No menu items!

அறநிலையத்துறை இல்லையென்றால் கோவிலில் அறம் இருக்காது – ‘தோழர்’ ஸ்ரீவித்யா – 1

அறநிலையத்துறை இல்லையென்றால் கோவிலில் அறம் இருக்காது – ‘தோழர்’ ஸ்ரீவித்யா – 1

‘தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத் துறையை ஒழிப்பதுதான் என் முதல் பணியாக இருக்கும்’ என்று சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியுள்ளார். கிறிஸ்தவர்கள் சர்ச்சுகள் கிறிஸ்தவ அமைப்புகளிடமும் இஸ்லாமிய சர்ச்சுகள் இஸ்லாமிய அமைப்புகளிடமும் இருக்கும்போது இந்து கோயில்களை மட்டும் அரசு எடுத்துக்கொள்வது சரியா என்று இந்துத்துவவாதிகள் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு எதிர் தரப்பினர் பதில் என்ன? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த தோழர் ஸ்ரீவித்யா அளித்த பேட்டி இது.

கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்பவர்கள், இந்து அறநிலையத் துறை வேண்டாம் என்பவர்கள், அரசின் வேலை சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, மின்சாரம் வழங்குவது, சாலை போடுவது போன்ற அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி பேணுவதுதான்; மத விவகாரங்களில் தலையிடக் கூடாது என்கிறார்கள். உங்கள் பதில் என்ன?

தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய கோவில்கள் மன்னர்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும் பிற்காலத்தில் நாயக்க மன்னர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் எப்படி இந்த கோயில்களை உருவாக்கினார்கள்? அதற்கான பணம் அவர்களுக்கு எங்கேயிருந்து வந்தது? வரியாக வசூலிக்கப்பட்ட மக்களின் பணம் அரசு கருவூலத்தில் சேர்ந்து, அதைக் கொண்டுதான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்களுக்கு இருக்கும் சொத்துகள், நிலம், நகை எல்லாம்கூட மக்கள் கொடுத்ததுதான். பெரும்பான்மை நிலங்கள் மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. ஆக கோவில் உருவானது மக்கள் காசில்தான், கோவிலின் சொத்துகளும் மக்களுடையதுதான். ஆக கோவிலின் முழு உரிமை மக்களைத்தான் சேரும்.

மன்னர்கள் காலத்தில் கோவில்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. மன்னர்கள் காலம் முடிந்து இப்போது நடப்பது மக்களாட்சி. எனவே, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கட்டுபாட்டில் கோவில்கள் உள்ளன.

மக்களின் சொத்து என்றால் மக்களிடமே கொடுத்துவிட வேண்டியதுதானே என்பார்கள். எப்படி? யாரிடம் கொடுப்பது? பொதுப் போக்குவரத்து மக்களுடையதுதான். அதற்காக மக்களிடைமே கொடுத்து நீங்களே நிர்வாகம் செய்துகொள்ளுங்கள், பராமரித்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட முடியுமா? இல்லைதானே, அதுபோல்தான் மக்களின் சொத்துக்களான கோவில்கள் இப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தால் நிர்வாக செய்யப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது.

இன்னொன்று, இந்து சமய அறநிலையத் துறை இருக்கக்கூடாது என்பவர்கள், இந்த துறை ஏன் உருவானது? உருவாக்கியது யார்? என்று இதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும் பார்க்க வேண்டும். இந்த துறை உருவாக்கப்பட்டு 200 வருடங்கள் ஆகிறது. முதலில் 1810ஆம் ஆண்டு பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. 1863இல் அது இன்னும் மேம்படுத்தப்பட்டது.

மத விவகாரங்களில் தலையிடக் கூடாது என்கிறீர்கள்; சரி, அதில் பிரச்சினை வந்தால் அரசு தலையிட்டுதானே ஆகவேண்டும். உங்களுக்கும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கும் பிரச்சினை. அவர் காவல்துறையில் போய் புகார் தெரிவிக்கிறார் என்றால் காவல்துறை வரத்தானே செய்யும். எங்கள் குடும்ப விவகாரத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்று சொல்ல முடியுமா? அப்படித்தான், கோவில்களில் நிறைய பிரச்சினை உள்ளதாக உண்மையான பக்தர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில்தான் அரசு தலையிட்டது. கோவில்களில் நிறைய ஊழல்கள் நடக்கிறது, கொள்ளை நடக்கிறது, கொலை நடக்கிறது என்று பக்தர்கள் போய் பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் புகார் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கினார்கள். பின்னர் படிப்படியாக அது செழுமைபடுத்தப்பட்டது.

1920இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது மீண்டும் பக்தர்கள் கோயில்களில் ஊழல் நடப்பதாக புகார்களுடன் வந்து நின்றார்கள். அதனால், நீதிக்கட்சி அரசாங்கம் ஒரு குழு அமைத்தது. அந்த குழுவில் இரண்டு பேர் பிராமணர்கள். அந்த குழு அறிக்கை அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை அரசு உருவாக்கியது.

இப்போது இந்த சட்டம் வேண்டாம், இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்பவர்களின் நோக்கம் கோவில்களின் பல லட்சக்கணக்கான சொத்துகள்தான். ‘துணிவு’ படத்திலாவது  ரவி 25 ஆயிரம் கோடியைத்தான் ‘ஆட்டையை’ போட நினைத்தான். இந்து சமய அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்று சொல்பவர்கள், ஆலய மீட்புக் குழுவினர் ‘ஆட்டைய’ போடணும்னு நினைக்கிறது பல லட்சம் கோடி கோவில் சொத்துகள், நிலங்கள், தங்கம், வைரம்.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...