No menu items!

விமானத்தின் எமர்ஜென்சி பட்டனை அழுத்திய தலைவர்

விமானத்தின் எமர்ஜென்சி பட்டனை அழுத்திய தலைவர்

”அம்மா மறைவில் பிரதமர் மோடி ஒரு நல்ல உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்” என்று பிரதமரை பாராட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் ரகசியா.

“எதைச் சொல்ற?”

“அம்மாவோட இறுதிச் சடங்குகளை ரொம்ப எளிமையா நடத்தியிருக்காங்க. பொதுவா பெரிய தலைவர்களின் உறவுகள் இறந்தால் அஞ்சலிக்காக உடலை வைத்து பெரும் கூட்டத்தைக் கூட்டுவார்கள். ஆனால் உயர்ந்த பதவியில் இருந்தபோதும் பிரதமர் அப்படி செய்யவில்லை. அப்படி எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று டெல்லி தகவல்கள் சொல்லுகின்றன. நல்ல விஷயம்தானே”

“அப்படியும் தலைவர்கள் எல்லோரும் குஜராத் சென்று பிரதமரை சந்தித்து துக்கம் விசாரிக்க கிளம்புகிறார்களே…”

“ஆமாம் தமிழக முதல்வர் ஸ்டாலினும், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் குஜராத் செல்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. துக்கம் விசாரிக்க செல்வது இந்திய மரபுதானே?”

“பிரதமரை சந்திக்க இதை ஒரு வாய்ப்பா எடப்பாடி பார்க்கிறாரா? ஒபிஎஸ் கிளம்பலையா?”

“இவர் கிளம்பினா அவரும் நிச்சயம் கிளம்புவார்”

“ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய சட்ட அமைச்சகம் நடத்தும் ஆலோசனை கூட்டம் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடிக்கு மத்திய அரசு அழைப்பு கொடுத்திருக்கிறதே…எடப்பாடி ஹேப்பியா?”

“அந்த ஹேப்பி ஒருநாள்தான். மத்திய அரசு கடிதம் தனக்கு வந்தில் எடப்பாடி சந்தோஷமாகதான் இருந்தார். ஆனா, தேர்தல் ஆணையத்துலருந்து வந்த ஒரு கடிதம் அவரை டென்ஷனாக்கிருச்சு”

“என்ன கடிதம் அது?”

” ‘ஆர்விஎம்’னு ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் செயல்பாடுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு தமிழக முதன்மை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதி இருக்கிறார். தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர் பதவியிலேயே இருக்கிறது என்று வருத்தப்பட்டாராம் எடப்பாடி”

“ஆனா இது தமிழக தேர்தல் அதிகாரிதானே?”

“ஆமாம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதுதானே… அதனலாதான் டென்ஷன்”

“எடப்பாடி நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைப் பற்றிய செய்திகள் ஏதும் இல்லையா?”

“இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பாஜகவால் நமக்கு எந்த தொந்தரவும் வராது. நீங்கள் யாருக்கும் விலை போய்விடாதீர்கள். கடுமையா வேலை செய்யுங்கள். பூத் கமிட்டி அமையுங்கள். திமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டணியைப் பற்றி பொதுவெளியில் ஏதும் பேச வேண்டாம். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்’ ன்னு சொல்லியிருக்கார்.”

“கூட்டணி பற்றி பேசவேண்டாம் என்று எடப்பாடி பேசினாலும், பாஜகவுக்கு எதிராக அவ்வப்போது சில அதிமுக தலைவர்கள் கருத்து சொல்றாங்களே?”

“இப்படியெல்லாம் சில மூத்த தலைவர்கள் பேசினால், பாஜகவின் டிமாண்டிங் பவர் குறையும் என்பது எடப்பாடியின் கணக்கு, அதேநேரத்தில் மற்றவர்கள் அப்படி பேசினாலும் எடப்பாடி நிச்சயம் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்று நம்புகிறது பாஜக தலைமை.”

“பாஜகனதும் ஞாபகத்துக்கு வருது..அண்ணாமலை எப்படி இருக்கிறார்? ஆபாச ஆடியோ வீடியோ பிரச்சினையெல்லாம் சால்வ் ஆயிடுச்சா?”

“இன்னும் ஓயல. இதுல அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டிருக்கிற ட்வீட் அவரை அப்செட் பண்ணியிருக்கிறது”

“ என்ன ட்வீட்?”

”போட்டோ ஷாப் கட்சியின் தலைவர் டிசம்பர் 10-ம் தேதி விமானத்துல போகும்போது அவரும் அவருடன் இருந்த தேசிய அளவு தலைவரும் விமானத்துல இருக்கிற எமர்ஜென்சி கதவு ஸ்விட்ச்சை அமுக்கி விளையாடியிருக்காங்க. அதனால விமானத்துல இருக்கிறவங்க அத்தனை பேரையும் இறக்கி செக் பண்ணியிருக்காங்க. இவங்கதான் அமுக்கினதுனு கண்டுபிடிச்சதும் மன்னிப்பு கடிதம் மட்டும் வாங்கிட்டு அனுப்பிட்டாங்களாம். இப்படி அமைச்சர் ட்வீட் போட்டிருக்கிறார். இதை திமுககாரங்களாம் அண்ணாமலைதான் அந்தத் தலைவர்னு சொல்றாங்க. இதுலயும் அண்ணாமலை டென்ஷன் ஆகியிருக்கிறார்”

“சரி, இந்த சம்பவம் உண்மையா நடந்துச்சா இல்லையா?”

