No menu items!

எடப்பாடி பழனிசாமி Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

எடப்பாடி பழனிசாமி Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

டிராக் பேண்ட், ஜெர்க்கின் என்று காலையில் வாக்கிங் போக பயன்படுத்திய உடையோடு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“என்ன இது திடீரென்று வாக்கிங் கோலம்?”

“அரசியலில் இது வாக்கிங் காலம். ஒரு பக்கத்தில் ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் தானும் சேர்ந்து நடக்கப் போவதாக கமல் அறிவித்துள்ளார். இன்னொரு பக்கம் ஏப்ரல் மாத்தில் இருந்து நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அதனால்தான் நானும் வாக்கிங் மோடுக்கு மாறிவிட்டேன்.”

”அண்ணாமலை எதற்காக திடீரென நடைப்பயண திட்டத்தை அறிவித்திருக்கிறார்?”

“கட்சி மேலிடத்தின் எதிர்ப்பை தணிக்கத்தான் என்கிறார்கள் அவரது எதிர்ப்பாளர்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்ற அவரது பேச்சை கட்சியில் உள்ள பலரும் ரசிக்கவில்லை. இப்படியே தொடர்ந்து பேசினால் அதிமுகவின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிவரும். இதனால் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டு அவமானப்படும் படியான தோல்வியை சந்திப்போம் என்று அண்ணாமலையின் எதிர்ப்பாளர்கள் டெல்லியில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் தொண்டர்களை சந்திக்காமல் சமூக வலைதளங்களிலேயே கட்சியை நடத்துகிறார் என்ற புகாரையும் தட்டி விட்டிருக்கிறார்கள். இந்த புகாரில் இருந்து தப்பிக்கவும், டெல்லி தலைமையை குளிர்விக்கவும்தான் அண்ணாமலை இந்த நடைப்பயணத்துக்கு திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் காவிக் கட்சிக்காரர்கள்.”

“அவர் கட்டியிருக்கும் வாட்ச்சைப் பற்றி ஏதும் கேள்விப்பட்டாயா?”

‘மத்திய பாஜக அரசு ரஃபேல் விமானத்தை வாங்கியபோது அந்நிறுவனம் 500 வாட்ச்களை பரிசாக கொடுத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் அண்ணாமலையின் கையில் இருக்கிறது. பாஜக தலைவர்களின் மனம் கவர்ந்தவர்களில் ஒருவர் என்பதால் அண்ணாமலைக்கு அந்த வாட்ச்களில் ஒன்றை அவர்கள் பரிசாக கொடுத்திருக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில் தேவையில்லாமல் அந்த வாட்ச்சால் தமிநாட்டில் ரஃபேல் விமானத்தைப் பற்றிய விவாதத்தை அண்ணாமலை தொடங்கிவிட்டார் என்று அவரது எதிர்பாளர்கள் கூறிவருகிறார்களாம்.”

“பரிசாக கொடுத்திருக்கிறார்கள் என்கிறாய். அவர் விலை கொடுத்து வாங்கியது என்கிறாரே?”

“அப்படிதானே அவர் சொல்லியாக வேண்டும்.”

“வீணாக ஒரு பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார் போல”

“அந்தப் பிரச்சினையை பெரியதாக்கியதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியையும் திமுக தலைமை கடிந்துக் கொண்டதாக செய்தி இருக்கிறது”

“என்னவாம்?”

“அண்ணாமலை வாட்ச் பற்றி செந்தில் பாலாஜி கேள்விகள் எழுப்பியிருந்தார். இது நமக்கு தேவையில்லாதது என்று தலைமை கூறியிருக்கிறது. செந்தில் பாலாஜி கேட்டதால் பாஜகவினர் திமுகவினர் சொத்துக்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். இது எதற்கு என்று தலைமை கேட்டிருக்கிறது”

“செந்தில் பாலாஜி என்ன சொன்னாராம்?”

“இப்படியெல்லாம் பேசினால்தான் அண்ணாமலை அடங்குவார்னு சொல்லியிருக்கிறார். ஆனால் தலைமை ரசிக்கவில்லை என்கிறார்கள்”

“சரி, புதிய அமைச்சர் சின்னவர் எப்படியிருக்கிறாராம்?”

” ஃபைல் பார்த்துக் கொண்டிருக்கிறார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பாக அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நடத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் அரசின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் கலந்து கொண்டார். இவர் முதல்வரின் இலாகாக்களில் சில துறைகளை கவனித்து வரும் செயலாளர். உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதயச்சந்திரன் அவரை வழி நடத்துவார் என்று கோட்டை வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்”

“சிறப்பு. திமுகவுல வேற நியூஸ் இருக்கா?”

”திமுகவைப் பற்றி முக்கியமான நியூஸ் சொல்றேன் கேட்டுக்குங்க…தமிழக அமைச்சரவையில் இருந்து விலக விருப்பம் தெரிவித்திருக்கிறாராம் துரைமுருகன்.”

”என்னாச்சு. ஏதாவது அப்செட்டா?”

”இல்லை. வயது ஆகிவிட்டது. முன்பு போல் செயல்பட முடியவில்லை, அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று முதல்வரிடம் கூறியிருக்கிறார்.”

“இதற்கு முதல்வரின் ரியாக்‌ஷன் என்ன?”

“‘உங்கள் உடல்நிலை பற்றி எனக்கும் தெரியும். இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுமையாக இருங்கள். அதற்காகத்தான் உங்களுக்கு எளிதான துறை கொடுத்தேன்’ என்று கூறி துரைமுருகனை திருப்பி அனுப்பியுள்ளார்.”

”உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறாரே?”

