பொங்கல் ரிலீஸில் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்கு இடையே கடும் போட்டி.
யார் படம் வசூலில் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது என்பதில் அஜித் விஜய் ரசிகர்களுக்கிடையே ஒரு சைபர் யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.
’வாரிசு’ படம் வெளியான 7 நாட்களில் இதுவரையில் 210 கோடி வசூல் செய்திருக்கிறது என்று அப்படத்தை விநியோகம் செய்திருக்கும் லலித் கூறியிருக்கிறார்.
இந்த அறிக்கை வெளிவந்த உடனேயே, ‘வாரிசு’ 210 கோடி வசூல் செய்ய 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று பிரபல விநியோகஸ்தர், தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூ சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.
’வாரிசு’ படத்தயாரிப்பாளரான தில் ராஜூவிடமிருந்து லலித் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிட்டு இருக்கிறார்.
அதிலும் சினிமா வர்த்தகம் அதிகமிருக்கும் 5 ஏரியாக்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டு இருக்கிறது.
வெளிநாட்டு உரிமையை வேறு ஒருவர் வாங்கி இருக்கிறார்.
இதனால் மீதமுள்ள ஏரியாக்களின் வசூல் நிலவரம் மட்டுமே லலித்துக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.
அப்படியிருக்கையில் 7 நாளில் கிடைத்திருக்கும் உலகளவிலான ஒட்டுமொத்த வசூல் நிலவரம் உடனடியாக லலித்துக்கு தெரிய வாய்ப்பில்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
‘வாரிசு’ படத்திற்குப் போட்டியாக ‘துணிவு’ படமும் களத்தில் இருப்பதால் இவ்வளவு பெரிய வசூல் உடனடியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
பொங்கல் ரிலீஸ் படங்களின் வசூலை தெரிந்து கொள்ளவேண்டுமானால் தமிழ்நாடு வசூல், மற்ற மொழிகளில் வசூல், வெளிநாட்டு வசூல் என அனைத்தும் தெரிய வந்த பிறகே உண்மையான ஒட்டுமொத்த வசூல் நிலவரம் தெரியவரும்.
இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெலுங்கு சினிமாவின் ஸ்டார் தயாரிப்பாளர் என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ’வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரிசுடு’வை வெளியிட்டு இருக்கிறார். அஜித்தின் ’துணிவு’ படம் தெலுங்கில் ’தெகிம்பு’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
இந்த இரு படங்களின் தெலுங்கு வசூல் நிலவரம் ஓரளவிற்கு தெரிய வந்திருக்கிறது.
சங்கராந்தி பட வெளியீடுகளில் ’வாரிசுடு’ கொஞ்சம் வசூல் பந்தயத்தில் முந்தியிருக்கிறது.
;தெகிம்பு’ படம் முதல் நாளில் 2.18 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதன் பிறகு 7 நாட்களில் சுமார் 3.66 கோடி வசூலித்திருப்பதாகவும், இதில் 1.87 கோடி ஷேரை கொடுத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
’தெகிம்பு’ படத்தின் வர்த்தக மதிப்பு ஏறக்குறைய 3.20 கோடி என்பதால் லாபம் நஷ்டம் இல்லாமல் இருக்க 3.50 கோடி வசூல் செய்தாக வேண்டும். இதனால் இன்னும் 1.63 கோடி வசூலித்தால் படம் ஹிட் என்று கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
தெலுங்கில் ’தெகிம்பு’வுக்குப் போட்டியாக களமிறங்கிய ‘வாரிசுடு’ படத்தின் வர்த்தகம் ஒட்டுமொத்தமாக 14 கோடி.
இப்படம் வெளியான 4 நாட்களில் 10.90 கோடி வசூல் செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் இப்படம் லாபம் நஷ்டம் இல்லாமல் இருக்க 14 முதல் 15 கோடி வசூலிக்க வேண்டும். அந்த வகையில் இப்படம் இன்னும் 4.10 கோடி வசூல் செய்தாக வேண்டியிருக்கிறது.
இந்த இரண்டு பெரும் கமர்ஷியல் ஹீரோக்களுக்கு இடையேயான போட்டியில் வசூல் விஷயம் ஒரு வில்லங்கமான ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது. காரணம் இந்த இரு நட்சத்திரங்களின் ரசிகர்கள்.
இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு அஜித் – விஜய் படங்களுக்கு இடையே மீண்டுமொரு நேரடி மோதல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் படத்தை விக்னேஷ் சிவனும், விஜய் படத்தை லோகேஷ் கனகராஜூம் இயக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.