நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டைவிட எல்லோரையும் கவர்ந்தது அவர் அணிந்திருந்த சிவப்பு நிற பளிச் புடவை.
கடந்த ஐந்து வருடங்களாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
ஒவ்வொரு முறையும் அவரது சேலை எல்லோருடைய கவனத்தையும் கவரும்.
அது என்ன சேலை என்ற ஆவல் பிறக்கும். பெண்கள் அந்த சேலை கிடைக்குமா என்று கடைகளில் தேடுவார்கள். அந்த வகை சேலைகளின் விற்பனை அதிகரிக்கும். இந்த முறையும் அப்படியே.
2019ல் அவர் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த போது அவர் அணிந்திருந்தது இளஞ் சிவப்பு நிற மங்களகிரி (Mangalagiri Sarees) வகை சேலை.
மங்களகிரி சேலைகள் ஆந்திராவை சேர்ந்தவை. மங்களகிரி நகரில் உள்ள நரசிம்மர் ஆலயத்தில் பக்தர்கள் இந்த வகை சேலைகளை கடவுளுக்கு காணிக்கையாக கொடுப்பார்கள். அதன் பின் இந்த வகை புடவைகள் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது.
நிர்மலா சீதாராமன் மங்களகிரி புடவையை அணிந்ததும். அந்த புடவை மேலும் புகழ்பெற்றது. பல பெண்கள் மங்களகிரி புடவைகளை வாங்கினார்கள்.
2020 பட்ஜெட் வாசித்த போது பளிச் மஞ்சள் நிறத்தில் பட்டுப் புடவை அணிந்திருந்தார். மங்களகரமான மஞ்சள் நிறத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தது எல்லோரையும் கவர்ந்தது.
2021ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது சிவப்பு மற்றும் மங்கல் வெள்ளை பொச்சம்பள்ளி பட்டுப் புடவை (Pochampally Saree) அணிந்திருந்தார் நிர்மலா சீதாராமன். பொச்சம்பள்ளி சேலைகள் தெலங்கானாவிலுள்ள போதன் பொச்சம்பள்ளி நகரை சேர்ந்தவை.
நிர்மலா சீதாராமன் அணிவதற்கு முன் அதிகம் புகழ்பெறாமல் இருந்த பொச்சம்பள்ளி புடவைகள் வேகமாக இந்தியா முழுவதும் புகழ் பெறத் துவங்கின.
2022 ஆண்டு பட்ஜெட் வாசிப்புக்கு சிவப்பும் பழுப்பும் வெள்ளையும் கலந்த பொம்காய் (Bomkai Sarees) வகை சேலையை கட்டியிருந்தார் நிர்மலா சீதாராமன்.
இந்த பொம்காய் சேலைகள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவை. நிதியமைச்சர் இந்த வகை சேலையை அணிந்த பிறகு பொம்காய் வகை சேலைகளுக்கு மவுசு அதிகரித்தது.
இந்த வருடம் 2023ல் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தது இல்கால் (Ilkal Saree) கைத்தறி சேலை. சிவப்பு நிற சேலையில் தங்க நிற நாவலகுண்ட் கசூல்டி எம்ராய்ட்ரி வேலைப்பாடுகளுடன் மிக அழகாக இருந்த சேலை எல்லோர் மனதையும் கவர்ந்தது. இந்த சேலை கர்நாடக மாநிலத்தை சேர்ந்தது.
நிர்மலா சீதாராமனுக்கு இந்தப் புடவையை மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த வருடம் கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் வருகிறது. அதனால்தான் கர்நாடகத்து சேலையை நிர்மலா சீதாராமன் அணிந்தார் என்றும் கூறப்படுகிறது.