“கட்சியின் சீனியர் அமைச்சர்கள் பலரும் நேருவின் இந்த பேச்சை ரசிக்கவில்லை. ஏற்கெனவே வாரிசு அரசியல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நேரத்தில் இப்படி பேசி விமர்சனங்களை மேலும் வரவேற்க வேண்டுமா என்று முணுமுணுத்திருக்கிறார்கள்.”

“திடீர்னு கோவை செல்வராஜ் திமுகவுல சேர்ந்திருக்கிறாரே… அது மாதிரி இன்னும் நிறைய பேர் திமுகவுல சேருவாங்கனு சொல்றாங்களே..?”

“ஆமாம். அதுக்கான முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. திமுகவில் உள்ள முன்னாள் அதிமுகவினருக்கு ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளது. தங்களின் பழைய நட்பையும், செல்வாக்கையும் வைத்து அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பிரமுகர்களை திமுகவுக்கு இழுக்க வேண்டும் என்பதே அந்த அசைன்மெண்ட். இதன்மூலம் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்ட எல்லா தரப்பையும் கிட்டத்தட்ட கரைத்து விட வேண்டும் என்று திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, சேகர்பாபு, செல்வகணபதி ஆகியோர் இதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.அதேசமயம் தங்க தமிழ்ச்செல்வன் போன்ற முன்னாள் அதிமுகவினர் கட்சி நமக்கு எதுவும் செய்யவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்.”

“ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்துகொள்ளப் போவதாக கமல் அறிவித்திருக்கிறாரே?”

“வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க கமல் விரும்புகிறார். திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தும்போது தனக்கும் சேர்த்து அவர்கள் சீட் வாங்கித் தரவேண்டும் என்பதுதான் கமலில் எதிர்பார்ப்பு. ஒருபக்கம் தனக்காக காங்கிரஸ் பேசினால் மறுபக்கம் திமுக தலைமையிடம் உதயநிதி ஸ்டாலின் தனக்காக பேசும் என்று கமல் எதிர்பார்க்கிறார். இதையெல்லாம் மனதில் வைத்துதான் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கமல் பங்கேற்கிறார் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமுகர்கள்.”

“நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சி.வி.சண்முகம் கூறி இருக்கிறாரே?”

“அவர் அதை மட்டும் சொல்லவில்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுமாறு திமுகவுக்கு பாஜக நெருக்குதல் கொடுக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை டி ஆர் பாலு சந்திக்கும் போது அவர்கள் இதைத்தான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்களாம். இந்த செய்தி ராஜ்யசபா எம்பியான சி.வி.சண்முகம் காதில் விழ, அதைப்போட்டு அவர் உடைத்திருக்கிறார்.”

“சிவி சண்முகம் பேசுனதுக்கு பாஜகவுல என்ன ரியாக்‌ஷன்”

“அவங்க இதை எதிர்பார்க்கல. பாஜக சரிபட்டு வரலனா கழட்டிவிடவும் எடப்பாடி தரப்பு நினைக்கிறது என்பதைதான் சண்முகம் பேச்சு காட்டுகிறது என்று கமலாலயத்தில் பேசியிருக்கிறார்கள். இதை அண்ணாமலைக்கு எதிராக திருப்பி விட்டு மேலிடத்துக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள். அதிமுகவை அண்ணாமலை சரியாக வைத்துக் கொள்ளாததனால் அதிமுக கூட்டணி போய்விடும் என்று பாஜக மேலிடத்தை பயமுறுத்தியிருக்கிறார்கள்”

”எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துதான் சி.வி.சண்முகம் அப்படி பேசினாரா?”

”ஆமாம். இது எடப்பாடியின் வியூகம் என்கிறார்கள். அதிகம் பேசும் அண்ணாமலையை அழுத்தி வைக்க சி.வி.சண்முகம் பேச்சு உதவும் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள். சமீபத்திய கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினருக்கு ஆதரவாய் பேசியதையும் கவனித்துப் பாருங்கள். கூட்டிக் கழிச்சா கணக்கு சரியா வரும்”

“நீ அரசியல் கணக்கெல்லாம் அபாரமா போடுற. தேமுதிக பிரமுகர்கள் ஏதோ மன வருத்தத்தில் இருப்பதாக தகவல் வருகிறதே?”

“பிரேமலதாவும், சுதீஷும் கொஞ்ச நாட்களாக கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுவதில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு. இதனால் வேறு கட்சிக்கு மாறிவிடலாமா என்றுகூட இதுபற்றி பிரேமலதாவையே தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். அவர்களை பொறுமையாக இருக்கச் சொன்ன பிரேமலதா, நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு மீண்டும் அரசியல் உலகில் முக்கியத்துவம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் நிர்வாகிகளுக்குதான் அதில் நம்பிக்கை இல்லை.”

ஜெ.தீபா திடீரென்று ஆடியோ வெளியிட்டு பரபரப்பு கிளப்பியிருக்கிறாரே?”

“ஆமாம் எல்லாம் எடப்பாடி தரப்பின் ஆலோசனையாம். சசிகலாவுக்கும் ஓபிஎஸ்க்கும் செக் வைக்க தீபாவை எடப்பாடி தரப்பு பயன்படுத்துகிறது என்று அதிமுகவினர் கூறுகிறார்கள். தேர்தல் நேரத்தில் இன்னும் அதிகமாய் தீபாவை பார்க்கலாம்”

“அவருடன் அவர் மாப்பிள்ளையும் வருவாரா? அவருக்கும் வாழ்த்து கோஷம் போட்ட வீடியோவையெல்லாம் பார்த்தோமே”

“உங்களுக்கு எல்லாமே கிண்டல்தான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...