No menu items!

அடிப்பட்டு உஷாரான ராஷ்மிகா மந்தானா!

அடிப்பட்டு உஷாரான ராஷ்மிகா மந்தானா!

சில நேரங்களில் அனுபவங்களை விட வேறெதுவும் வாழ்க்கையை நமக்கு கற்று கொடுக்க முடியாது.

அப்படிதான் ராஷ்கிகா மந்தானா விஷயத்திலும் நடந்திருக்கிறது.

‘நேஷனல் க்ரஷ்’ என்று கொண்டாடப்பட்டதால் கொஞ்சம் மிதப்பில் இருந்த ராஷ்மிகா தன்னை அறிமுகப்படுத்திய ‘கிர்க் சர்க்கஸ்’ படத்தின் ரக்‌ஷித் ஷெட்டியை தனது பேட்டியில் பெயர் சொல்லாமல் கடுப்படித்தார். ‘காந்தாரா’ படத்தைப் பார்க்கவில்லை என்றும் சொன்னார்.

இதைப் பார்த்து ரக்‌ஷித்தின் நண்பரும் ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி தனது பேட்டியில் ராஷ்மிகாவை ஒரு நடிகையாகவே கண்டுக்கொள்ளவில்லை என்பது போல் அவரும் போட்டுத்தாக்க. ராஷ்மிகா நிலைமை கலவரமானது.

இது ஃப்ளாஷ்பேக். சரி விஷயத்திற்கு வருவோம்.

விஜயின் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா.

இரண்டே பாடல். ஆறேழு காட்சிகள். அந்தக் காட்சிகளிலும் கூட ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வந்து போனார். அவ்வளவுதான்.

இதைதான் மீடியாவில் நோண்டி எடுத்திருக்கிறார்கள். இப்படி நடிப்பதற்குதான் ’வாரிசு’ படத்தில் நடித்தீர்களா என்று ஆளாளுக்கு கேட்க. உஷாராகி விட்டார் ராஷ்மிகா.

’‘வாரிசு’ படத்தில் நான் விஜயுடன் நடித்தே ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டுதான் கமிட் ஆனேன். எவ்வளவு நேரம் படத்தில் வருகிறோம் என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. நாம் பணிப்புரியும் மற்ற நட்சத்திரங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஷூட்டிங் செட்டில் கூட எனக்கு சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிய ரோல் இல்லை என்று விஜயிடம் கூட கமெண்ட் அடித்தேன். என்று சுதாரித்து கொண்டு பதில் அளித்திருக்கிறார்.


’காந்தாரா’ ரிஷப் ஷெட்டியின் பக்கா ப்ளான்!

திரைப்படங்களின் வசூல் சில நேரங்களில் பல ’வாவ்’ கமெண்ட்களை கிளப்பும்.

அது போதாதா. சட்டென்று அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பரபரவென தயார் செய்து வெளியிட்டு விடுவார்கள். அந்த இரண்டாம் பாகம் நன்றாக ஓடியதா இல்லையா என்பது இங்கே பிரச்சினை இல்லை. ஆனால் அந்தப் படத்தின் மூலம் கொள்ளை லாபம் பார்த்துவிடுவார்கள்.

உதாரணத்திற்கு ’பில்லா’. அஜித் நடித்த ரீமேக் ’பில்லா’ பெரும் வரவேற்பைப் பெற்றதால், அந்த பில்லா எப்படி டான் ஆனார்? அவரது பின்னணி என்ன என்று ’பில்லா 2’-வை prequel ஆக எடுத்தார்கள்.

இப்பொழுது அதே ட்ரெண்ட்டில் களமிறங்க ஹொம்பாலே ஃபிலிம்ஸ் திட்டமிட்டு வருகிறது. கேஜிஎஃப், காந்தாரா படங்களைத் தயாரித்து எல்லோரையும் அதிர வைத்த அதே ப்ரொடக்‌ஷன் கம்பெனிதான்.

தங்களது காந்தாரா படத்திற்கு பெரும் வரவேற்பும், எக்கச்சக்க வசூலும் கிடைத்ததால், ‘காந்தாரா’ ப்ராண்டை வைத்து பக்காவாக வர்த்தகம் செய்ய திட்டமிட்டு வருகிறதாம்.

’’காந்தாரா படம் வனத்தில் வசிக்கும் மக்களுக்கும், வனத்துறைக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான போராட்டம்தான் கதையே. இதில் புராண அம்சங்களைக் கலந்து எடுத்திருப்பார்கள்.

அதில் வனமக்களின் கடவுள், அப்பகுதியின் அரசன் இடையேயான அந்த காட்சியை எடுத்து கொண்டு, அதை வைத்து ‘காந்தாரா 2’-எடுக்க இருக்கிறார்களாம். ஒ…ஒ.. என்று சிலிர்க்க வைத்த அந்த வன கடவுள் யார், அவருடைய பின்னணி என்ன என காந்தாரா 2 சிலிர்க்க வைக்க தயாராக இருக்கிறதாம்.

இதற்கான கதை, திரைக்கதையில் மும்முரமாக ரிஷப் ஷெட்டி இப்பொழுது மும்முரமாக இருப்பதாக தகவல்.


கோலிவுட் நடிகர்களுக்கு வழிக்காட்டும் ஷாரூக்கான்.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் மிகப்பெரும் பிரச்சினை கமர்ஷியல் ஹீரோக்களின் சம்பளம்.

படம் ஓடுகிறதோ இல்லையோ சம்பளத்தை மட்டும் ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள்.

ஒரு கமர்ஷியல் ஹீரோ நடிக்கும் படத்தின் மொத்த பட்ஜெட்டில் அவரது சம்பளம் மட்டுமே 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கிறது. மீதமுள்ள பட்ஜெட்டை வைத்துதான் படமெடுக்க முடிகிறது.

படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நடிகர்கள் யாரும் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுப்பது இல்லை. இதனால் தான் இன்றைக்கு பல தயாரிப்பாளர்கள் சினிமாவை விட்டு விலகிப் போய்விட்டார்கள்.கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டுமே படமெடுக்க கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த மாதிரியான் பிரச்சினைக்கு ஒரே வழி நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைப்பது அல்லது ஷாரூக்கான் காட்டியிருக்கும் வழியை தாங்களும் பின்பற்றுவது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் ‘பதான்’. இப்படத்தில் நடிக்க ஷாரூக்கான் வாங்கியிருப்பதாக சொல்லப்படும் சம்பளம் வெறும் 40 கோடிதான் என்கிறார்கள்.

உலகளவில் தனக்கென பெரும் ரசிகர்களையும், மார்க்கெட்டையும் வைத்திருக்கும் ஷாரூக் வெறும் 40 கோடி சம்பளத்திற்கு நடித்திருக்கிறாரா என்று யோசிக்க வைத்திருக்கிறார்.

படம் வெளியாக உதவும் வகையில் 40 கோடி மட்டும் வாங்கிக் கொண்டு, படம் வெளியாகி லாபம் ஈட்டும் போது அதில் குறிப்பிட்ட சதவீதத்தை தனது சம்பளமாக வாங்கும் திட்டத்தில்தான் இப்படி சம்பளத்தைக் குறைத்து வாங்கியிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

நம்மூரில் ரஜினி, கமல், விஜய். அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ் எல்லோரும் இப்படி தோள் கொடுத்தால் தமிழ் சினிமாவின் ஆயுள் கெட்டியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...