வெறும் 95 நிமிடங்கள், சில விநாடிகள் மட்டும்தான்.
அதற்குள் நமக்குள்ளே ஒரு புழுக்கத்தை உருவாக்கி விடுகிறது ‘த க்ரேட் இந்தியன் கிச்சன்’.
கதையின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் இருந்தது அதிகாலையில் எழுந்திருக்கிறார். காய்கறிகளை வெட்டுகிறார். தோசை சுடுகிறார். சாம்பார் வைக்கிறார். தேங்காய் சட்னி வைக்கிறார். சிதறிக்கிடக்கும் எச்சில்களை துடைக்கிறார். பாத்திரங்களைக் கழுவுகிறார். ஒழுகிக் கொண்டிருக்கும் கிச்சன் சிங்க் கழிவுநீரை துடைக்கிறார். நாற்றமடிக்கும் சமையலறை கழிவுகளை கொட்டுகிறார். ஹேண்ட் வாஷ் போட்டு கைக்கழுவுகிறார்.
காலையில் எழுந்திருக்கும் ராகுல் ரவீந்திரன் யோகா செய்கிறார். இரண்டு முட்டை தோசை கேட்கிறார். வீட்டு சமையல்தான் மதியத்திற்கு வேண்டுமென சொல்லாமல் சொல்கிறார். மனைவிக்கு தேவையா, விருப்பமா, இல்லையா என்பதை கூட யோசிக்காமல் பெட்ரூம் லைட்டை அணைக்க சொல்கிறார்.
மறுபக்கம் நியூஸ் பேப்பரை சாவகாசமாக படித்து கொண்டிருக்கும் அவரது அப்பா பல் தேய்ப்பதற்கு கூட மனைவிதான் பேஸ்ட்டையும் ப்ரஷ்ஷையும் கொண்டு வந்தது கொடுக்க வேண்டும். அவர் வெளியே கிளம்பும் போது மனைவிதான் செருப்பை எடுத்து கொண்டுவந்து வைக்க வேண்டும்.
இந்த காட்சிகள்தான் மீண்டும் மீண்டும்… மீண்டும் மீண்டும்… மீண்டும் வருகிறது. இருந்தாலும் நமக்கு சலிப்பு தட்டவில்லை. ஆனால் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
படம் முடிந்து இருக்கையிலிருந்து எழுந்திருக்கும் போது, நம்முடைய வீட்டிலும், அம்மாவோ அல்லது மனைவியோ இப்படிதான் இருந்திருப்பார்களோ அல்லது இருக்கிறார்களோ என்று அந்த நேனோ செகண்ட்டில் ஒரு ஃப்ளாஷ் அடிக்கிறது. அது தான் ‘த க்ரேட் இந்தியன் கிச்சனின்’ வெற்றி.
இப்படி நான்கு முக்கிய கதாபாத்திரங்கள், ஒரு சமையலறை, ஒரு டைனிங் ஹாலை மட்டுமே வைத்து கொண்டு கதையை எழுதியிருக்கிறார் ஜோ பேபி.
மலையாளத்தில் நிமிஷா சஜயன், சூரஜ் வெஞ்சரமூடு இருவரும் வெளுத்து வாங்கிய ஜோ பேபியின் ஸ்கிரிப்ட்தான் ‘த க்ரேட் இந்தியன் கிச்சன்’.
இதே கதையை அப்படியே தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஆர். கண்ணன்.
நிமிஷா நடித்த மனைவி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கணவராக சூரஜ் நடித்த கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன்.
