தமிழ் சினிமாவில் காதலைப் பொறுத்தவரை, எத்தனையோ ’ரீல்’ ஜோடிகளையும், ’ரியல்’ ஜோடிகளையும் பார்த்திருக்கிறோம்.
சினிமா திரையில் சில ஜோடிகளைப் பார்க்கும் போது, நம்மையும் கூட காதல் வைரஸ் தாக்கும்.
ஆனால் வாழ்க்கையில் சில ஜோடிகளைப் பார்க்கும் போது மட்டும்தான் நமக்குள்ளே பொறாமை எட்டிப்பார்க்கும்.
அஜித்குமார் – ஷாலினி ஜோடி அப்படியொரு கலர்ஃபுல் காம்பினேஷன்,
அஜித்குமார் – ஷாலினி, இவர்களின் ’அமர்க்களமான’ காதலும், ’அட்டகாசமான’ திருமணமும், இல்லற வாழ்க்கையில் இவர்கள் உணர்வுப்பூர்வமாக கட்டியிருக்கும் ’காதல்கோட்டையும்’, ’என் வீடு என் கணவர்’ என ஷாலினி காட்டும் அக்கறையும், ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்று ஏகே காட்டும் பாசமும், ’நேர்க்கொண்ட பார்வையுடன்’ இவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் ’விஸ்வாசமும்’தான் காதல் மன்னன்’ தனது மலர் கிரீடத்தை எடுத்து அஜித் – ஷாலினியின் தலைகளில் சூட்டி அழகுப் பார்க்க செய்திருக்கிறது.
’திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்ற பழமொழியும் கூட உண்மையாக இருக்குமோ என்று ஒரு மைக்ரோ செகண்ட்டாவது நம்மை யோசிக்க வைக்கிறதுஇந்த ’மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடி.
இன்னும் இரண்டே ஆண்டுகள்தான்,அஜித்தும்- ஷாலினியும்தங்கள் காதலின் வெள்ளிவிழாவைக் கொண்டாட இருக்கிறார்கள் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் எப்படி மலர்ந்தது?
காதல் மன்னன்’ படத்தை தயாரித்த ‘வெங்கடேஸ்வரலாயம்’ நிறுவனத்திற்காக ஒரு படம் பண்ணி கொடுத்து உதவ நினைத்து அஜித் கால்ஷீட் கொடுத்தார்.
அந்தப் படம்தான் ‘அமர்க்களம்’.
இந்தப்படத்தில் அஜித்திற்கு யாரை ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று யோசித்தப் போது முதல் சாய்ஸாக இருந்தவர் ஜோதிகா. ’வாலி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பிரபலமாகி இருந்தார். அதனால் அமர்க்களத்தில் நடிக்க ஜோதிகாவிடம் அணுகியபோது, அவர் கேட்ட சம்பளம் பட்ஜெட்டில் இல்லை என்பதால் கமிட் செய்ய முடியாமல் போனது.
அந்த நேரம் ‘காதலுக்கு மரியாதை’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஷாலினியின் ’நெக்ஸ்டோர் கேர்ள்’ இமேஜ் அவரை ரசிகர்களிடையே கொண்டாட வைத்திருந்தது.
ஷாலினியை ஏன் கேட்க கூடாது என்று போனவர்களுக்கு ஒரே ஏமாற்றம். சின்ன வயதிலிருந்தே நடித்து கொண்டிருக்கிறேன். போரடிக்கிறது. படிக்கப் போகிறேன் என்று ஷாலினி மறுத்துவிட்டார்.
அஜித்தான் ஹீரோ என்று சொல்லி அவரை சமாதானம் செய்ய இயக்குநர் சரண் முயற்சிக்க, அதற்கு பலன் கிடைத்தது.
கதையைக் கேட்ட ஷாலினி பதில் ஏதுவும் சொல்லவில்லை.
இதனால் இயக்குநர் சரண், ‘ஷாலினி நடித்தால் படத்திற்கு ஒரு மெரிட் கிடைக்கும்’ என்று அஜித்திடம் மீண்டும் மீண்டும் சொன்னார்.
கொஞ்சம் யோசித்த அஜித், சரணிடம் ஷாலினியின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு ஷாலினிக்கு நேரடியாகவே போன் செய்துவிட்டார்.
’நல்ல கதை. நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று ஷாலினியிடம் அஜித் சொல்ல, ஷாலினியால் மறுக்க முடியவில்லை.
‘காதல் மன்னன்’ படத்தை நான் பார்க்க முடியுமா?’ என்று ஷாலினி கேட்க, உடனே அதற்கான ஏற்பாட்டை செய்ய, படம் பார்த்துவிட்டு ஷாலினி ஒகே சொல்ல, அமர்க்களம் ஆரம்பமானது.
