சின்னக் குழந்தைகள் பலூனுக்காக சண்டைப் போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்.
இப்போது இரண்டு வல்லரசு நாடுகள் பலூனுக்காக மோதிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த பலூன் குழந்தைகள் விளையாடும் பலூன் அல்ல. விவகாரமான பலூன்.
என்ன மோதல், ஏன் மோதிக் கொள்கிறார்கள் என்பதைப் பார்த்துவிடுவோம்.
இந்த வருடம் ஜனவரி 28ஆம் தேதி பலூன் ஒன்று கனடா நாட்டு எல்லையிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் பறந்து வந்தது. அது அமெரிக்க ராடார் கருவிகளின் அதி நவீன கண்களில் சிக்கியது. அந்த பலூன் மெல்ல பறந்து அமெரிக்காவுக்குள் வட்டமடித்தது. கண்டுபிடித்த அமெரிக்க அரசு உடனடியாக அந்த பலூனை கண்காணிக்க துவங்கியது. அமெரிக்காவுக்குள் ஊடுருவிய பலூன் பிப்ரவரி 1, 2 தேதிகளில் அமெரிக்க வான் எல்லையில் சுற்றிய பிறகு மெல்ல திரும்பத் துவங்கியது. அந்த பலூனை அமெரிக்க விமானப் படை சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்காவை வேவு பார்க்க சீனாவினால் அனுப்பப்பட்ட பலூன் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. சீனா அதை மறுத்தது.
சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் பாகங்களை அமெரிக்க பாதுகாப்பு படையினர் தேடினார்கள். 60 ஆயிரம் அடியிலிருந்து வெடித்து சிதறிய பாகங்களை நிலப்பரப்பில் தேடுவது சிரமம். ஆனாலும் அமெரிக்க பாதுகாப்பு படையினர் அந்த முயற்சியை மேற்கொண்டார்கள். அதன் உடைந்த சிதறல்களை கண்டெடுத்தார்கள்.
பலூன் என்றதும் ஏதோ சின்னதாய் கையில் பிடிக்கும்படி இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.
இந்த பலூனின் உயரம் 200 அடி. அதாவது நம்ம சென்னை எல்.ஐ.சி. பில்டிங்கை விட 23 அடி உயரம் அதிகம். பிரம்மாண்ட பலூன். அதற்குள் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்கள். தொழில் நுட்பக் கருவிகள். இந்த பலூன் ரிமோட் கண்ட்ரோலில் நகரும். அந்த பலூனைத்தான் அமெரிக்க பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா உறுதியாக கூற சீனா தீவிரமாய் மறுக்கிறது.
’பருவநிலை மாற்றங்கள், சீதோஷ்ணம் மற்றும் ஆராய்ச்சி காரணங்களுக்காக வானில் செலுத்தப்பட்ட பலூன் இது. எதிர்பாராமல் அமெரிக்க வான் வெளியில் நுழைந்துவிட்டது. சீனாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க முயற்சிகளில் இதுவும் ஒன்று’ என்று சீன வெளியுறவுத் துறை அறிவித்தது.
இந்த பலூனை சுட்டு வீழ்த்தும்போதே இதே போன்று பறந்துக் கொண்டிருந்த மற்றொரு பலூனையும் அமெரிக்க பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அடுத்த சில நாட்களில் மேலும் இது போன்று இரண்டு பலூன்கள். அனைத்தும் அமெரிக்க எல்லைக்கு வெளியே பறந்துக் கொண்டிருந்தன. மொத்தம் நான்கு பலூன்கள். அனைத்தையும் சுட்டு வீழ்த்தியது அமெரிக்க விமானப் படை.
ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட அறிவியல் பலூன்களை வேவு பலூன்களாக பிம்பப்படுத்தி சீனாவை மட்டம் தட்டும் முயற்சி என்று சீனா திரும்பத் திரும்ப கூறுகிறது.
அமெரிக்கா அதை மறுக்கிறது.
இந்த இரண்டு வல்லரசு நாடுகளில் எது சொல்வது உண்மை என்ற ஆராய்ச்சியில் இறங்கினால் விடை கிடைக்காது. இரண்டு வல்லரசுகளுமே எதையும் செய்யக் கூடியவை.
அமெரிக்க சுட்டு வீழ்த்திய 4 பலூன்களும் 20 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 40 ஆயிரம் அடி உயரம் வரை பறந்தவை.
ஆராய்ச்சிக்காக, வானிலையை அறிவதற்காக பிரமாண்ட பலூன்களை வானில் பறக்கவிடுவது புதிதல்ல. அமெரிக்காவே தனது ஒவ்வொரு வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலமும் தினமும் இரண்டு பலூன்களை பறக்க விடுகிறது என்று செய்திகள் சொல்லுகின்றன. இவை துல்லியமான வானிலை கணிப்புகளுக்கு உதவுகின்றன. அரசு வானிலை மையங்கள் தவிர தனியார் வானிலை மையங்களும் இது போன்ற பலூன்களை தினசரி பறக்கவிடுகின்றன. ஒரு நாளில் அமெரிக்க வானில் நூற்றுக்கணக்கான பலூன்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பறந்துக் கொண்டிருக்கும்.
ஆனாலும் வானிலை பலூன்களுக்கும் உளவு பலூன்களுக்கும் சில அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வித்தியாசங்களை அமெரிக்க பாதுகாப்பு துறை துல்லியமாக கண்டுபிடித்துவிடும்.
வானிலை பலூன்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இயலாது. அவற்றை நமது விருப்பங்களுக்கு ஏற்ப திருப்ப இயலாது. அவை காற்றின் வேகம், வானிலை சூழலுக்கு ஏற்ப பறக்கும். ஆனால் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிலைத்தி நின்றன என்று கூறப்படுகிறது. அதனால் அது வேவு பலூன்கள் என்று உறுதியாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே வானில் ஒவ்வொரு நாடும் தனக்கான செயற்கை கோள்களை சுழலவிட்டிருக்கிறது. அந்த செயற்கைகோள்கள் மூலம் பூமியில் நடப்பதை கண்காணிக்க முடியும். வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் இதற்காகவே பல செயற்கைகோள்களை வானில் வைத்திருக்கின்றன.
அப்படியென்றால் வேவு பலூன்கள் எதற்கு என்ற கேள்வி எழும்.