ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தோம். தேர்தல் பிரசாரத்துக்கு மு.க.ஸ்டாலின் அவசியம் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவரும் வருவதாக சொன்னார். எங்களை பொறுத்தவரை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே ‘கை’ சின்னத்துக்கு கடந்த 3, 4 நாட்களாக தி.மு.க. அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, காங்கிரஸ் தொண்டர்களும், தி.மு.க. தொண்டர்களும், வாக்கு சேகரித்து பிரசாரம் செய்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்தோம்” என்றார்.
இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை – அண்ணாமலை சூசக தகவல்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “இடைத்தேர்தல் என்பது கட்சிகள் பலம் காட்டும் தேர்தல் அல்ல. கூட்டணிக்கென்று மரபு, தர்மம் உள்ளது. அதன்படி நடந்துகொள்ள வேண்டும். கூட்டணி தர்மப்படி நடந்து கொண்டால்தான் அனைவருக்கும் மதிப்பு இருக்கும். கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான். ஈரோட்டில் அதிமுகவினர் பலர் இதற்கு முன்பாக வெற்றி பெற்றுள்ளனர். ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் உள்ளனர். போட்டியிடக்கூடிய வேட்பாளர் பண பலம் மற்றும் அதிகார பலத்தை முறியடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
கமலிடம் ஆதரவு கேட்போம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க.வுக்கு நன்றி தெரிவித்தோம். கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலுக்கு கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். எதிரணியில் பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறினார்.
மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
மாராட்டிய மாநிலம் கோவா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் கலந்து கொண்டார் பேசினார். அப்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்’ என்று கூறினார். இந்த கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்று வெளியிட்டுள்ள ட்விட்டில், “உயர் நீதிமன்ற வழக்காடும் மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள்’ எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.