No menu items!

ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம்: பாதியில் வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் பரபரப்பு

ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம்: பாதியில் வெளியேறிய ஆளுநர் – சட்டப்பேரவையில் பரபரப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது,  ஆளுநர் உரையின் ஒரு பக்கத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்த நிலையில், உரையாற்றும்போது அதனை பேசாமல் தவிர்த்தார். தொடர்ந்து 2, 3ஆம் பக்கங்களில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்தார். இதேபோல் 46ஆம் பக்கத்தில் இருந்த ‘சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது’ என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்தார்.

ஆளுநர் உரையைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கூறினார். மேலும், “அரசு தயாரித்து கொடுத்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது விதியை மீறிய செயல் ஆகும். எனவே, இன்று அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும்” என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதேபோல் அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டிருந்தபோது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாமல்லபுரம் அருகே துணை நகரம்: ஆளுநர் உரையில் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் அரசின் நலத்திட்டங்களை விளக்கினார்.

ஆளுநர் உரையில், ‘நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் உள்ளது. வளர்ந்ந்த நாடுகளை போல தமிழ்நாட்டிலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை தேவை. தமிழ்நாட்டின் 3-வது தகவல் தொழில்நுட்ப பூங்கா மதுரையில் ரூ.600 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் அருகே துணை நகரம் உருவாக்கப்படும்” உட்பட பல அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கிவைத்தார். இதேபோல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் இன்று தொடங்குகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரியது என்றும், பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவரன் ரூ. 42 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை: இன்று ஒரே நாளில் ரூ. 312 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...