“அதற்கான ஆதாரம் இருந்தாதான் பெயரைச் சொல்லியிருப்பாரே…அவர் பேரைச் சொல்லாம கிசுகிசு மாதிரிதானே சொல்லியிருக்கிறார். இதைத் தவிர இன்னொரு டென்ஷனும் அண்ணாமலைக்கு இருக்கு”

“என்ன டென்ஷன்?”

“பொன் ராதாகிருஷ்ணனுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சினையாகியிருக்கு. தமிழக பாஜக துணைத் தலைவர் பால் கனகராஜை அழைத்துப் பேசிய அண்ணாமலை, ‘அடுத்த முறை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நீங்கள்தான். பொன் ராதாகிருஷ்ணனுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது’ என்று கூறியிருக்கிறார். இந்த விஷயம் பொன் ராதாகிருஷ்ணன் காதுக்கு எட்ட அவர் உடனே டெல்லி சென்று பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரை சந்தித்து, ‘இந்த முறை நான் கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும். இதுதான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல். இதற்குப் பிறகு எனக்கு தேர்தல் அரசியலே வேண்டாம்’ என்று உருக்கமாக பேசியிருக்கிறார். கூடவே பால் கனகராஜ் பற்றி சில வில்லங்க விவரங்களையும் டெல்லி தலைமையின் பார்வைக்கு அனுப்பி இருக்கிறார். இதுவும் அண்ணாமலைக்கு டென்ஷனைக் கொடுத்திருக்கு”

“சரி, தமிழ்நாட்டு பாஜகவுல புதிய பொறுப்புகள் கொடுக்கப் போறாங்கனு செய்தி வருதே..அப்படியா?”

“ஆமாம். நாடகம், சினிமா, அரசியல்னு கலக்கிட்டு இருந்த எஸ்.வி.சேகருக்கு தமிழ்நாட்டு பாஜகவுல முக்கிய பொறுப்பு வரப்போகுதாம்?”

“தலைவராகிறாரா?”

“தலைவர் பதவி இல்லை. ஆனா, முக்கியமான பதவி. அதே மாதிரி காயத்ரி ரகுராம்க்கும் பதவி கொடுக்கப் போறதா கமலாலய வட்டாரம் சொல்லுது. அண்ணாமலை எதிர் கோஷ்டிக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்னு டெல்லி மேலிடம் நினைக்குதாம். அதனால் இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு” சிரித்தாள் ரகசியா.

“உதயநிதி எப்படி இருக்கிறார்?”

“அவருக்கென்ன….இளைஞர் அணியை மாற்றியமைக்க முழு மூச்சாய் இறங்கியிருக்கிறார். இளைஞர் அணியின் மாவட்ட நிர்வாகிகளாக பெரும்பாலும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கட்சி பொறுப்பாளர்களின் வாரிசுகள்தான் இருப்பார்கள். இளைஞர் அணி தலைவராக ஸ்டாலின் இருந்தபோதில் இருந்தே இந்த வழக்கம் தொடர்கிறது. இப்போது அந்த நடைமுறையை உதயநிதி ஸ்டாலின் மாற்றிவிட்டார். இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கான விண்ணப்பத்தை தயார் செய்து அதை முரசொலியில் வெளியிட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிசம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் முழுவதுமாக வந்து சேர்ந்ததும், நேர்காணல்களை நடத்தி இளைஞரணிக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வது உதயநிதியின் திட்டம் ஏற்கெனவே இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்களும் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 25-ம் தேதிக்கு பிறகு அந்த மனுக்கள் உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. அவர் கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலரை நியமித்து மனுக்களை பரிசீலனை செய்ய சொல்லி இருக்கிறார். அவர்கள் சிபாரிசுப்படிதான் நியமனம் இருக்குமாம். இதுபற்றி மூத்த நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினிடம் முனக, எதுவாக இருந்தாலும் உதயநிதியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டாராம் ஸ்டாலின்.”

“காங்கிரஸ் செய்திகள் ஏதும் இருக்கா?”

“தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டதால் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. தலைவர் பதவிக்காக செல்வப் பெருந்தகையும், ஜோதிமணியும் முழு மூச்சுடன் மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘கையோடு கைகோர்ப்போம்’ நிகழ்ச்சி பற்றி மாவட்டத் தலைவர்களிடம் ஆலோசானை நடத்திய கே.எஸ்.அழகிரி .அந்த கூட்டத்தில் பேசும்போது, ‘பல பேர் பதவி கேட்டு எனது பதவியை பறிக்க கோரிக்கை வைத்து டெல்லி போய் வருகிறார்கள். நான் என்றுமே பதவி கேட்டு யார் வீட்டு வாசற்படியும் ஏறியது கிடையாது. எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான். நான்கூட மாற்றப்படுவேன். இன்று சாயந்திரமே கூட என் தலைவர் பதவி வேறு யாருக்காவது என்று அறிவிப்பு வரக்கூடும். அப்போது நான் சந்தோஷமாக புதிய தலைவரை நாற்காலியில் அமர வைத்து விட்டு புறப்படுவேன்’ என்று பேசி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக அழகிரி நடத்தும் கூட்டங்களில் செல்வப் பெருந்தகை, தங்கபாலு. இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொள்வதில்லை. இந்தக் கூட்டத்திலும் அவர்கள் மிஸ்ஸிங்.”

“காங்கிரஸ்காரங்க ஒற்றுமையா கூட்டங்கள்ல கலந்துக்கிட்டாதான் நியூஸ்”

“ஆமாம் அதான் உண்மை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...