இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் இடம் ஜோஷிமத். 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஞானம் பெற்றதாக சொல்லப்படும் இந்த இடம், இப்போது இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வபவர்களுக்கு நுழைவாயிலாக இருக்கிறது. ரிலாக்ஸாக ஒரு சுற்றுப்பயணம் செல்பவர்களுக்கும் ஏற்ற இடமாக இது உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த ஊர் இப்போது தேசிய அளவில் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. அந்த நகரம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையத் தொடங்கியிருப்பதே இதற்கு காரணம்.
ஜோஷிமத் நகரம் மண்ணில் புதையத் தொடங்கியுள்ள நிலையில், அந்நகருக்கான பாதைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஜோஷிமத் நகரம் முழுக்க புதைந்து போகாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனைகளை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி.
உத்தாரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி என்ற மாவட்டத்தில்தான் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள இந்நகரம் ஒருகாலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்தது. இயற்கையோடு இணைந்து வாழ ஏற்ற பகுதியாகவும், தூய காற்று, மெல்லிய குளிர், மாசில்லாத சுற்றுச்சூழல் என மக்கள் விரும்பும் அத்தனை விஷயங்களையும் கொண்ட பகுதியாகவும் ஜோஷிமத் இருந்தது. இப்படி மற்றவர்கள் கண்படும் விதத்தில் அமைதியான ஊராக ஜோஷிமத் இருந்ததே இப்போது அதன் அழிவுக்கும் விதை ஊன்றியது.
நச்சுப் புகைக்கு நடுவில் இருந்து சில காலம் தப்பி ஓய்வெடுக்க விரும்பும் மக்கள், அதற்கான இடங்களில் ஒன்றாக ஜோஷிமத்தை தேர்ந்தெடுத்தனர். இதனால் ஒரு காலத்தில் கட்டிடங்களே இல்லாமல் இருந்த நிலை மாறி மாதம் ஒரு புதிய கட்டிடம் மலைகளைக் குடைந்து முளைக்கத் தொடங்கியது. இது போதாதென்று ஓட்டல்களும் தோன்றின. இதனால் மண்ணின் தன்மை மாறத் தொடங்கிடது.
இந்த நேரம் பார்த்து தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் சார்பில் Tapovan Vishnugad Hydro Power Project அந்த இடத்தில் தொடங்கப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் ஜோஷிமத் நகரின் புவியியலை வேகமாக சிதைக்கத் தொடங்கியது. ஒரு பக்கம் புதிது புதிதாக முளைக்கும் கட்டிடங்கள், மறுபக்கம் பிரம்மாண்ட மின் திட்டத்தின் தொடக்கம் என்று ஜோஷிமத்தின் சூழலை நெரிக்க, ஜோஷிமத் நகரின் மண் தனது பிடிமானத்தை இழக்கத் தொடங்கியது. இப்போது 600-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் விரிசல் விழ, அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் மக்கள். மற்ற கட்டிடங்களுக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ஜோஷிமத்தில் தேவையில்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால் மண் சரிவு ஏற்படும். நகரமே புதைந்து போகும் என்று சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே புவியியல் ஆர்வலர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தங்கள் வசதிகளுக்காக பலரும் இங்கு குடிவர, தற்போது தன்னால் தூக்க முடியாத பாரத்தை தாங்க முடியாமல் மண்ணுக்குள் புதைகிறது ஜோஷிமத் நகரம்.
ஜோஷிமத்தின் சாலைகளிலும், வீடுகளிலும் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2021-ம் ஆண்டில் இதற்கான அறிகுறிகள் தோன்றின. சாலைகளிலும், சில வீடுகளிலும் விரிசல்கள் விழுந்தன. அப்போதே சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இத்தனை மோசமான சூழல் ஏற்பட்டிருக்காது என்ற புகார்களும் எழுகின்றன.
ஜோஷிமத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “இந்த நகரம் மண்ணில் இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வரைமுறையற்ற கட்டுமானங்கள். இரண்டாவது காலநிலை மாற்றம். இதற்கு முன்னர் 2021 மற்றும் 2022-லும் இதே போல இயற்கை பேரழிவு சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு காலநிலை மாற்றம் முக்கியக் காரணம்.
அதீத மழை, அதைத் தொடர்ந்து நிலச்சரிவு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான மாற்றங்கள் கூட பேரழிவுகளை ஏற்படுத்தும். அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
2019 மற்றும் 2022-களில் வெளியிடப்பட்ட ஐபிசிசி-யின் அறிக்கைகளில் இமயமலை பகுதியில் பேரழிவுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். மிகவும் வலுவான திட்டமிடல் கொண்ட செயல்முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இமயமலையில் என்ன செய்யக்கூடாது என்பதற்கு ஜோஷிமத் ஒரு தெளிவான உதாரணம்” என்கிறார்கள்.