நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி நிறைவடைகிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இது வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக, அலுவலக பரிந்துரை குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில், வரும் 23-ம் தேதியோடு குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
டிச.27-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகத்தில் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
‘நம்ம ஸ்கூல்’ திட்டம் – முதல் நாளில் ரூ.50 கோடி நிதி குவிந்தது
‘நம்ம ஸ்கூல் திட்டத்துக்கு முதல் நாளிலேயே ரூ.50 கோடி நிதி வசூலாகி உள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பழைய மாணவர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் என சமூக அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்கள் ஆகியோரை இணைத்து அவர்கள் மூலம் சமூக பொறுப்புணர்வு நிதி என்னும் சி.எஸ்.ஆர். நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் நபராக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை வழங்கினார். இந்த திட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பாக பெருந்தொகையை வழங்கினார்கள். மொத்தம் ரூ.50 கோடியே 69 லட்சத்துக்கான காசோலையை மேடையில் வைத்து 12 நிறுவனங்களின் அதிபர்கள் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.
சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் மோடி யோசனை
சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி இரண்டு திட்டங்களை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்திய அரசு எழுதிய கடிதத்தை அடுத்து 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்களுக்கான ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்த சூழலில், சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.