இந்தப் படத்திற்கு அஜித் மொத்தமாக கால்ஷீட் கொடுக்கவில்லை. ஒரு மாதம் 10 நாட்கள். அடுத்த மாதம் 10 நாட்கள், இப்படி பிரித்து பிரித்து கொடுத்திருந்தார்.
முதல் ஷெட்யூலில் திரையரங்கில் வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்டது. அந்த ஷெட்யூல் முடியும் போது சரணை அழைத்த அஜித், ‘ஜி இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஒரே ஷெட்யூலில் முடிக்கிற மாதிரி ப்ளான் பண்ணுங்கள். பத்து நாள் பத்து நாளாக கால்ஷீட் கொடுத்தால், இந்தப்படத்தை முடிக்க ரொம்ப நாட்கள் பிடிக்கும். அதற்குள்ளே இந்தப் பெண்ணை காதலிக்க ஆரம்பித்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது’ என்று ஓபனாகவே சொல்ல, சரணுக்கு அதிர்ச்சி.
’சீக்கிரமாக முடிக்கவில்லை என்றால் உங்களுக்குதான் வில்லங்கம்’ என்று அஜித் சொல்ல, ஒரே ஷெட்யூலில் முடித்துவிடலாம். அப்படி ஷூட் செய்யும் போது, அஜித் காதலில் விழ வாய்ப்பில்லை. படம் முடிந்ததும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுவார்கள் என்ற கணக்கில் சரண் யோசித்தார்.
ஷூட்டிங் ஆரம்பித்தது. ஷாலினியை அஜித் மிரட்ட வேண்டும். அதுதான் ஷூட் செய்யப்பட வேண்டிய காட்சி. ஆனால் அஜித் கையில் வைத்திருந்த கத்தி தவறுதலாக ஷாலினியின் மணிக்கட்டில் பதம் பார்த்துவிட்டது. நம்மால்தானே இந்த காயம் என்று வருத்தப்பட்ட அஜித், ஷூட் முடியும் வரை ஷாலினியை அருகில் இருந்ததபடியே கவனித்து கொண்டார்.
விதி வலியது.
படம் வெளிவருவதற்கு முன்பாகவே அஜித் எதை நினைத்து பயந்து போனாரோ அது நடந்துவிட்டது.
இப்படி அஜித்திற்கும், ஷாலினிக்கும் காதல் பற்றிக்கொண்ட போது, அஜித் சொன்னது ‘’என் வாழ்க்கை ஒரு காட்டாறு மாதிரி. எதிர்பாராத பல திருப்பங்கள். காட்டாறு போகும் பாதையில் பாறைகளுடன் முட்டி மோதுவதைப் போலஏராளமான மோதல்கள். இப்படி என் தோளுக்கு மேல் எக்கச்சக்கமான விஷயங்கள் அழுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போது எனக்கான ஒரு சமுத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இந்த சமுத்திரம் என்னை சாந்தப்படுத்தும். என்னுடைய வேகத்தை சரிப்படுத்தும் என நம்புகிறேன்’ என்றார்
அஜித்தை இப்படியென்றால், ஏப்ரல் 24, 2000-ல் திருமணமானதுமே ஷாலினி சொன்ன வார்த்தைகள் இதுதான். எனக்கு ’நடிப்பு மீது ஆசை இருக்கிறது. ஆனால் அதைவிட அஜித் மீது ரொம்ப அதிக ஆசை..நடிப்புக்கு முழுக்கு போடுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வீட்டையும், சினிமா கேரியரையும் ஒரே நேரத்தில் பார்த்து கொள்கிற எண்ணம் எனக்கு இல்லை. நிம்மதியான வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்’ என்று வெளிப்படையாகவே பேசிய ஷாலினி திருமணம் முடிந்த அடுத்த விநாடியே நடிப்பிற்கு குட்பை சொல்லிவிட்டார் .
அன்று முதல் இன்று வரை, அஜித் – ஷாலினி ’இருவரும் ’அசல்’ ’காதலுக்கான ’மாடல்’ ஜோடியாக இருக்கிறார்கள்.
அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் எப்படி முழுமையானது என்றால்,ஷாலினி தனது ஈகோவை ஒதுக்கி வைத்தார்.
அஜித் தனது கோபத்தை அடக்கி வைத்தார்.
அஜித் மோட்டர் ரேசில் கலந்து கொண்ட போது, ரேஸ் போனால் அஜித் உயிருக்கு ஆபத்து. அவர் இப்படி செய்யலாமா. நடிப்பை மட்டும் பார்த்து கொள்ள வேண்டியதுதானே என்ற கமெண்ட்கள் எழுந்தன. சாதாரண மக்களே இப்படி கவலைப்படும் போது, தனது கணவரின் மீது அக்கறை இருக்காதா?
