தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்றூ நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்த பிறகு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாக குற்றம்சாட்டினார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அரசு மீது குற்றச்சாட்டு வைக்கும் போது எதன் அடிப்படையில் என குறிப்பிட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றால், எந்த சம்பவம் என குறிப்பிட்டு சொல்லுங்கள் என்று கூறினார்.
உடனே எழுந்த முதலமைச்சர், “எடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என பேசுகிறார். அவருக்கு அனுமதி அளியுங்கள். நான் அதன் மீது பதிலளிக்கிறேன். அவர் ஆட்சியில் என்ன நடந்தது என்ற பட்டியல் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் சட்டம் – ஒழுங்கு எவ்வளவு சீரழிந்தது என்பதை நான் ஆதாரத்தோடு விளக்குகிறேன். அவர் பேசுவார் எனில், நானும் பேச தயார்” என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, தினம்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு குறுக்கிட்ட சபாநாயகர், அந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து, “காவல்துறைக்கே பாதுக்காப்பு இல்லாதது வேதனைக்கு உரியது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என எடப்பாடி பழனிசாமி கேட்க, அதற்கு முதலமைச்சர் விளக்கம் அளித்தார். எனினும் முழுமையாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: கருப்பு சட்டையில் பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்
அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்படும் நிலையில், பழனிசாமி தரப்பினர் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, ஆர்.பி.உதயகுமாரை அப்பதவிக்கு நியமித்து பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பும் கடிதம் அளித்தது. ஆனால், இதுகுறித்து பேரவைத் தலைவர் தனது முடிவை குறிப்புரையாக அளித்தார். இதை ஏற்காத பழனிசாமி தரப்பு கூட்டத்தொடரை புறக்கணித்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்காமல் இருக்கும் பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வந்தனர்.
ஆளுநர் உரை சர்ச்சை: விளக்கமளிக்க டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி
தமிழ்நாடு ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் உரையாற்றும் போது சில பத்திகளை தவிர்த்து விட்டு படித்தது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. ஆளுநரின் விளக்கமும் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடனும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் பற்றி குடியரசு தலைவரை சந்திக்க திமுக முயற்சி செய்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஆளுநர் டெல்லி செல்வார் என்றும் டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
‘துணிவு’ கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் மரணம்: சென்னையில் விபரீதம்!
அஜித் நடித்துள்ள ‘துணிவு’, விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படங்கள் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இன்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கில் வெளியான ‘துணிவு’ பட சிறப்பு காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். அப்போது அதில் ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்த போது, அவருக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த ரசிகர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், அவர் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் (வயது 19) என்பதும், ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.