No menu items!

காசி தமிழ் சங்கமம் – கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்

காசி தமிழ் சங்கமம் – கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்

ராஜ்ஜா

2

யிரத்து முன்னூற்று எழுபது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தினுள் நுழையும் போது மணி மாலை ஐந்து. எங்கு பார்த்தாலும் வரவேற்புப் பலகைகள். காசி தமிழ் சங்கமம் உங்களை வரவேற்கிறது என்பதை தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் எழுதியிருந்தார்கள்.

லஷ்மண் தாஸ் விருந்தினர் மாளிகையில், நான்காம் தளத்தில் அறை எண் 507 மாலனுக்கும், 509 எனக்கும் என் மனைவிக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு பெரிய கூட்டுக் குடும்பமே சௌகரியமாக இருக்கலாம். எல்லா வித வசதிகளையும் கொண்டவை. ஏ.சி.யையும் சரி, ஃபேனையும் சரி – எதையும் நாங்கள் உபயோகிக்கவில்லை. விசாலமான பின்புற ஜன்னல்களை திறந்தாலோ, உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவ்வளவு குளிர். அப்போது மாட்டிய கம்பளி ஆடைகள். மறுநாள் காலை குளிக்கச் செல்லும் வரை உடம்பை ஒட்டியே இருந்தன.

எங்களை எங்கள் அறைகளில் விட்டுச் சென்ற மீராவும், பிரத்தியூஷீம் மறுபடி ஆறரை மணிக்கு வந்து சேர்ந்தார்கள். “கங்கை நதியை தரிசித்து வரலாம் வாங்கள்” என்றார்கள்.

தரைத்தளத்தில் எங்களுக்காக பெரியதொரு கார் நின்றது. “ரொம்ப தூரமோ?” என்றார் மாலன். “இல்லை மிக அருகில்தான்,” என்றார் பிரத்தியூஷ். “அப்புறம் என்ன? நடந்தே போகலாமே!” என்றேன் நான். “இல்லை…இல்லை… உங்களை எங்கும் நடத்தி அழைத்து செல்லக்கூடாது என்பது உத்தரவு,” என்றார் மீரா. என் மனைவி பெரியநாயகியோ என்னைப் பார்த்து ஒரு மௌனப் புன்னகையை உதிர்த்தாள். “உன் காட்டில் மழை,” என்று அதற்கு அர்த்தம். “உன் கடும் உழைப்பிற்கு கிடைத்த பலன்,” என்றும் பொருள் கொள்ளலாம்.

கங்கைக் கரையின் படித்துறையில் கும்பமேளா. எங்கெங்கிருந்தோ மக்கள் வெள்ளமென திரளுவது கங்கை நதியின் தரிசனம் காணத்தானே. “ஏன் இந்த தரிசனம் பகலில் கிட்டாதா?” என நான் கேட்க, மாலனோ, “கிட்டாது. இரவு வேளை கார்த்திகை மாதம் கங்கை நதி தரிசனம் காண ஆயிரம் கண்கள் போதாது,” என்றார்.

எங்களுக்கென்று தனியொரு விசைப்படகு ஏற்படாகி இருந்தது. அதை செலுத்துபவர் ஒருவர். எங்கள் ஐவருக்கும் பாதுகாவலர் ஒருவர். விசைப்படகு நதியை கிழித்துச் செல்ல, என் காதுகளில் “கங்கை நதிப் புறத்து கோதுமைப்பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்,” என்ற ‘ஏக் பாரத்’ வரிகள் எங்கிருந்தோ என் காதுகளுக்கு மட்டும் கேட்டன. மாலனின் மனதிலும் ஓடியிருக்கும். என்னைப்போன்றே அவரும் பாரதி பக்தர் அல்லவா!

