No menu items!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: எடப்பாடி போடும் கணக்கு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: எடப்பாடி போடும் கணக்கு

காலையில் திடீரென்று பெய்த மழையில் நனைந்த முடியை துவட்டியபடி உள்ளே நுழைந்தாள் ரகசியா.

“மழைக்காலம் முடிந்துவிட்டதே என்று வண்டியில் கிடந்த ரெயின்கோட்டை போன வாரம்தான் வீட்டு பீரோவில் எடுத்துவைத்தேன். இப்போது என்னவென்றால் திடீரென்று மழை பெய்கிறது.” என்று அலுத்துக்கொண்டாள்.

“பொதுத் தேர்தல்கள் முடிந்த பிறகும் அவ்வப்போது இடைத்தேர்தல்கள் நடக்கிறதல்லவா… அதுபோல்தான் இதுவும். மழைக்காலம் முடிந்தபிறகும் ஆங்காங்கே சிறு தூறல்கள் விழுகின்றன.”

“நான் மழையைப் பற்றி பேசுகிறேன். நீங்கள் தேர்தலைப் பற்றி பேசுகிறீர்களே?”

“தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்தானே ஹாட் டாபிக். அதுதான் அப்படி பேசினேன். இடைத்தேர்தலைப் பற்றி உன்னிடம் ஏதாவது செய்திகள் இருக்கிறதா?”

“தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு நடக்கும் முதலாவது இடைத்தேர்தல் என்பதால், இதில் போட்டியிட்டால் என்ன என்ற எண்ணம் திமுகவுக்கு முதலில் இருந்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும் சுதாரித்துக்கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் வென்ற தங்கள் கட்சியே இந்த முறையும் அங்கு போட்டியிடும் என்று கூறிவிட்டார். முதல்வரிடமும் அவர் பேச, அவரும் சம்மதித்திருக்கிறார். ஆனால் ஈவிகேஸ் இளங்கோவனோ அல்லது அவரது குடும்பத்தினரோதான் அங்கு போட்டியிட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்திருக்கிறாராம்.”

“இதற்கு அழகிரியின் ரியாக்‌ஷன் என்ன?”

“இதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் பேசியிருக்கிறார் அழகிரி. ஆனால் அவரோ தனது உடல் நிலை மற்றும் மனநிலையை கருதி இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறியிருக்கிறாராம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறுத்துவிட்ட நிலையில் அவரது இன்னொரு மகன் அல்லது மறைந்த ஈவேரா திருமகனின் மனைவி ஆகிய இருவரில் ஒருவரை போட்டியிட வைக்க காங்கிரஸ் தலைவர்கள் முயன்று வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பை முத்துசாமி வசம் திமுக தலைமை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.”

“போன தடவை அதிமுக கூட்டணில தமாகாதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டது. இந்த தடவை ஏன் போட்டியிடவில்லை?”

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தாமாக வேட்பாளர் யுவராஜ் மீண்டும் போட்டியிட விரும்பினார் தமாகவின் விடியல் சேகரும் போட்டியிட விரும்பினார். இடைத் தேர்தல்னா நிறைய செலவு பண்ண வேண்டியிருக்கும். அதற்கு ஜி.கே.வாசன் தயாரா இல்லை. தமாகா போட்டியிட்டால் அதிமுக செலவு செய்யுமா என்று எடப்பாடியிடம் கேட்டுப் பார்த்தார். ஆனால் எடப்பாடி உடன்படவில்லை. போட்டி ரொம்ப கடினமா இருக்கும் நாங்களே போட்டி போடுகிறோம். உங்களுக்கு பொதுத் தேர்தல்ல பார்த்து செய்கிறோம்னு சொல்லியிருக்கிறார். அது ஜி.கே.வாசனுக்கு ஒகேயாக இருக்க அவரும் சம்மதிச்சிருக்கார். இதுக்கப்புறம் வளர்மதி, ஜெயக்குமார் இருவரும் வாசனை சந்திச்சிருக்காங்க. அப்புறம் நடந்துதான் உங்களுக்கே தெரியுமே?”

“இந்த தேர்தலில் போட்டியிடுவதில் எடப்பாடிக்கு என்ன இத்தனை ஆர்வம்.”

“இந்தத் தேர்தல் மூலம் ஒரே கல்லுல பல மாங்காய்களை அடிப்பது எடப்பாடி திட்டம்”

“பல மாங்காய்னா என்னன்ன மாங்காய்?”

