அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஈபிஎஸ் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் இன்று காலை தலைமை கழகத்தில் நடைபெற்று வருகிறது.
மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்திய வரலாற்று பேரவையின் 81ஆவது மாநாட்டில் இன்று பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. வரலாற்று உணர்வுகளை ஊட்டுவது இன்றைய காலத்தின் தேவை; மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. எந்த அமைப்பாக இருந்தாலும் உருவாக்குவது எளிது, அதை தொடர்ந்து நடத்துவதுதான் கடினம்.
கற்பனையாக கூறப்படும் வரலாற்றை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. வரலாற்று திரிபுகள் தான் நம்மை சூழ்ந்துள்ள ஆபத்து ஆகும். அறிவியல் பார்வையை உருவாக்குவதான் இன்றைய காலத்தின் தேவை. பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும். கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தமிழர்களின் பழங்கால நாகரிகத்தை பறைசாற்றுகின்றன. நாங்கள் பழப்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான்; ஆனால் பழமைவாதிகள் அல்ல” என்று கூறினார்.
சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல, கொலை: பிணவறை ஊழியர் வெளியிட்ட தகவல்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக கூப்பர் மருத்துவமனையின் பிணவறை ஊழியர் ரூப்குமார் ஷா அளித்துள்ள ஒரு பேட்டியில், “சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலைப் பார்த்தபோது அது (எனக்கு) தற்கொலையாகத் தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் இருந்தன. நான் என் சீனியரிடம் பேசினேன். ஆனால் அவர் அதைப் பற்றி பின்னர் விவாதிப்போம் என்று கூறினார். சுஷாந்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை அவரது புகைப்படத்தைப் பார்த்தாலே அனைவரும் சொல்லலாம். விசாரணை முகமைகள் என்னை அழைத்தாலும் அவர்களிடமும் இதை சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்த வழக்கு தொடர்பாக பெரிதும் பேசப்படாமல் இருந்த நிலையில், கூப்பர் மருத்துவமனை ஊழியரின் இந்த புதிய கருத்துக்கள் மீண்டும் இவ்விவகாரத்தை விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் கடும் பனிபுயல்: 60 பேர் பலி
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதன் காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனி மூட்டமாக காணப்பட்டது. வெப்ப நிலை பூஜியத்திற்கும் கீழ் சென்றதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிபுயல் வீசியது. இதன் காரணமாக பனிபுயலில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்தது. பனிபுயல் கடுமையாக தாக்கிய பகுதிகளுக்கு மீட்பு படையினர் சென்று அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகிறார்கள். மேலும் பனி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பிணங்களையும் மீட்டு வருகிறார்கள். நியூயார்க்கின் பப்பேலா பகுதியில் பனி கட்டிகளுக்கு அடியில் ஏராளமான பிணங்கள் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். பனிபுயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.