படகு மெதுவாகவே செல்லச் செல்ல, ‘காட்’ என்று அழைக்கப்படும் கட்டங்கள் எண்பத்து எட்டையும் காண முடிந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் ஐந்து பூசாரிகள், கண்ணைப் பரிக்கும் மின் ஒளி விளக்குகளின் கீழ் நின்று கங்கை அன்னைக்கு தீபாராதனை செய்ய, மேளதாளங்கள் காதுகளை கிழிக்கும் அளவிற்கு போக, எங்களுக்கோ காது கொள்ளா, கண் கொள்ளா காட்சி. நம்ம ஊர் பூசாரிகள் மேல் சட்டை போடாமல். அவர்கள் அங்கி போன்ற உடை அணிந்தபடி. குளிரும் காரணமாக இருக்கலாம். இங்கே டும்…டும்…டும்…மேளம். அங்கே டர்…டரு…டரு மேளம். அதிக வித்தியாசம் ஏதுமில்லை. இதைத்தான் ‘கங்கா ஆர்த்தி’ என்கிறார்கள்.

நறுமணப் புகையும், மலர்களின் வாசமும் நம் மூக்கைத் துளைக்க, எங்கிருந்தோ எரியும் பிணவாடையும் சேர்ந்துகொள்கிறதே. ‘தசாஸ்வமேகா காட்’ என்று நினைக்கிறேன். அங்கே பூஜையும் புணஸ்கரணங்களும் நடக்க, அதன் பக்கத்தில் இருக்கும் மணிகர்னிகா கட்டத்தில் மூன்று பிணங்கள் பக்கத்தில் பக்கத்தில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த எனக்கு, எங்கள் ஊர் கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாசல் அருகில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் – ‘இன்று இவர், நாளை நீங்கள்” ஞாபகத்திற்கு வந்தது.

ஆராதனை மிகவும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த கட்டத்தின் மிக அருகில் படகினை செலுத்தி கால் மணி நேரமாவது தரிசனம் காண வைத்தார் படகோட்டி. மாலன் சிறந்த பக்திமான். என் மனைவியோ கோயில் பூசாரிக்கும் ஒரு படி மேலே. நானோ ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற கொள்கை கொண்டவன். பல கட்டங்களின் தரிசனம் கண்டு, அஸ்ஸி கட்டத்தை மீண்டும் அடைந்த போது மணி எட்டரையைத் தாண்டியிருந்தது.

எங்கெங்கோ தோணியிலும், படகிலும் பிரயாணம் செய்திருந்தாலும், கங்கை அன்னையின் மடியில் ரெண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்தது பிரமிப்பாகத்தான் இருந்தது.

விருந்தினர் மாளிகையினுள் நுழைய மீண்டும் ஒரு அரை மணிநேரம். கார் ஓட்டுனர் பாவம் என்னதான் செய்வார், மக்கள் வெள்ளம் நேரம் காலம் பாராது தெருவில் ஓடினால்!

விருந்தினர் மாளிகையின் உணவகம் எங்களுக்காக விசேஷமாக காத்திருந்தது. சப்பாத்தி தஹி (தயிர்). சப்பாத்தியை பிட்டு பிட்டு தஹியில் துவைத்து துவைத்து சாப்பிடலாம், எவ்வளவு வேண்டுமானாலும். கஷ்டகாலமடா சாமி!

பெரியநாயகியின் முகத்தில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. “தினமும் மீன் குழம்பு வேண்டும், கறிக் குழம்பு வேண்டும் என்பாயே! ஊர் போய் சேரும் வரை மரக்கறி தான். வேறவழி,” என்று நினைத்ததில் ஒரு வகை மகிழ்ச்சி. “காசி போக வேண்டும்… காசி போக வேண்டும், என்று நினைத்தே பல காலங்கள் கழிந்தாலும், இப்போது பல்கலைக்கழகத்தின் செலவிலேயே வந்துவிட்டோமே,” என்று நினைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வகையான மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓட தூக்கணாம் பாக்கம் எங்களை இருகரம் தழுவி அரவணைத்துக் கொண்டது.

சொன்னபடியே மீராவும், பிரத்தியூஷீம் மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் ஆஜர். நாங்களும் தயாராகத்தான் இருந்தோம். அதிகாலையில் காசி விஸ்வநாதரையும், அன்னபூர்ணா தேவியையும் தரிசிக்க வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி.