“முதல்ல இரட்டை இலை சின்னம் பிரச்சினை முடிவுக்கு வரும்னு நினைக்கிறார். இரட்டை இலை சின்னம் கிடைக்கணும்னா ஓபிஎஸ் கையெழுத்து வேண்டும். கையெழுத்துப் போட ஓபிஎஸ் மறுத்தா எம்ஜிஆர், ஜெயலலிதா சின்னமான இரட்டை இலையை முடக்க ஒபிஎஸ் முயற்சிக்கிறார்னு பழியை ஓபிஎஸ் மேல போடலாம். அது மட்டுமில்லாம கொங்கு மண்டலத்துல தங்கள் கை ஓங்கியிருக்கிறது ஓபிஎஸ்க்கு மட்டுமில்ல பாஜகவுக்கும் காட்டுறதுக்கு இந்தத் தேர்தல் உதவும்னு நினைக்கிறார். ஒருவேளை அதிமுக தேர்தல்ல ஜெயிச்சிருச்சுனா எடப்பாடிக்கு மிகப் பெரிய பலமாக அது மாறும்..இப்படி பல கணக்குகளை எடப்பாடி போட்டுக்கிட்டு இருக்கார்”

“இந்த தேர்தலில் ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறாராம்?”

“வரும் 23-ம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் ஓபிஎஸ். அந்த கூட்டத்துக்கு பிறகு அவர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த இடைத்தேர்தலில் அவர் தலைமையிலான அதிமுக போட்டியிடாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் இரட்டை இலை சின்னத்துக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டுமென்றால் தனது கையெழுத்தும் முக்கியம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுத ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.”

“பாரதிய ஜனதாக் கட்சியும் தேர்தல் பணிக்குழுவை அமைத்திருக்கிறதே… அவர்கள் போட்டியிடப் போகிறார்களா?”

“அதிமுகவுக்கு பூச்சாண்டி காட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை என்கிறார்கள். சென்ற வாரம் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். அமித் ஷா மறுத்திருக்கிறார். எடப்பாடியை உறுதியாக இருக்கிறார் அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது, நாடாளுமன்றத் தேர்தல் வரை அவருடன் சுமூகமாக பயணிக்க வேண்டும் என்று அமித் ஷா சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.”

“அண்ணாமலைக்கு திடீரென்று இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதற்கு என்ன காரணம்?”

“நடப்பதெல்லாம் காரணத்துடனா நடக்கிறது? இந்த அறிவிப்பின் மூலம் பாஜக மேலிடத்தின் ஆதரவு அண்ணாமலைக்குத்தான் என்ரு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதேசமயம் எதிர்ப்பாளர்களோ, அண்ணாமலை ஒரு கெத்துக்காக கெஞ்சிக் கேட்டு இந்த பாதுகாப்பை வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.”

“ஆளுநர் பற்றிய செய்திகள் ஏதும் இருக்கிறதா?”

“தமிழ்நாடு விஷயத்தில் பெயரைக் கெடுத்துக்கொண்ட நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னைப் பற்றி அவதூறாக பேசியதை வைத்து அனுதாபம் தேடுவது அவரது அடுத்த முயற்சியாக இருக்கிறது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் அலுவலகம் சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியது. இது தவிர ஆளுநரை விமர்சித்துப் பேசுபவர்களை கண்காணிக்க ஆளுநர் அலுவலகம் ஒரு குழு அமைத்து இருக்கிறது அந்தக் குழு பரிந்துரையின் பேரில் காவல்துறைக்கு இனிமேல் இது போன்ற நடவடிக்கை கேட்கும் புகார் மனு தொடர்ந்து ஆளுநர் அலுவலகத்தில் இருந்து போய்க்கொண்டு இருக்குமாம். இந்த விவகாரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக தலைமை கைவிட, அடுத்து என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பம் இருக்கிறது.”

”முதல்வரின் தனிச் செயலாளர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதே?”

“இதில் அரசியல் ஏதும் இல்லை என்று கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள். தமிழக முதல்வரின் செயலாளர் அனு ஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்கிறார். அதனால்தான் அவரிடம் இருந்த பொறுப்புகளை மற்ற 3 செயலாளர்களுக்கு பிரித்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அவ்வளவுதான் என்கிறார்கள்”

”சரி, கடைசியா ஒரு முக்கியமான கேள்வி, தமிழ்நாடு முழுக்க கேட்டுக்கிட்டு இருக்கிற கேள்வி. வாரிசு, துணிவு இரண்டில் கலெக்‌ஷனில் கல்லா கட்டியது எது?”

”உங்களையும் இந்த ஜூரம் பிடிச்சிருச்சா..போய் வேலையைப் பாருங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...