தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், இத்துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார். அப்படி தமிழகத்தை விளையாட்டுத் துறையில் முதல் மாநிலமாக மாற்ற உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன? அவரிடம் இருந்து விளையாட்டுத் துறை எதிர்பார்ப்பது என்ன என்பதை அறிய இத்துறையில் ஈடுபட்டுள்ள சிலரை சந்தித்தோம்.
“விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம். நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகியவற்றை புதுப்பித்தது, நீச்சல், வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்காக புதிய ஸ்டேடியங்களை உருவாக்கியது, தமிழகத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டியை நடத்தியது என்று இத்துறைக்காக பல சேவைகளை அவர் செய்துள்ளார். ஏராளமான வீரர்களுக்கு நிதி உதவியையும் அவர் செய்திருக்கிறார். அவரது வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டாலே போதும். தமிழகத்தை விளையாட்டுத் துறையில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி விடலாம்” என்கிறார் ஒரு தடகள பயிற்சியாளர்.
அதேநேரத்தில் விளையாட்டுத் துறைக்காக உருவாக்கப்பட்ட மைதானங்கள் இப்போது திரைப்பட நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு வருவது விளையாட்டு வீரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மைதானங்கள் சேதமாகி வருவதாக அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை நடந்த ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் பார்வையாளர் வரிசையில் இருந்த பல நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அதற்காக அபராதத் தொகை சம்பந்தப்பட்ட திரைப்பட நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அதைவைத்து அந்த நாற்காலிகளை சீரமைப்பது சந்தேகம்தான். அப்படி பராமரித்தாலும் பழையபடி அது நன்றாக இருக்காது என்று கருதுகிறார்கள் விளையாட்டு வீரர்கள். எனவே இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தவிர்க்க விளையாட்டு மைதானங்களை பிற நிகழ்ச்சிகளுக்காக கொடுக்கக் கூடாது. இந்த விஷயத்தில் உதயநிதி கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்து.
பிரபல டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான முரளிதர ராவ் கூறும்போது, “டேபிள் டென்னிஸ் விளையாட்டைப் பொறுத்தவரை தமிழகம் பல வீரர்களை உருவாக்கி உள்ளது. சரத் கமல், சத்யன் உள்ளிட்ட பல வீரர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மற்ற விளையாட்டுகளுக்கெல்லாம் தனி ஸ்டேடியம் இருக்கிறது. டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கு மட்டும் ஸ்டேடியம் இல்லை. இவ்விளையாட்டுக்கென தனி ஸ்டேடியத்தை உருவாக்கினால் தமிழ்நாட்டில் மேலும் பல டேபிள் டென்னிஸ் வீரர்கள் உருவாவார்கள்” என்றார்.
தடகள பயிற்சியாளரான டெர்ரிக் கூறும்போது, “பல பள்ளிகளில் பி.டி. மாஸ்டர்களை சரியாக பயன்படுத்துவதில்லை. மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிப்பதற்கு பதில் அவர்கள் சரியாக முடி வெட்டுகிறார்களா, நகம் வெட்டுகிறார்களா, பள்ளிக்கு முழு சீருடையுடன் வருகிறார்களா என்று கண்காணிக்கவே பி.டி. மாஸ்டர்களை பயன்படுத்துகிறார்கள். பி.டி. வகுப்புக்கான நேரத்தை கேட்டு வாங்கி மற்ற பாடங்களை நடத்துகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். பிடி வகுப்புகளில் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள்.
தமிழகத்தில் தடகள வீரர்களுக்காக நேரு விளையாட்டு அரங்கம் உட்பட மொத்தம் 4 சின்தடிக் ஆடுகளங்கள் மட்டுமே உள்ளன. சர்வதேச போட்டிகள் பலவும் சின்தடிக் ஆடுகளங்களில் நடத்தப்படுவதாஅல் சென்னையில் மேலும் ஒரு சின்தடிக் விளையாட்டு அரங்கை உருவாக்க வேண்டும், தமிழகத்தில் பல சின்தடிக் ஆடுகளங்களை உருவாக்க வேண்டும் என்பது தடகள வீரர்களின் கோரிக்கையாக உள்ளது. சென்னையில் உள்ள ஒரே சின்தடிக் ஆடுகளமான நேரு விளையாட்டு அரங்கம், கால்பந்து போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுவதால், கால்பந்து போட்டிகள் நடக்கும்போது தங்களால் பயிற்சி பெற முடியவில்லை என்றும் அவர்கள் புகார் கூறுகின்றனர். இந்த குறையை உதயநிதி ஸ்டாலின் முதலில் நீக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை.