No menu items!

எதிர்த்த எடப்பாடி – பணிந்த பாஜக – மிஸ் ரகசியா

எதிர்த்த எடப்பாடி – பணிந்த பாஜக – மிஸ் ரகசியா

“ஒருவழியா எடப்பாடி பழனிசாமி நினைச்சதை சாதிச்சுட்டாரே. இரட்டை இலை சின்னத்தை வாங்கிட்டாரே” – ஆபீசுக்கு வந்த ரகசியாவுக்கு சீட்டில் உட்காரக்கூட நேரம் கொடுக்காமல் முதல் கேள்வியை வீசினோம்.

“இரட்டை இலை சின்னம் வாங்கினது மட்டுமில்ல, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று பாஜக அழைக்கிற அளவுக்கு செல்வாக்கு அதிரிச்சிருக்கு…அண்ணாமலை அறிக்கை பாத்திங்களா?”

“ஆமாம், பார்த்தோம். பாஜகவை எடப்பாடி சரியா ஹேண்டில் பண்றார் போல…”

“ஆமாம். அண்ணாமலையும் சிடி ரவியும் வந்தபோதே எடப்பாடி பழனிசாமி அவங்ககிட்ட டஃபாதான் பேசியிருக்கிறார். பதினைஞ்சு நிமிஷம் காக்க வச்சிருக்கார். லேட்டா வந்த எடப்பாடி, ‘டெல்லியில இருந்து ஒரு முக்கிய நபர் பேசிக்கிட்டு இருந்தார். அதான் லேட்’னு சொல்லி இருக்கார். இதன்மூலமா டெல்லியில தனக்கு ஒரு ஹோல்ட் இருக்குன்னு சொல்லாம சொல்லி இருக்கார். இதெல்லாம் பாஜகவுக்கு புது அனுபவம்னு சொல்றாங்க”

”எப்படி இத்தனை தைரியம்?”

“தைரியத்தைப் பத்தி அப்புறம் சொல்றேன்..எடப்பாடி பாஜக தலைவர்களை சந்தித்தபோது அண்ணாமலை அதிகமா பேசலை. சி.டி.ரவிதான் பேசியிருக்கார். ‘பி ஃபார்ம்ல ஓபிஎஸ் கிட்ட இருந்து கையெழுத்து வாங்கித் தர்றது எங்க வேலை. அவரோட வேட்பாளரையும் வாபஸ் வாங்க வைக்கறோம். பாஜகவும் உங்களுக்கு ஆதரவு தரும். ஒத்துமையா இருந்து திமுகவை தோக்கடிக்கணும்’னு சொல்லி இருக்கார். எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட எடப்பாடி, ‘நான்தான் ஏற்கனவே ஓபிஎஸ் வேண்டாம்னு சொல்லிட்டேனே. அவர் கட்சியிலயே இல்லை. அப்புறம் அவர் கையெழுத்து எனக்கு எதுக்கு? இதைக்ச் சொல்றதுக்கு நீங்க நேர்ல வந்திருக்க வேண்டாம். போன்லையே சொல்லி இருக்கலாம்’னு சொல்லி இருக்கார்.”

“கேள்விக்கு பதில் இன்னும் சொல்லலையே? எடப்பாடிக்கு எப்படி இத்தனை தைரியம்?”

”எடப்பாடி பழனிசாமிகிட்ட கொள்கை, கோட்பாடுலாம் இருக்கோ இல்லையா அரசியல் கணக்குப் போடுற திறமை நிறைய இருக்கு. ஓபிஎஸ்க்கு முழுமையான பலம் இல்லைனு அவருக்குத் தெரியும். அதே மாதிரி 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல அதிமுகவோட ஆதரவு இல்லாம பாஜகவால தமிழ்நாட்டுல ஜெயிக்கிறதைப் பத்தி யோசிக்க முடியாது. ஒபிஎஸ்ஸை நம்பி பாஜக போகாதுனும் தெரியும். பாஜக மேலிடத்துக்கும் தனக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் ஒரு தகவலை சொல்லியிருக்கிறார். இன்னைக்கு இருக்கிற சூழல்ல நாங்க இப்படி செயல்பட்டாதான் இந்த இடைத் தேர்தல்ல ஜெயிக்க முடியும்..அதுதான் பொதுத் தேர்தலுக்கு பலத்தைக் கொடுக்கும். அப்போ நாங்க பாஜக பக்கம்தாம் இருப்போம்னு சொல்லியிருக்கிறார். அதுக்கு மேலிடத்துலருந்து பாசிடிவ்வா தலையாட்டியிருக்காங்க. அதனாலதான் அத்தனை கெத்து”

“பாஜகவுக்கு ஒபிஎஸ்தானே நெருக்கம். அவரை எப்படி பாஜக சமாளித்தது?”

“ ‘இப்போதைக்கு நீங்க அமைதியா இருங்க. நாடாளுமன்றத் தேர்தல்ல பார்த்துக்கலாம்’னு அவர்கிட்ட சொல்லி இருக்காங்க. ஓபிஎஸ்ஸும் இவங்க சொன்னதுக்கெல்லாம் ஓகே சொல்லி இருக்கார். பாவம்”

”உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்ததுமே எடப்பாடி அணி வேகமா செயல்பட்டிருக்கே”

“ஆமாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் இரவோட இரவா அதிமுக தலைமைக் கழகத்தில் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம் ரெண்டு பேரும் பொதுக்குழு உறுப்பினர் ஒப்புதல் படிவத்தை தயார் செய்து மாவட்ட செயலாளர்கள் மூலமா பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி இருக்காங்க. அந்த படிவத்துல உடனடியா கையெழுத்துப் போட்டு அனுப்பறதுக்கான செலவை கட்சி மேலிடம் செய்யும்னு சொல்லி இருக்காங்க. பொதுக்குழு உறுப்பினர்களும் உடனடியா படிவத்துல கையெழுத்து போட்டு அனுப்பி இருக்காங்க.”

“உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாஜகவோட ரியாக்‌ஷன் என்ன?”

“பாஜகவைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு. இந்த தீர்ப்பின் மூலமா எடப்பாடிதான் அதிமுகன்னு ஆகிட்டதா நினைக்கறாங்க. அதனால நாடாளுமன்றத் தேர்தலை மனசுல வச்சு அவரோட சுமுகமா போயிடலாம்னு தமிழக பாஜக முடிவெடுத்து இருக்கு.”

“அப்ப அதிமுக வேட்பாளருக்கு ஆதரவா பாஜக பிரச்சாரம் செய்யுமா?”

“அவங்க பிரச்சாரம் செய்யலனா நல்லதுனு நினைக்கிறாங்க அதிமுககாரங்க” என்று சிரித்தாள் ரகசியா.

“அவ்வளவு கான்ஃபிடெண்டா இருக்காங்களா?”

“எப்படியாவது அதிமுகவை ஜெயிக்க வச்சிடறேன்னு எடப்பாடி கிட்ட செங்கோட்டையன் வாக்கு கொடுத்திருக்கிறாராம். பணத்தை மட்டும் பாக்காதிங்க, கொஞ்ச ஃப்ரீயா விட்டிங்கனா ஜெயிச்சுடலாம்னு சொல்லியிருக்கிறார். எடப்பாடியும் எல்லாவற்றுக்கும் தயார், நீங்க என்ன வேணும்னாலும் செய்ங்கனு சொல்லியிருக்கிறார். இங்க இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நிக்கிறது உதய சூரியன் இல்லை, கை சின்னம்தான். இது நமக்கு சாதகம்னும் செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். செங்கோட்டையன் போடுற வியூகங்கள்ல எடப்பாடி பழனிசாமி ஹேப்பி”

“ஓபிஎஸ் டீமோட மூட் என்ன?”

