No menu items!

எச்சரிக்கை: அதானியால் நஷ்டமாகும் எல்.ஐ.சி

எச்சரிக்கை: அதானியால் நஷ்டமாகும் எல்.ஐ.சி

அதானி விவகாரத்தில் முதலி அடி வாங்கப் போகும் பொதுத் துறை நிறுவனமாக எல்.ஐ.சி. இருக்கப் போகிறது.

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி குழும பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. இது தற்காலிக வீழ்ச்சிதான் இன்னும் சில தினங்களில் நிலைமை சரியாகிவிடும் என்று அப்போது கூறப்பட்டது.

உலகில் யாருமே பார்த்திராத வேகத்தில் அதானி குழுமம் வளர்ந்து வந்தது. 2014ல் அதானி இந்திய அளவில் 57 ஆயிரம் கோடி ரூபாய்  சொத்துடன் 7வது இடத்தில் இருந்தார்.(2013ல் 22வது இடத்தில் இருந்தார்). 2022ல் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பட்டியலில் 12 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்துக்கு வளர்ந்தார். அப்படியென்றால் அவரது வளர்ச்சியின் வேகத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

இந்த அசூர வளர்ச்சி இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. தடைபட்டு நிற்கிறது. அதற்கு காரணம் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கை.

அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. அதில் அதானி குழுமத்தின் மீது பல கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தது. வரலாற்றிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் ஃப்ராட் என்று அதானி குழுமத்தை ஹிண்டன்பர்க் கூறியது. அந்த அறிக்கை வெளியானதும் அதானி குழும பங்குகள் மிக வேகமாக  வீழ்ச்சியடையத் தொடங்கின. 

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அதானி தரப்பு 413 பக்க மறுப்பு அறிக்கை கொடுத்தது. ஆனாலும் அதானி பங்குகளின் வீழ்ச்சி நிற்கவில்லை. அதானி குழுமத்தின் மறுப்பு ப்ளஸ் விளக்க அறிக்கையை யாரும் நம்பவில்லை என்பதற்கு அதானி பங்குகளின் தொடர் வீழ்ச்சியை சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி சொத்து மதிப்பு பல மடங்கு குறைந்திருக்கிறது. பங்குகள் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்திருக்கின்றன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி இன்று ஒரு மாதம் ஆகியிருக்கிறது. இந்த ஒரு மாத காலத்தில் அதானி குழுமத்தின் மதிப்பு 12 லட்சம் கோடி குறைந்திருக்கிறது.

இந்த வருடத் துவக்கத்தில் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்த அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று 29வது இடத்துக்கு இறங்கிவிட்டார். 120 பில்லியன் டாலர்கள்,,,அதாவது சுமார் பத்து லட்சம் கோடி ரூபாய் இதுதான் ஹிண்டன்பர்க் அறிக்கை வருவதற்கு முன் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு. இப்போது அவரது சொத்து மதிப்பு நாலரை லட்சம் கோடியாக சுருங்கியிருக்கிறது. அதாவது சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் இழந்திருக்கிறார்.

அவரது சொத்து மதிப்பு இறங்குவதில் நமக்கும் கவலை இருக்கிறது. அவரது நிறுவனப் பங்குகளில் ஏராளமான இந்தியர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அதானி குழுமம் நஷ்டமடைந்தால் அவரது குழும பங்குகளை வாங்கியவர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அதானி குழுமத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் சிலவும் முதலீடுகள் செய்திருக்கின்றன. முக்கியமாய் எல்.ஐ.சி. என்றழைக்கப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற பொதுத் துறை நிறுவனம். இந்தியாவின் எளிய, சாமானிய மக்கள் அதிகம் நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்திருக்கும் நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு இப்போது அதானியால் சோதனை சூழ்ந்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது எல்.ஐ.சி. நிறுவனம் ஒரு விளக்கத்தைக் கொடுத்தது.

அதானி நிறுவனங்களில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள 36 ஆயிரத்து 474 கோடி ரூபாயில் 30 ஆயிரத்து 127 கோடி ரூபாய்க்கு அதானி பங்குகளை வாங்கியிருக்கிறது. அந்தப் பங்குகளின் இப்போதைய மதிப்பு – அதாவது ஜனவரி 27 2023 அன்று – 56 ஆயிரத்து 142 கோடி ரூபாய். அதனால் இப்போதும் லாபத்தில்தான் இருக்கிறது என்று எல்.ஐ.சி கணக்கு சொல்லியது.

அதாவது முதலீடு செய்ததைவிட 26 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக இருக்கிறது அதனால் கவலைப்படாதீர்கள் என்பதுதான் அந்த அறிக்கையின் நோக்கம்.

ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது.

அதானி குழுமப் பங்குகளின் தொடர் வீழ்சியினால் எல்.ஐ.சி. முதலீடு செய்த 30 ஆயிரம் கோடிக்கும் கீழே அதன் மதிப்பு போய்விட்டது. வாங்கியது 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இப்போது எல்.ஐ.சி. வைத்திருக்கும் அதானி பங்குகளின் மதிப்பு 26 ஆயிரம் கோடி ரூபாய். அதாவது 4 ஆயிரம் கோடி ரூபாய் எல்.ஐ.சி.க்கு நஷ்டம். இது மேலும் குறையும் என்றுதான் நிதி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஜனவரி இறுதியில் எல்.ஐ.சி. கொடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்த இன்னொரு விஷயம் கொஞ்சம் நம்பிக்கை தரும்.

எல்.ஐ.சி.யின் மொத்த சொத்து மதிப்பு 41.66 லட்சம் கோடி ரூபாய். அதில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பது 0.975 சதவீதம்தான், அதனால் கவலைப்படாதீர்கள் என்று அந்த அறிக்கையில் சொல்லாமல் சொல்லியிருந்தது எல்.ஐ.சி.

இந்தக் கணக்குபடி பார்த்தால் சுமார் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பணமே நஷ்டம் என்று தோன்றலாம்.

ஆனால் இந்தப் பணம் சாதாரண பணம் அல்ல, சாமானிய மக்களின் உழைப்பு, வேர்வையில் வந்த பணம். அந்தப் பணத்தை ஒரு கோடீஸ்வரனிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம்தானே நஷ்டம் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்பதை யோசிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...