தமிழ்நாட்டின் கடந்த ஒரு நூறாண்டு அரசியல், இலக்கியம், சினிமா, நிர்வாகம், வளர்ச்சி என எந்தத் துறை சார்ந்த வரலாற்றை எழுதினாலும் போது தவிர்க்க முடியாத பெயர், கலைஞர் மு. கருணாநிதி. கலைஞரின் செயல்பாடுகளும் சாதனைகளும் இன்றும் இந்த துறைகளில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு பாடமாக இருக்கக் கூடியது. கலைஞர் வாழ்க்கை வரலாற்றை அப்படி பாடமாக கொள்ளக்கூடிய ஒரு நூலாக எழுதியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூலை சந்தியா நடராஜன் மொழிபெயர்ப்பில் தமிழில் வ.உ.சி. நூலகம் வெளியிட்டுள்ளது. வாவ் தமிழா யூடியூப் சேனலுக்காக, இந்த நூல் குறித்து ஏ.எஸ். பன்னீர்செல்வன் அளித்த பேட்டி இங்கே…
கலைஞர் மு. கருணாநிதி வாழ்வை ஆரம்பம் முதல் முடிவு வரை பார்த்தால், சாதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட ஒரு சாதாரண குடும்பத்தில் தொடங்கி, அதிகாரத்தில் மிக உயர்ந்த இடங்களை தொட்டு முடிந்த வாழ்வை கொண்டது. இந்த நீண்ட பயணத்தில் உங்களை ஆச்சரியபடுத்தியவை என்ன?
வாழ்வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு நமக்கு பெரிய பின்புலம் தேவையில்லை என்பதுதான் கலைஞர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் உடன் பயணித்தவர்களைவிட கலைஞர் கீழ் மட்டத்தில்தான் இருந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தபோது கட்சியில் உடன் இருந்த நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், இராம. அரங்கண்ணல் உட்பட அனைவரும் எம்.ஏ. பட்டம் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், பட்டம் பெறாத கலைஞருக்கும் அவர்களுக்கும் இடையே அறிவு இடைவெளி இல்லை. அவர்களை விட படிப்பறிவு குறைவு என்பதால் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்பதை அரசியலில் நிரூபித்தார்.
இதை கலைஞரின் திரைத்துறை வாழ்க்கையிலும் பார்க்கலாம். இவர் சேலம் மாடர்ன் தியேட்டர் போகும்போது இரண்டு பெரிய ஆளுமைகள் அங்கே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பயணம் செய்த இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் ஒருவர். அப்போதே அவர், ஜி.என்.பி., எம்.எஸ். சுப்புலட்சுமி என்ற இரண்டு ‘சூப்பர் ஸ்டார்’கள் உட்பட பெரிய ஸ்டார்களை உருவாக்கிய இயக்குநர். இன்னொருவர், டி.ஆர். சுந்தரம். இவர் உலகம் முழுவதும் இருந்த அனைத்து ஸ்டுடியோக்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, அந்த அனுபவத்தில் சேலத்தில் மாடர்ன் தியேட்டரை உருவாக்கியவர். இத்தனை பின்புலம் உள்ள எல்லீஸ் ஆர். டங்கனுக்கும் டி.ஆர். சுந்தரத்துக்கும் சமமாக, திருவாரூரில் இருந்து விழுப்புரம் – பாண்டிச்சேரி – ஈரோடு வழியாக சேலம் வந்த கலைஞரால் செயல்பட முடிந்துள்ளது. நாக்கும் பேனாவும் கொண்டு மட்டுமே ஒருவரால் இவ்வளவு உயரத்துக்கு செல்ல முடியும் என்றால், அதுதானே ஒருவருக்கு வாழ்வின் மீது கொடுக்கும் பெரிய நம்பிக்கை.
கலைஞர் பின்னாட்களில் முதலமைச்சர் ஆன பின்னரும் இலக்கியம், சினிமா போன்ற துறைகளின் மீதான அவரது ஆர்வத்தை குறைத்துக்கொள்ளவில்லை. அவற்றுக்கும் நேரம் ஒதுக்கினார். கடைசி வரை இத்துறைகளில் பங்களித்தார். இப்படி இலக்கியம், சினிமா, அரசியல், குடும்பம் எல்லாவற்றுக்கும் இடையே அவரால் எப்படி ‘பேலன்ஸ்’ செய்ய முடிந்தது?