“பாஜக தங்களை ஏமாத்திட்டதா ஓபிஎஸ் நினைக்கறார். அதேநேரத்துல இனி ஓபிஎஸ்ஸை நம்பி எந்தப் பயனும் இல்லைன்னு அவரோட அணியில இருக்கிற சில முக்கிய தலைவர்கள் நினைக்கறாங்க. அதிமுகவுக்கு போனா நமக்கு மரியாதை கிடைக்காது. அதனால திமுக பக்கமா ஒதுங்கிடலாம்னு வைத்திலிங்கம் நினைக்கறாராம். வேறு சில நிர்வாகிகள் பாஜககிட்ட இப்பவே பேச ஆரம்பிச்சிருக்காங்க. அதுல ஓபிஎஸ் மகனும் ஒருத்தர். மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் எடப்பாடிகிட்ட போயிருவாங்கனு சொல்றாங்க.”

”திமுகவுல எப்படி இருக்காங்க?”

”திமுகவுல கொஞ்சம் ஷாக் இருக்கு. இரட்டை இலை சின்னம் கிடைக்காதுனு நம்பியிருக்காங்க. கடந்த தேர்தல்ல ஈரோடு கிழக்கு தொகுதியில மக்கள் நீதி மய்யம் கட்சி 9 ஆயிரத்துக்கும் மேல வாக்குகள் வாங்கி இருக்கு. அந்த வாக்குகளையும் சேர்த்து இந்த தேர்தல்ல நாம 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துலயாவது ஜெயிக்கணும்னு கட்சி தலைமை சொல்லியிருக்கு”

“முதல்வர் பிரச்சாரம் உண்டா?”

“இன்னும் முடிவு செய்யலனு சொல்றாங்க. இந்தத் தேர்தல முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துல நடத்தலாம்னு திமுக நினைத்திருந்தது. பெரிய வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சா அதன் புகழ் உதய்நிதிக்கு கிடைக்கும் இல்லையா, அதனால. இப்போ இரட்டை இலை சின்னம் கிடைச்சதுனால திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டு பொதுக் கூட்டங்களில் பேசுவார்னு திமுக வட்டாரத்துல சொல்றாங்க. ஈரோடு கிழக்குல எல்லா அமைச்சர்களும் திமுக மாவட்டச் செயலாளர்களும் ஃபுல்லா சுத்திக் கிட்டே இருக்காங்க. அவங்க கண்ட்ரோல்ல இருக்கிற பகுதில திமுகவுக்கு வாக்குகள் குறைஞ்சா தலைமைகிட்ட கெட்டப்பெயர் வந்துடும்னு பயப்படுறாங்க. ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு அமைச்சர் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்கள் கொண்ட குழுவை திமுக அமைச்சிருக்கு. ஜெயிச்சுருவோம் என்ற நம்பிக்கையைத் தாண்டி எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கிறோம் என்பதைதான் திமுகவினர் முக்கியமா நினைக்கிறாங்க”

“ரெண்டு கூட்டணியும் பணத்தை இறக்குமே?”

“இப்பவே ஐயாயிரம், மூவாயிரம்னு கட்சிகள் களத்துல வாக்குகளுக்கு இறக்கியிருக்குனு ஒரு நியூஸ் இருக்கு. எலெக்‌ஷன் டைம்ல வாக்களர்களுக்கு பல பரிசுகள் கிடைக்கும். நான் கூட ஈரோடு கிழக்குக்கு மாறிறலாமனு யோசிக்கிறேன். நீங்க கொடுக்கிற சம்பளம் பத்தல” சிரித்தாள் ரகசியா.

”தீபா, மாதவன் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவுக்கு போயிருந்தியா?”

“ஆமாம். நிறைய எடப்பாடி ஆதரவு அதிமுகவினர்தான் வந்திருந்தார்கள். எல்லோரும் ஒபிஎஸ்ஸை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். பணம், காசை கொடுக்காமல் எல்லோரும் தன் பின்னால் வர வேண்டும் என்று நினைக்கிறார், அதனால்தான் அவரால் முன்னேற முடியவில்லை என்று ஒரு அதிமுக பிரமுகர் கூறினார்”

“குழந்தைக்கு என்ன பெயர் வச்சாங்க?”

“முதல்ல ஜெயவேதானு சொன்னாங்க. அப்புறம் கார்த்திகானு வச்சாங்க. மஹதி கச்சேரி நல்லாருந்துச்சு”

“தீபா- மாதவன் கிட்ட பேசினியா?”

“பேசுனேன். ஆனா அரசியல் இல்லை’ என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...