கார் பறந்தது. அந்த அதிகாலை வேளையில் காசி தெருக்கள் மக்களை தரிசித்தன. கார் நின்றது. அதற்கு மேல் கார் போக அனுமதி இல்லை. காசி விஸ்வநாதர் கோயில் தெரு. நடந்து செல்ல செல்ல மனமோ பூபாள ராகம் இசைத்தது. இரு பக்கங்களிலும் கடைகள்தான். பலருக்கு இங்கு ஜீவாதாரமே வியாபாரம்தானோ.

திடீரென்று ஒரு சந்து வந்தது. கோயில் வந்துவிட்டது என்றனர். தமிழ்நாட்டில் பெரிய்ய பெரிய்ய கோயில்களாக பார்த்த கண்களுக்கு, சந்தினில்  கோயில் இருப்பதை ஏற்க மறுத்தது. ‘மூர்த்தி சிறுசாக இருந்தாலும் கீர்த்தி பெரிசு போல’ என்றது மனம்.

சந்து சந்தாக போய்க் கொண்டிருந்தோம். மாலன் மட்டும் ஒவ்வொரு சந்தினில் நுழையும் போதும், தனது இருகைகளை இரு புரங்களிலும் நீட்டி இரு சுவர்களையும் ஒரே சமயத்தில் தொட்டு, “படித்திருக்கிறேன். அவ்வளவு குறுகிய சந்துகள் என்று. நேரில் பார்க்கிறேன்,” என்றார்.

சந்து பொந்தெல்லாம் சென்று, பின்னர் ஒரு இருபது நிமிடங்களுக்குப் பிறகு காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கும் இடம் வந்தது. பக்திமான்கள் தங்கள் வீடுகளில் கோயில் வைத்திருப்பார்களே, அதுகூட சற்று பெரியதாய் இருக்கும். அதுவும் இவரை நேருக்கு நேர் சந்திக்க முடியாது. குனிந்துதான் பார்க்க வேண்டும்.

மலர்க்குவியல்களுக்கு மத்தியிலே சற்றே தலை நீட்டிப் பார்க்கும் சிவலிங்கம் அவர். ருத்ராட்ச பூஜை செய்ய வேண்டும் என்று மூன்று டிக்கெட்டுகளை எடுத்தார் மாலன். வேறு வழி இல்லாமல் நானும் உட்கார்ந்து பூசாரி செய்யச் சொன்னதையெல்லாம் செய்ய வேண்டியதாய்ப் போயிற்று. மூன்று சிவலிங்கத்தின் தலையிலேயும் அத்தர், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்றவற்றை பூசாரியிடம் கை நிறைய வாங்கிப் பூசியபின் (இது சுமார் ஒரு கால் மணிநேரம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்), பூசாரி எங்கள் நெற்றி முழுக்க சந்தனம் பூசி சிகப்புப் பொட்டிட்டு வழியனுப்பி வைத்தார். பூசாரி அதுவரை அங்கு சேர்ந்த பூமாலைகளை பல திசைகளில் தூக்கி வீசினார். பலர் அவற்றை ‘கேட்ச்’ பிடிக்க, ஒன்று மட்டும் பெரியநாயகியின் கழுத்தில் வந்து மாட்டியது. “இது பெரும் பாக்கியம் அம்மா,” என்றார் மாலன். பெரியநாயகியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமல் போனது. ஜெய் காசி விஸ்வநாத்.

அன்னபூர்ணா தேவி அழைப்பு விடுத்தார். அழைப்பில்லாமல் எந்த கடவுளையும், பார்க்க முடியாதே. அன்னையை தரிசித்து விட்டு வெளியே வந்தால், கங்கை நதி அழைத்தது. இரவில் தானே என்னைப் பார்த்தாய், பகலில் வந்து பாரேன் என்று சொல்வதைப் போல இருந்தது.