நான் முரசொலி மாறனுடன் பழகிய நாட்களில் ஒருமுறை இதுபற்றி கேட்டேன். அப்போது அவர் சொன்னார், “மாமா அஞ்சறைப் பெட்டி மாதிரிய்யா. ஒவ்வொன்றிலும் ஒன்று இருக்கும். ஒன்றால் இன்னொன்று கெட்டுவிடாது. கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையால் தனிப்பட்ட உறவுகள் கெட்டுப்போகாது; தனிப்பட்ட உறவுகளில் இருக்கும் பிரச்சினைகளால் கட்சி பாதிக்காது. இதனால் இலக்கியமோ சினிமாவோ பாதிக்காது. ஒவ்வொரு துறையும் தனித்தனியாக தெளிவாக இருக்கும்.” இதை கலைஞர் மிகத் தெளிவாக திட்டமிட்டுதான் செய்துள்ளார். இதுபோல் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையேயான வேறுபாடு; எங்கே கட்சி முடிகிறது, எங்கே ஆட்சி தொடங்குகிறது? எந்த சமயத்தில் எது முக்கியம்? என்பதும் அவருக்கு தெரிந்துள்ளது. ஆட்சியைவிட கட்சி முக்கியம் என்ற பார்வையையும் அவரிடம் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
சோசலிச கொள்கையை சார்ந்து இந்தியா இருந்த காலகட்டம், பின்னர் தாராளமயமாக்கலை பின்பற்றிய காலகட்டம் – இந்த இரண்டு நிலைகளிலும் கலைஞர் அரசியலிலும் அதிகாரத்திலும் இருந்துள்ளார். இரண்டு நிலைகளிலும் எங்கே சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், எங்கே அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்த அரசியல்வாதிகளில் ஒருவர் கலைஞர், இன்னொருவர் ஜோதிபாசு.
‘திராவிட மாடல்’ என்று இன்று சொல்லப்படுவதில், குறிப்பாக சமூகநீதி சார்ந்த திட்டங்களில் கலைஞரின் பங்களிப்புகள் என்று எதையெல்லாம் சொல்வீர்கள்?
முதல் பங்களிப்பு, மின்மயமாக்குதல் மற்றும் போக்குவரத்து வசதிகளை பரவலாக்கியதன் மூலமாக தமிழ்நாட்டில் நகர்புற – கிராமப்புற இடைவெளியை குறைத்தது. இதனை தமிழ்நாடு 1972-க்குள் சாதித்துவிட்டது. அப்போதே தமிழ்நாட்டில் பேருந்து போகாத ஊர் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
இரண்டாவது, தமிழ்நாட்டில் இன்று வடசென்னையில் தொடங்கி தேற்கே கன்னியாகுமரி வரைக்கும், எந்த பக்கம் பயணம் செய்தாலும் 25 கிலோமீட்டருக்கு ஒரு தொழிற்பேட்டையை நீங்கள் பார்க்கலாம். இப்படி விவசாயத்துக்கு பின்னால் தொழிற் சமூகமாக தமிழ்நாடு மாறுவதற்கான மிகப்பெரிய ஊற்றாக கலைஞரின் பங்களிப்பு இருந்துள்ளது. குறிப்பாக 1965 தொடங்கி 70க்குள் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களால்தான் இது சாத்தியமானது.
மூன்றாவது முக்கிய பங்களிப்பு… கலைஞர் அமல்படுத்தி, நீதிமன்றத்தால் தள்ளிபோடப்பட்டு, எம்.ஜி.ஆர். ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்கள். குறிப்பாக தலையாரிகளும் கிராம நிர்வாக அதிகாரிகளும் அரசு அதிகாரிகளாக மாறியது. பரம்பரையாக சென்ற இப்பதவிகளை அரசு நியமனத்தின் கீழ் கொண்டு வந்து ஜனநாயகப்படுத்தியதால், அனைவரும் சென்று கேட்கும் நிலை உருவானது.
இந்த மூன்றுக்குள்ளும்தான் இன்று நாம் பேசும் சமூக நீதி அடங்கியுள்ளது.