பள்ளி கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்க கல்வி அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்திற்கு டி.பி.ஐ. என்று பெயர் இருந்து வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவும் அங்கு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் நடந்த நிகழ்ச்சியில்
பள்ளி கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார். இந்நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
பரந்தூர் விமான நிலையம் – அமைச்சர்கள் நாளை ஆலோசனை
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை நடத்துக்கிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சர்கள் குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை நடக்கிறது. இதில் பரந்தூர் விமான நிலையம் அமையும் 13 கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
ஆளுநர் மாளிகையில் விழுந்த பலூன்
கிண்டி ஆளுநர் மாளிகையில் வானிலிருந்து பறந்து வந்து விழுந்த பலூனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ஆளுநர் மாளிகைக்குள் பலூன் போன்றதொரு மர்ம பொருள் காற்றில் பறந்து வந்து விழுந்தது. இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பிரிவு போலீஸார் மற்றும் கிண்டி போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் பிரிவினர் சென்று சோதனை நடத்தினர்.
ஆளுநர் மாளிகையில் விழுந்தது, வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட சென்சார் பொருத்திய பலூன் என்றும், அது காற்றின் வேகம் குறைந்ததால் ஆளுநர் மாளிகை மைதானத்தில் விழுந்ததும் தெரியவந்தது. அதன் பிறகே பரபரப்பு அடங்கியது.
பதவியில் இருந்து விலக வேண்டுமா? – எலன் மஸ்க் கருத்துக் கணிப்பு
ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்று மஸ்க் கூறியிருந்தார். அந்த வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் தலைமைப் பதவியில் தொடர வேண்டுமா என்ற எலான் மஸ்க்கின் கேள்விக்கு இதுவரை 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் ‘இல்லை’ என்றும் பதில் அளித்துள்ளனர்.