பொதுவாக ரீமேக் என்றாலே ஒரிஜினல் வெர்ஷனின் அப்க்ரேட்டான ஸ்கிரிப்ட்டாக இருக்கும். ஆனால் இயக்குநர் ஆர். கண்ணன் இந்த விஷயத்தில் பெரிதாக மெனக்கெடாமல், ஜெராக்ஸ் காப்பியாகவே எடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் இருவரது குடும்பங்களை மட்டும் கொஞ்சம் வசதியான குடும்பங்களாக அப்க்ரேட் செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷை பெண் பார்க்க வரும் ராகுல் ரவீந்திரன் குடும்பத்தைப் பற்றி குறிப்பிடும் போது, ‘பெரிய குடும்பம்.. பெரிய குடும்பம்’ என்று வசனத்தில் வரும். ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த வீட்டில் என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று சொல்லும் போது, அவரது அம்மா ‘பெரிய குடும்பம் நீதான் பொறுத்து போகவேண்டும்’ என்று சொல்வார். ஆனால் படம் முடிந்து நம்முடைய வீட்டு கிச்சனுக்கு வந்து இரண்டு முட்டை தோசை சாப்பிட்டு முடிக்கும் வரை எவ்வளவு தீவிரமாக யோசித்தாலும், ராகுல் ரவீந்திரன் குடும்பம் எந்த வகையில் பெரிய குடும்பம், பணத்திலா, பலத்திலா, பின்புலத்திலா இல்லை குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையிலா என்று புலப்படவில்லை.
பெரிய குடும்ப கல்யாணம் போல் பில்டப் கொடுத்துவிட்டு, பட்டென்று பழைய பஞ்சாங்க பாணியிலான சமையலறைக் காட்டுகிறார்கள். ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் என்றால் கூட, அந்த சமையலறைக்கும் நமக்குமான கனெக்ட் இருக்கும். ஆனால் கொடுக்கப்படும் சில பில்டப் காட்சிகளால், ஒரு பெரிய குடும்பம், வீட்டு மருமகளை வேண்டுமென்றே டார்க்கெட்டாக வைத்து டார்ச்சர் செய்வதைப் போன்ற உணர்வுதான் எழுகிறது.
இந்த விஷயங்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு பார்த்தால், பல சென்சிட்டிவான விஷயங்களை கையிலெடுத்து இருக்கிறார்கள். செக்ஸ் என்பது ஆணுக்கு அவசியம். பெண்ணிற்கு அந்த உணர்வு இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி. ஒரு பெண் உண்மையை சுட்டிக்காட்டினாலும் கூட, சாரி கேட்டால்தான் வாழ்க்கையே. பெண்களுக்கு வீட்டை நிர்வாகம் பண்ணுவதுதான் என்று பெருமையாக பேசிவிட்டு மாமனார் தனது உள்ளாடையை கையால் துவைக்கும்படி கேட்பது. இப்படி பல காட்சிகளில் அன்பு, பாசம், மனைவி என்ற போர்வையில் பெண்களை தங்களது வீட்டில் ஒரு எமோஷனல் எம்ப்ளாயியாக வைத்திருப்பதை காட்டியிருப்பது அசத்தல்.
இருட்டு நிறைந்திருக்கும் கிச்சனில் பல கோணங்களில் படம் பிடித்திருக்கும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, கழுவும் எழும் பாத்திரங்களின் அந்த இரைச்சலை அப்படியே காதுகளுக்குள் ஒலிக்கச் செய்யும் சவுண்ட் ரிக்கார்டிங் இரண்டும் கிச்சனுக்குள் ஐஸ்வர்யாவுடன் நாமும் கூடவே இருப்பது போன்ற உணர்வை உருவாக்குகின்றன.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் சம்பளம் இல்லாத பணிகளுக்கான பளு ஆண்களைவிட பெண்களுக்கு மிக அதிகமிருக்கிறது. இண்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் ரிப்போர்ட்டின் படி, 2018-ல் பெண்கள் நாளொன்றுக்கு சம்பளமில்லாத பணிநேரமாக 312 நிமிடங்கள் உழைக்கிறார்கள். ஆண்கள் 29 நிமிடங்கள் மட்டும் இந்தப் பணியைப் பார்ப்பதாக தெரியவந்திருக்கிறது. அந்த உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறது ‘த க்ரேட் இந்தியன் கிச்சன்’