திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார். அப்போது, “மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த சகோதரிகளுக்கு நம்முடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். நம்முடைய அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் மட்டுமல்ல, சிறப்பு திட்ட செயலாகத்துறை அமைச்சரும்கூட. கிட்டத்தட்ட துணை முதலமைச்சருக்கு நிகரான பொறுப்பைக் கையாண்டு கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்” என்று அன்பில் மகேஸ் பேசினார்.
எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும்: ராகுல் காந்தி பதில்
இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்பது குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் பேசியுள்ளார். இந்திரா காந்தி போன்ற குணநலன் கொண்ட பெண்ணை வாழ்க்கை துணையாக ஏற்பீர்களா என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு எனது அன்னையை மிகவும் பிடிக்கும். என் பாட்டி இந்திரா காந்தியை நான் இன்னொரு அன்னை என்றே கூறுவேன். நான் திருமணம் செய்யும் பெண்ணுக்கு எனது அன்னையின், பாட்டியின் பண்புகள் சேர்ந்திருந்தால் நல்லது” என்று கூறியுள்ளார்.
அதே பேட்டியில் தனது இருசக்கர வாகன ஆசை பற்றியும் அவர் பேசியுள்ளார். “எனக்கு கார்களைவிட பைக் ஓட்டுவதே பிடிக்கும். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஆனால் நான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் பைக் ஓட்டியுள்ளேன். அவை ஒரு சீன தயாரிப்பு. ஆனாலும் அவை நன்றாக இருந்தன. இந்தியாவின் பழைய லாம்ப்ரட்டா வாகனம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவில் இ வாகனம் பற்றி நிறைய பேசுகிறார்களே தவிர அதை செயல்படுத்த திட்டங்கள் இல்லை” என்று கூறினார்.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு
சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதற்கு ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற கிருமி காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் இருந்து வீடுதிரும்பினார்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த 26ஆம் தேதி காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு உடல் நிலை சீரானதை அடுத்து அவர், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.