பை அளித்தது. இங்கே ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘காயத்ரி’, ‘பதினாறு வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘ஜானி’, ‘மீண்டும் கோகிலா’ போன்ற நடிப்புக்குத் தீனிப்போடும் படங்களில் நடித்தவர், மும்பைக்கு பறந்ததும் 1990-களில் ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தினி’, ‘லம்ஹே’, ‘மிஸ்டர் இந்தியா’, ‘நாகினா’ போன்ற படங்கள் இந்திய சினிமாவின் புதிய அடையாளமாகின. மினுமினுக்கும் காஸ்ட்யூம்களில், கவர்ச்சிகன்னியாக புதிய அவதாரம் எடுத்தார். இந்த கமர்ஷியல் அவதாரம் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
நடிப்பில் நவீனத்துவத்தைக் கொண்டுவந்த கமல்ஹாசன், ஸ்டைலில் ஸ்மார்ட்டான பரிமாணம் கொடுத்த ரஜினிகாந்த், சமகால சினிமாவில் முப்பது ஆண்டுகாலம் முன்னோக்கிய வாழ்க்கையை படமாக எடுத்த கே. பாலசந்தர், இவர்கள் யாராலும் ஹிந்தி சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி வந்தது வரலாறு. ஆனால் ஹிந்தியிலும் உச்சம் தொட்டு, புகழில் எதையும் மிச்சம் வைக்காத நட்சத்திரமாக தனது கடைசி நொடிவரை இருந்தவர் ஸ்ரீதேவி.
ஆனால் ஒரு பேட்டியில், ‘ஹிந்தி சினிமாவின் ’கவர்ச்சிக்கன்னி’ என்ற இமேஜ் உங்களுக்கு இருக்கிறதே. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வியை ஸ்ரீதேவியிடம் கேட்டார் ஒரு மூத்த நிருபர். அதற்கு, ஸ்ரீதேவி, ‘’எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. படத்துல நீங்க ரொம்ப சூப்பரா இருக்கீங்கன்னு என்கிட்ட யாராவது சொன்னா, நான் ரியாக்ட் பண்ணவே மாட்டேன். ஆனா நீங்க ரொம்ப நல்லா நடிச்சீருக்கீங்கன்னு சொன்னாங்கன்னா, எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்’’ என்றார் ஸ்ரீதேவி. இதுதான் அவர்.
ஆனால் ஹிந்தி சினிமா அவரை கவர்ச்சிக் கன்னியாகவேதான் தக்கவைத்து கொண்டிருந்தது. இது குறித்து கேள்வி எழுந்தபோது, ‘’தமிழ்ல நான் யதார்த்தமா நடிக்கிறதப் பார்க்க ஆசைப்பட்டாங்க. ஆனா ஹிந்திப்படங்கள்ல கிளாமர், மசாலாவைதான் எதிர்பார்க்குறாங்க. என்னோட துரதிஷ்டம், ஹிந்தியில என்னோட முதல் ஹிட் படம் ‘ஹிம்மத்வாலா’, கமர்ஷியல் படமா அமைஞ்சிடுச்சு. ‘சத்மா’ல கேரக்டர் ரோல்ல நடிச்சப்ப படம் ஓடல. அதனால என்னை கிளாமர் ரோல்லேயே தொடர்ந்து வைச்சிட்டாங்க. என்னைக்காவது ஒருநாள் எனக்கும் நடிக்கத்தெரியும்னு நிரூபிச்சு காட்டுவேன்’’ என்றார். அன்றைக்கு சொன்னதை நிரூபிக்கவே, சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் 15 ஆண்டுகளுக்குப்பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்தார். 2017-ல் ‘மாம்’ படத்திலும் நடித்தார்.
ஸ்ரீதேவியின் நடிப்புத்திறமையை, இந்திய சினிமா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அவருடைய சமீபத்திய படங்களைப் பார்த்தால் அது புரியும். இளமையைத் தொலைத்திருக்கும் காலக்கட்டத்திலும் கூட, அவருடைய நடிப்பு, நமக்குள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியதுதான் அவரது பலம்.
ஸ்ரீதேவியின் நடிப்புத்திறமையைப் பற்றி கமல் ஹாசன் முன்பொரு தருணத்தில் கூறுகையில், ‘’எதையும் கத்துக்குற பெரிய திறமைசாலி. பார்க்குறதை அப்படியே நடிச்சு காட்டக்கூடியவர் ஸ்ரீதேவி. அவங்ககூட சேர்ந்து நடிச்சப்படங்கள்ல, அவங்க என்னைப் பார்த்துகூட நடிச்சிருக்காங்க. நானும் அப்படிதான். அடுத்தவங்களை கவனமாக பார்த்துதான் கத்துகிட்டேன்.’’ என்றார்.
சினிமாவை கற்றுக்கொண்ட ஸ்ரீதேவி, வாழ்க்கையைக் கற்றுகொள்ளாமலே தனது பூமிப்பயணத்தை முடித்துக்கொண்டார். வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஸ்ரீதேவி அவர் ஆசைப்பட்டது போல் வாழவில்லை. பொதுவாகவே சினிமாவில் நட்சத்திரமாக வேண்டுமானால், அதற்காக ஒரு விலை இருக்கிறது. ஒரு பக்கம் புகழும், பணமும் குவிந்தாலும், அதை ஒரு சராசரி மனிதனைப் போல கொண்டாட முடியாது. உங்களது அந்தரங்கமும், சுதந்திரமும் உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரிடமும் இருக்கும்.
சிறுவயதிலேயே சினிமாவின் வெளிச்சத்தில் நனைந்த ஸ்ரீதேவி, ‘’வாழ்க்கையை தெரிஞ்சுக்க எனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கல. எனக்கு ஏதாவது வேணும்னா..அது என்னைத் தேடி வரும். அவ்வுளவுதான். ஷாப்பிங் கூட நான் போனது இல்ல. நான் ஆசைப்பட்ட எதையும் என்னால செய்ய முடியல. ஒரு கட்டத்துல இதுவே எனக்கு பழகிடுச்சு. அதனால அதை மாத்திக்க விரும்பல. வாழ்க்கையை கொஞ்சம் வெளியில நின்னு பார்ப்பேன். ஆனாலும் அப்படியே இருக்குறதுதான் என்னோட பலம்’’ என்றார்.
இந்தியாவையே வசியப்படுத்திய ஸ்ரீதேவியிடம் உங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டதற்கு ‘’இறப்புக்கு பின்னால ஒரு வாழ்க்கை இருக்குமான்னு தெரியல. அப்படி ஒரு வாழ்க்கை இருந்தா, அதுல மேக்கப் ரூம் இருக்குமான்னு தெரிஞ்சுக்கணும்’’ என்றார்.
’அட அங்கே போயுமா மேக்கப் போடணும்’ என உங்கள் மனதிற்குள் ஒரு எண்ணம் எழலாம். உண்மை அதுவல்ல. மேக்கப் ரூம்மிற்குள் மட்டும்தான் ஒரு சினிமா நட்சத்திரம் தன் விருப்படி இருக்கமுடியும். மேக்கப் இல்லாமலும், பணத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் சுற்றியிருக்கும் கூட்டம் இல்லாமலும், மனதைப் பார்க்காமல் சதையை மட்டுமே ருசிக்கும் கும்பல் இல்லாமலும், அவர்கள் அவர்களாகவே இருக்கமுடியும்.