‘நடிப்பைவிட ரேசிங்தான் உங்களுக்குப் பிடிக்கும். யாருக்காகவும் உங்கள் ஆத்மார்த்தமான ஆசையை விட்டுக்கொடுக்காதீர்கள்.’ என்று அஜித்துடன் ரேஸ் ட்ராக்கில் புன்னகையுடன் வந்து நின்று உற்சாகப்படுத்தியவர் ஷாலினி
’எனக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்தவள் நீ’ என்று அஜித் ஷாலினிக்கு பார்த்து பார்த்து செய்யும் விஷயங்கள் வெளியே தெரியாத காதல் கலாட்டா.
ஷாலினிக்கு ஷட்டில் விளையாட பிடிக்கும் என்பதால், தனது வீட்டிற்குள்ளே ஒரு ஷட்டில் கோர்ட்டை கட்டிமுடித்தஅதை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தவர் அஜித்.ரேசிங் நடந்த, விபத்துகளால் முதுகுத்தண்டிலும், முதுகிலும் மொத்தம் 23 ஆபரேஷன்கள். வலி உயிரை எடுத்துவிடும். இரவெல்லாம் தூங்க முடியாது.பெயின் கில்லர் மருந்துகள் கூட வேலை செய்யாது.
மருந்துகளுக்குப் பதிலாக வலியை தாங்கும் சக்தியைக் கொடுப்பது ஷாலினியின் புரிதல்.
மீடியாவுக்கு பேட்டி என்று கேட்டால் நாசூக்காக நோ சொல்லிவிட்டு, அக்கறையுடன் நலம் விசாரிப்பது ஷாலினியின் வழக்கம். இதற்கு காரணம், சினிமாவின் லைம்லைட் தன் மீது விழுந்துவிடக்கூடாது. குடும்பம்தான் முக்கியம்தான் என்பதில் கவனமாக இருப்பது ஷாலினியின் மெச்சூரிட்டி,
சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யாருக்கு முதலிடம் என்று மீடியாவில் பெரும் சர்ச்சை கிளம்பிய போது, இந்த ‘ரேஸில் யார் குறுக்கே வந்தாலும், நான் ஓவர்டேக் செய்து போய் கொண்டே இருப்பேன்’ என்று ஒரு வேகத்துடன் கர்ஜித்தவர் அஜித்.
ஆனால் அதே அஜித் இன்று தன்னுடைய வேலைகளை மட்டுமே ’விவேகத்துடன்’ பார்த்துகொண்டிருக்க காரணம் ஷாலினியின் மீது அஜித்திற்கு இருக்கும் பேரன்பும், அலாதியான காதலும்தான்.
முன்பு ஒரு முறைதிருவான்மியூரில் மரம் நடும் விழாவின் போது, கடல் ஊருக்குள் வந்துவிட்டது என்று பரபரப்புடன் பதறியடித்தது சென்னை.,‘சுனாமியாக இருக்கும்’ என்று பல வருடங்களுக்கு முன்பே சொன்னவர் அஜித்.
சுனாமி என்ற வார்த்தை இங்கு அனைவருக்கும் பரீட்ச்சயமாவதற்கு முன்பே அஜித் அதைப்பற்றி தெரிந்து வைத்திருந்தைப் போல் பல விஷயங்களில் அஜித்திற்கு நுண்ணறிவு மிக அதிகம்.
அதேபோல் தான் டிரெஸ் விஷயத்திலும். எந்த டிரெஸ் எந்த ஃபங்கஷனுக்கு அணிய வேண்டும், எந்த கலர் டிரெஸ் சரியாக இருக்க்கும் என டிப்ஸ் கொடுப்பதில் அஜித் கில்லாடி.
இப்பொழுதும் கூட ஷாலினிக்கு டிரெஸ்ஸிங் டிப்ஸ்களை அவ்வப்போது சொல்லி அழகுப்பார்ப்பதில் அஜித் ஒரு கலர்ஃபுல் காதலர்.
காட்டாறு போல பாய்ந்தோடும் எனக்கான சமுத்திரம் கிடைத்துவிட்டது. என அஜித் ஷாலினி மீது வைத்த நம்பிக்கை இன்று அப்படியே நிஜமாகி இருக்கிறது.
புகழ்பெற்ற எழுத்தாளர் பாலொ கால்லோ [paulo Coelho] எழுதிய ‘The Alchemist’ -ல் ’When you want something, the whole universe conspires to make it happen.’என்று ஒரு வரி இருக்கும்.
அதுதான் அஜித் – ஷாலினி எதிர்பார்த்த வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.