நதி நோக்கி நடந்தோம். ஏதோ கிரேக்க ஆம்ஃபி தியேட்டருக்குள் நுழைவதைப் போல இருந்தது. இடது பக்கத்தில் ஒரு பெரிய சிலை. கங்கை நதிக்கு உருவம் கொடுத்து இருக்கிறார்களோ என்ற கேள்வி என் மனதில் எழ, நான் வாய் திறப்பதற்குள், “இந்த பிரம்மாண்டமான இடம் புதிதாகக் கட்டப்பட்டது, மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்… இந்த சிலை ராஜமாதா அஹில்யாபாய் ஹோல்கர். இந்தியா முழுதும் நூற்றுக்கணக்கான சிவன் கோயில்களை நிறுவி, தர்ம சாலைகளையும் அமைத்தவர். மராத்தா மாளவப் பேரரசின் மஹாராணி. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி பீடத்தில் இருந்த இந்தப் பெண்மணிதான் எதிரிகளிடமிருந்து காசி விஸ்வநாதரின் கோயிலையும் காபந்து செய்திருக்கிறார்,” என்றார் மாலன். காசிக்கு கிளம்புவதற்கு முன்னே கூகுலில் நுழைந்து நிறையவே படித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

இருபது படிகள் இறங்கிச் சென்றால் கங்கையில் குளிக்கலாம். காலாவது நனைக்கலாம். தலையிலாவது தண்ணீர் தெளித்து சாப, பாவ விமோசனம் பெறலாம். என் மனைவிக்கு ஆசைதான். மாலன் அந்த ஆசையை முறியடித்துவிட்டார்.

“சாரனாத் செல்லலாம். இங்கிருந்து பத்தே பத்து கி.மீ.தான். அங்கேயே போய் சிற்றுண்டி சாப்பிடலாம்,” என்று பிரத்தியூஷ் சொல்ல கோயிலை விட்டு வெளியே வந்தோம்.

கார் டொக்கு…டொடக்கென்று ஒரு வழியாக சாரனாத் போய் சேர்ந்தது. மௌரியப் பேரரசின் சக்கரவர்த்தி அசோகர் கட்டியது. நிறைய நடக்க வேண்டி இருந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த துருக்கியர்கள், அசோகர் கட்டியதையெல்லாம் இடித்துப் போட்டுவிட்டுச் சென்றாலும், புத்தரின் நினைவுச் சின்னங்களாக பல இடிபாடுகள் சீரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தாமெக் ஸ்தூபியை பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் வேலை நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வந்தோம். புத்தர் தனது முதல் பிரசங்கத்தை பிரசவித்த இடமாயிற்றே.

அங்கேயே ஓர் அருங்காட்சியகம். அதில் ஏறக்குறைய ஏழாயிரம் சிற்பங்கள், கலைப்பொருட்கள் உள்ளன. இந்திய தொல்லியல் துறையின் பழைமையான அருங்காட்சியகம். அன்று மாலை காசி தமிழ் சங்கமம் கலை நிகழ்ச்சிக்கு மாலன் தலைமை ஏற்க வேண்டியிருந்தால், பார்க்க வேண்டியவற்றை மட்டும் பார்த்துவிட்டு கார் ஏறிவிட்டோம். அசோகச் சக்கரம், தலையிழந்த புத்தர், அசோகரின் சிங்கமுகத் தூண் எல்லாம் இதில் அடக்கம். எங்கெங்கு பார்த்தாலும் பிரம்மாண்டம்தான். பிரமிப்புதான்.

விருந்தினர் மாளிகை சேர்ந்து மதிய உணவருந்திவிட்டு, – சப்பாத்தி தஹி, சப்பாத்தி சப்ஜி தான் – அறைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்திருப்போம். அவ்வளவுதான், “சார், கார் ரெடி. கலை நிகழ்ச்சிக்கு போகலாம்,” என்று சொல்லியபடி வந்து நின்றனர் மீராவும் பிரத்தியூஷீம்.

தொடரும்

காசி தமிழ் சங்கமம் 1 – மாலனோடு ஒரு யாத்திரை


ராஜ்ஜா, ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழியாக்கம், புத்தக விமர்சனம் எழுதும் இரு மொழி எழுத்தாளர். நாற்பது ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராக புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற இவர் இதுவரை ஆங்கிலத்தில் 35 நூல்களும், தமிழில் 17 நூல்களும் எழுதியுள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...